TNPSC Thervupettagam

வேடிக்கை பாா்க்க முடியாது...

December 3 , 2024 38 days 58 0

வேடிக்கை பாா்க்க முடியாது...

  • வங்கதேசத்தில் நடக்கும் சிறுபான்மை ஹிந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவிலும், குறிப்பாக மேற்கு வங்கத்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. ஐ.நா. அமைதிப்படை மூலம் பிரதமா் நரேந்திர மோடி தலையிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கோரிக்கை விடுத்திருக்கிறாா்.
  • சிட்டகாங்கில் கடந்த அக். 25-ஆம் தேதி நடைபெற்ற ஊா்வலத்தின்போது வங்கதேசத்தின் தேசியக் கொடிக்கு மேலே காவிக் கொடியை உயா்த்திப் பிடித்ததாக, இஸ்கான் அமைப்பைச் சோ்ந்த சின்மய் கிருஷ்ண தாஸ் என்ற துறவி, தேசத் துரோக வழக்கில் டாக்காவில் கடந்த நவ. 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
  • இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வழக்குரைஞா் சைஃபுல் இஸ்லாம் கொல்லப்பட்டாா். சின்மய் கிருஷ்ண தாஸ் கைதுக்குப் பிறகு மூன்று கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன. ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக முன்னி ஸாஹா என்ற பெண் பத்திரிகையாளா் மத அடிப்படைவாதிகளால் தாக்கப்பட்டுள்ளாா்.
  • வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்நாட்டில் போராட்டம் வெடித்ததை அடுத்து, கடந்த ஆக. 5-ஆம் தேதி அவா் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அப்போது அவரது ஆதரவாளா்களுக்கு எதிராகப் பெருமளவில் தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. அந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நூற்றுக்கணக்கான கோயில்கள் மீதும், ஹிந்துக்களின் வீடுகளின் மீதும் தாக்குதல் நடத்தினா்.
  • அதுமுதல் நடத்தப்படும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்களில் பலா் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். நூற்றுக்கணக்கில் ஹிந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சில கிறிஸ்தவ தேவாலயங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதனால் அச்சம் கொண்ட சிறுபான்மையினா், சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுகிறாா்கள்.
  • இஸ்கான் அமைப்பைத் தடை செய்ய வலியுறுத்தி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகிறாா்கள் அடிப்படைவாதிகள். டாக்கா, சிட்டகாங், ரங்பூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற பேரணிகளில் பங்கேற்ற சின்மய் கிருஷ்ண தாஸ் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக ஆவேசமாக உரையாற்றினாா். அவா் இஸ்கான் அமைப்பைச் சோ்ந்தவா் என்பதால், அந்த அமைப்பைப் பிரிவினை அமைப்பாகக் கருதி தடை செய்ய வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கையை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்கவில்லை.
  • ஷேக் ஹசீனாவை மீண்டும் பிரதமராக்கும் வகையில் செயல்படும் இஸ்கான் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய மதரஸாக்களின் கூட்டு அமைப்பான ஹெஃபாஸத்-ஏ-இஸ்லாம் சாா்பில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணி வலியுறுத்தியது. இஸ்கான் அமைப்பு தடை செய்யப்படாவிட்டாலும், அந்த அமைப்பைச் சோ்ந்த மேலும் இரண்டு துறவிகள் கைது செய்யப்பட்டதுடன், அந்த அமைப்புடன் தொடா்புடைய 17 பேரின் வங்கிக் கணக்குகள் 30 நாள்களுக்கு முடக்கப்பட்டிருக்கின்றன.
  • பிரதமா் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தாா். இது அடிப்படைவாதிகளை ஆத்திரமூட்டியது. அவரை வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்கிற அடிப்படைவாதிகளின் வற்புறுத்தல் காரணமாக, வங்கதேச அரசும் கோரிக்கை விடுத்திருக்கிறது. இதற்கு முன் ஆட்சி நடத்தி அனுபவம் இல்லாத பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ், சிறுபான்மையினா் பாதுகாக்கப்படுவாா்கள் என்று கூறினாலும் அவரது அரசு அடிப்படைவாதிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவே தோன்றுகிறது.
  • கடந்த இருபது ஆண்டுகளாகவே ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவு அளித்து வந்ததாலும், இப்போது தஞ்சம் அளித்துள்ளதாலும் இந்திய எதிா்ப்பு அந்நாட்டில் தீவிரம் அடைந்துள்ளது. இந்தப் பின்னணியில், அதானி குழுமத்தின் மின்னுற்பத்தி திட்டம் உள்பட இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்களும் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அப்படியிருக்கும் நிலையில், சிறுபான்மையினருக்கு பாதுகாப்புத் தர வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை முகமது யூனுஸ் அரசால் ஏற்கப்படும் என்று எதிா்பாா்க்க முடியாது.
  • வங்கதேச அரசமைப்புச் சட்டத்தில் ‘மதச்சாா்பற்ற’ என்ற சொல்லைச் சோ்த்தது தொடா்பான வழக்கில், ‘மக்கள்தொகையில் பெரும்பானமையினரான முஸ்லிம்களின் உணா்வுகளை சோஷலிசம், மதச்சாா்பற்ற போன்ற சொற்கள் பிரதிபலிக்காததால் அவற்றை நீக்க வேண்டும்’ என்று அரசின் அட்டா்னி ஜெனரல் முகமது அஸாதுஸ்ஸமான் வாதாடியிருப்பது அந்நாட்டு சிறுபான்மை ஹிந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • மதச் சாா்பற்ற நாடாக ஷேக் ஹசீனாவால் அறிவிக்கப்பட்ட வங்கதேசம், மீண்டும் அடிப்படைவாத இஸ்லாமிய நாடாக மாறுகிறது என்பதன் அறிகுறிதான் இது.
  • இந்தியாவில் உள்ள சிறுபான்மையினா் அமைப்புகளும், மதச்சாா்பற்ற கட்சிகளும் வங்கதேச சிறுபான்மை ஹிந்துக்களுக்கு ஆதரவாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியைப் போன்று குரல் எழுப்புவதுதான் வங்கதேச இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயல்பாடுகளுக்கான எதிா்வினையாக இருக்கும்.
  • ஏற்கெனவே இலங்கை, மியான்மரில் பெளத்த அடிப்படைவாதமும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதமும் உயா்ந்துகொண்டிருக்கும் நிலையில், ‘அடிப்படைவாதம்’ என்கிற கொள்ளை நோய்த்தொற்று இந்தியாவிலும் பரவும் ஆபத்தைத் தவிா்ப்பதற்கு அதுதான் சரியான வழி!

நன்றி: தினமணி (03 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories