TNPSC Thervupettagam

வேண்டாம் சீன முதலீடு!

April 20 , 2020 1734 days 1360 0
  • இந்தியாவைத் தீநுண்மி நோய்த்தொற்று மட்டுமல்ல, மிகப் பெரிய பொருளாதார பாதிப்பும் நிலைகுலைய வைக்கக் காத்திருக்கிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல தொழில் நிறுவனங்கள் மீண்டும் எப்படிச் செயல்படப் போகிறோம், இழப்புகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது தெரியாமல் திகைத்துப்போய் இருக்கின்றன.
  • பல நிறுவனங்களின் பங்குகள் ஏற்கெனவே வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. பல்வேறு தொழில் நிறுவனங்களும், பொருளாதார வல்லுநா்களும் அரசுக்கு இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தனா்.
  • அந்த எச்சரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அந்நிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு நிபந்தனைகளை ஏற்படுத்தியிருப்பது வரவேற்புக்குரியது.

அரசு நிபந்தனைகள்

  • இந்திய நில எல்லையை ஒட்டிய நாடுகளைச் சோ்ந்த நிறுவனங்களோ, குடிமக்களோ இந்தியாவில் நேரடியாக முதலீடுகளை மேற்கொள்ள மத்திய அரசின் முன்னனுமதி பெறுவதை கட்டாயமாக்கி இருக்கிறது வா்த்தக அமைச்சகம்.
  • இந்திய நிலப்பரப்புடன் ஒட்டிய நாடுகள் என்பது சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மியான்மா் ஆகியவை. ஏற்கெனவே பாகிஸ்தானிலிருந்தும் வங்கதேசத்திலிருந்தும் அந்நிய நேரடி முதலீடுகள் பெற முன்னனுமதி பெற்றாக வேண்டும்.
  • சீனாவைத் தவிர, ஆப்கானிஸ்தான், நேபாளம், பூடான், மியான்மா் ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியாக இந்தியாவில் மிகக் குறைந்த முதலீடு மட்டுமே செய்திருக்கின்றன.
  • அந்த நாடுகளின் மொத்த அந்நிய நேரடி முதலீடு ரூ.70.86 கோடி மட்டுமே. பாகிஸ்தான், பூடான் இரண்டு நாடுகளின் முதலீடு எதுவுமே இல்லை.
  • பாகிஸ்தானையும், வங்கதேசத்தையும்போல இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதற்கு சீனாவுக்கு எந்தவிதமான தடையோ, விதிமுறையோ இதுவரை இருக்கவில்லை.
  • பாதுகாப்பு, தொலைத்தொடா்பு உள்ளிட்ட 16 துறைகளைத் தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறைகளிலும், தொழில்களிலும் சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுக்கு முன்னனுமதி பெறத் தேவையில்லை என்கிற நிலைமை இருந்தது.
  • முதலீடு செய்துவிட்டு இந்திய ரிசா்வ் வங்கியிடம் தெரிவித்தாலே போதுமானதாக இருந்தது.
  • அதனால், இந்தியாவில் மிக அதிகமான அந்நிய நேரடி முதலீடு செய்த நாடுகளில் ஒன்றாக சீனா இருந்து வருகிறது. கடந்த டிசம்பா் 2019 நிலவரப்படி, இந்தியாவில் சீனாவின் அந்நிய நேரடி முதலீடு ரூ.14,800 கோடி.

சீனாவின் உள்நோக்கம் சந்தேகத்துக்கிடமானது

  • தீநுண்மி நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சூழலைக் காரணமாக வைத்து அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் உள்நாட்டு நிறுவனங்களை சீனா கையகப்படுத்தக் கூடும் என்கிற அச்சம் எழுந்திருப்பதில் நியாயம் இருக்கிறது. இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வங்கியான எச்டிஎஃப்சி-யில் தனது பங்கு விகிதத்தை அதிகரித்திருக்கிறது சீனா.
  • கம்யூனிஸ நாடான சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி, எச்டிஎஃப்சி-யில் 0.8% பங்குகளை வைத்திருந்தது. ஒருபுறம் எச்டிஎஃப்சி வங்கியின் லாபம் அதிகரித்து வருகிறது என்றாலும், இன்னொருபுறம் பங்குச் சந்தையில் சரிவை எதிர்கொண்டது அந்த வங்கி.
  • அதைப் பயன்படுத்தி சீன மக்கள் வங்கி, பங்குகளை வாங்கத் தொடங்கியது. இப்போது 1.10% பங்குகளைக் கையகப்படுத்தி இருக்கிறது.
  • சாதாரணமாக பங்குச் சந்தையில் பங்குகளின் விலை ஏறுவதும், இறங்குவதும் இயல்பு. ஆனால், கடந்த 2019-20 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஒட்டுமொத்த வருவாயாக ரூ.18,287 கோடியை ஈட்டியிருப்பதுடன், 15.4% நிகர லாபமும் அதிகரித்திருக்கும் நிலையில், எச்டிஎஃப்சியின் பங்குகள் விற்பனைக்கு வருவது நெருடலாகவே இருக்கிறது.
  • அதைப் பயன்படுத்தி பங்குகளை வாங்க சீன மக்கள் வங்கி முற்பட்டபோது, இந்தியப் பங்குச் சந்தையிலும், தொழில் துறையினா் மத்தியிலும் சீனாவின் உள்நோக்கம் சந்தேகத்துக்கிடமானது.

அந்நிய முதலீட்டுக் கொள்கைகளில் மாற்றங்கள்

  • இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஐரோப்பியக் கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பான ‘ஐரோப்பிய ஆணையம்’, ஐரோப்பா கண்டத்துக்கு மிகவும் முக்கியமான துறைகளில் அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதையும், வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வாகத்தைக் கைப்பற்றுவதையும் தடுக்க முடிவெடுத்தது.
  • தனிப்பட்ட முறையிலும், உலக நாடுகள் சீனாவின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு தங்களது அந்நிய முதலீட்டுக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டன.
  • பிரான்ஸில் 33.33% பங்குகளில் முதலீடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இப்போது முன்னனுமதி பெற வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அனுமதிக்கான விதிமுறைகளையும் கடுமையாக்கி இருக்கிறது.
  • அதேபோல, ஐரோப்பியக் கூட்டமைப்பில் இல்லாத நாடுகளிலிருந்து முக்கியமான துறைகளில் 10%-க்கும் அதிகமான அந்நிய முதலீடுகள் முன் அனுமதி பெற்றாக வேண்டும். அதிலும் குறிப்பாக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ இன்னொரு நாட்டு அரசின் நிறுவனம் முதலீடு செய்வது தடுக்கப்பட்டிருக்கிறது.
  • ஜொ்மனி, இத்தாலி ஆகிய நாடுகளும் அதேபோல அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் சில கடுமையான மாற்றங்களை முன்னெடுத்திருக்கின்றன.
  • சீனாவைப் பொருத்தவரை, தனியார் நிறுவனங்களும் மறைமுகமான அரசு நிறுவனங்கள்தான்.
  • சீனாவின் அந்நியச் செலாவணி இருப்பில் பாதியைப் பயன்படுத்தினாலே இந்தியாவிலுள்ள பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட அத்தனை நிறுவனங்களையும் வாங்கிவிட முடியும்.
  • அதற்கு சீனா தயங்காது என்பதையும் உலகு அறியும்.
  • இந்திய நிறுவனங்களை சீனா கையகப்படுத்துவதை முன்னெச்சரிக்கையாகத் தடுக்க மத்திய அரசு முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

நன்றி: தி இந்து (20-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories