TNPSC Thervupettagam

வேகம் எடுக்கிறது இந்திய ரியல் எஸ்டேட்!

February 26 , 2024 148 days 167 0
  • இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை அமலுக்கு வந்த பிறகு வேலைவாய்ப்பும் தனிநபர் வருமானமும் அதிகரித்தது. இதனால், நம் நாட்டு பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்தியாக ரியல் எஸ்டேட் விளங்குகிறது. குறிப்பாக, நகரமயமாக்கமும் தனிநபர் வருமானமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய பொருளாதாரத்தில் வீட்டு வசதித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 2020-ல் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
  • இதனால் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ரியல் எஸ்டேட் துறை பெரும் பின்னடைவை சந்தித்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா தாக்கத்திலிருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டன. ஆனாலும் ரஷ்யா-உக்ரைன் போர், பணவீக்கம், மூலதன செலவு அதிகரிப்பு என உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
  • இத்தகைய நெருக்கடிக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டி வருகிறது. இதுபோல இந்திய ரியல் எஸ்டேட் துறை, 2023-ல் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளது. இந்த ஆண்டில் புதிய கட்டுமான திட்டங்கள் கணிசமான அளவில் அறிமுகம் செய்யப்பட்டன. குடியிருப்புகளின் விற்பனையும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியை எட்டியது.
  • நாடு முழுவதும் 2023-ம் ஆண்டின் முடிவில், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய 7 முக்கிய நகரங்களில் புதிய குடியிருப்புகள் விற்பனை, 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் 3 லட்சத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல அலுவலகம் மற்றும் வர்த்தக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள், காலி மனைகள் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

2022-ஐ விட 91% அதிகம்:

  •  இதுவரை கிடைத்த தகவலின்படி, 2023 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் 1,96,227 குடியிருப்புகள் விற்பனையாகி உள்ளதாகவும் இது கடந்த 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 91% அதிகம் என்றும் இத்துறை சார்ந்த ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல் தெரிவித்துள்ளது.
  • குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. நடுத்தர விலை பிரிவு குடியிருப்புகள் (ரூ.50 லட்சம் – ரூ.75 லட்சம்) விற்பனையில் ஆதிக்கம் செலுத்தின. அதேநேரம் 2022-ல் (முதல் 9 மாதங்களில்)18% வளர்ச்சிகண்ட சொகுசு குடியிருப்புகள் (ரூ.1.5 கோடிக்கு மேல்) விற்பனை, 2023-ல் 22% ஆக அதிகரித்தது. சொகுசு குடியிருப்பு விற்பனையில் டெல்லி, மும்பை முன்னிலை வகித்தன.
  • இதுபோல, 2022-ல் (9 மாதங்களில்) ரூ.3 கோடிக்கு மேற்பட்ட குடியிருப்புகள் விற்பனை 8,013 ஆக இருந்தது. இது 2023-ல் 83% அதிகரித்து 14,627 ஆகி உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து கட்டுமான நிறுவனங்களும் சொகுசு குடியிருப்பு திட்டங்களை அதிக அளவில் அறிமுகம் செய்து வருகின்றன.
  • கடந்த 2022-ம் ஆண்டு 3-வது காலாண்டுடன் ஒப்பிடும்போது, 2023-ம் ஆண்டு 3-ம் காலாண்டில் 7 முக்கிய நகரங்களில் குடியிருப்புகளின் விலை சராசரியாக 8% முதல் 18% அதிகரித்தது. அதாவது ஒரு சதுர அடியின் சராசரி விலை ரூ.6,105-லிருந்து ரூ.6,800 ஆக அதிகரித்தது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு மட்டுமல்லாமல் தேவை அதிகரிப்பும் இந்த விலை உயர்வுக்கு காரணம் என இத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

2024-ம் ஆண்டிலும் விற்பனை அதிகரிக்கும்:

  •  உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வருகிறது. பணவீக்கமும் கட்டுக்குள் இருந்து வருகிறது. கட்டுமான நிறுவனங்கள் குறித்த நேரத்தில் திட்டங்களை முடித்துக் கொடுக்கின்றன. 2023-ம் ஆண்டில் கடன் வட்டி தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட நிலையில், 2024-ல் கடன் வட்டி 0.6% முதல் 0.8% வரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மற்றும் 3-ம் நிலை நகங்களிலும் குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
  • மேற்கண்ட காரணங்களால் வரும் 2024-ம் ஆண்டிலும் வர்த்தக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான தேவையும் விற்பனையும் தொடர்ந்து அதிகரிக்கும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டில் கரோனா தாக்கத்துக்கு முன்பிருந்த நிலையை ரியல் எஸ்டேட் துறை எட்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • மேலும் ரியல் எஸ்டேட் துறையின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய, முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு குறைவான வட்டியில் வங்கிகள் மூலம் கடன் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இத்துறை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதேநேரம், கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், 7 முக்கிய நகரங்களில் குடியிருப்புகளின் விலை 10% முதல் 15% வரை உயரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜிடிபியில் 7.3%

  • இந்திய ரியல் எஸ்டேட் சந்தை மதிப்பு கடந்த ஆண்டில் சுமார் 40 லட்சம் கோடியாக இருந்தது. இது வரும் 2030-ல் ரூ.83 லட்சம் கோடியாக (1 டிரில்லியன் டாலர்) ஆகவும் வரும் 2047-ல் (100-வது சுதந்திர தினம்) 483 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ரியல் எஸ்டேட் துறையின் பங்கு கடந்த ஆண்டில் 7.3% ஆக இருந்தது. இது வரும் 2047-ல் 15.5 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • வரும் ஆண்டுகளில் 8% வளரும்: 2010 முதல் 2015 வரையிலான காலத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி சராசரியாக 10% ஆக இருந்தது. இது 2015 முதல் 2020 வரையில் 11.2% ஆக அதிகரித்தது. இது 2024 முதல் 2032 வரையில் 8.03% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • 38 ஆயிரம் கோடி முதலீடு: 2023-ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் ரியல் எஸ்டேட் துறையில் ரூ.38 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 27% அதிகம். ஒட்டுமொத்த முதலீட்டில் வெளிநாட்டு முதலீடு 77% பங்கு வகித்தது. உள்நாட்டு முதலீடு இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.9 ஆயிரம் கோடியாகி உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories