- வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் 31 பேரிடம் மாதிரி பெறப் பட்டு நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனை தோல்வி அடைந்திருக்கிறது. இதுதொடர்பான உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கேட்டு சிபிசிஐடி தாக்கல் செய்த மனு பிப்ரவரி 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்த உண்மை இனியாவது வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
- 2022 டிசம்பர் மாதம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சாதி மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை முதலில் காவல் துறை விசாரித்துவந்தது. பிறகு 2023இல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான ஆணையம் இதுதொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது. ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் இதுகுறித்த உண்மை வெளியாவது தாமதமாகிக்கொண்டே செல்கிறது.
- தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகள் மட்டுமல்லாமல், பல்வேறு வகையிலான சாதிய வன்கொடுமைகள் பட்டியல் சாதியினருக்கு எதிராக நிகழ்ந்தவண்ணம் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூரில் உள்ள தமிழ்நாட்டரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலுக்குள் நுழையப் பல ஆண்டுகளாகப் பட்டியல் சாதி மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் கோயில் நுழைவு நடத்தப்பட்டது.
- ஆனால், அதற்குப் பிறகு அந்த நுழைவில் பங்கேற்ற பட்டியல் சாதி மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் கொ.புளியங்குளத்தில் வாகனத்தின் ஒலிப்பான் ஒலிப்பது தொடர்பான வாக்குவாதத்தில் அந்த ஊரைச் சேர்ந்த பட்டியல் சாதி மக்கள் மீது ஆதிக்கச் சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
- தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. 2019க்கும் 2021க்கும் இடைப்பட்ட காலத்தில் தேசிய அளவில் பட்டியல், பழங்குடியினர் ஆகியோருக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பு 9.7%. இது தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் 16.92% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- வேங்கைவயல் வழக்கில், 31 பேரிடம் நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனை தோல்வி அடைந்திருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த சிபிசிஐடி முடிவுசெய்தது. இதுதொடர்பான மனுவை விசாரித்த மாவட்ட எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றம், பிப்ரவரி 12ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்திருக்கிறது.
- வேங்கைவயல் சம்பவம் பட்டியல் சாதி மக்கள் மீது நடத்தப்பட்ட மோசமான வன்முறை. இந்தச் சம்பவம் நடந்த வேங்கைவயலுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் செல்லாதது, அது நடந்த காலகட்டத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது. இன்றும் அந்த விசாரணையில் தொடரும் மந்தநிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அந்த விமர்சனம் இன்னும் உறுதிப்படவே செய்கிறது. சமூக நீதியைக் கொள்கையாகக் கொண்டுள்ள திமுக அரசு, நீதியை நிலைநாட்ட உறுதிபூண வேண்டும்.
- திறமை வாய்ந்த தமிழ்நாடு காவல் துறை, ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் நடந்த சம்பவத்தின் பின்னணியை வெளிக்கொண்டுவருவதில் ஏன் இப்படித் திணறுகிறது எனப் புரியவில்லை. எந்த அரசியல், சாதிச் சார்பும் இல்லாத உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, இந்த அவலத்தின் பின்னணியை அம்பலப்படுத்த வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 01 – 2024)