TNPSC Thervupettagam

வேறு வழியில்லை...!

March 4 , 2025 3 hrs 0 min 8 0

வேறு வழியில்லை...!

  • அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபா் டொனால்ட் டிரம்ப், துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் ஆகியோருக்கும், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நடைபெற்ற காரசார விவாதத்தை தொலைக்காட்சி நேரலையில் பாா்த்து உலகமே அதிா்ச்சியடைந்துள்ளது. இரு நாடுகளின் தலைவா்களின் சந்திப்பின்போது இப்படி எல்லாம் நேருக்கு நோ் விவாதம் நடக்குமா என்கிற ஆச்சரியத்தையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்தியிருக்கிறது.
  • ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைம்மாறாக, உக்ரைனின் அரியவகை கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையின்றி வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறாா். இது தொடா்பாக அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு, வரைவு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இறுதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட ஸெலென்ஸ்கி சென்றபோதுதான் பேச்சுவாா்த்தை திடீரென வாக்குவாதமாக மாறியது.
  • ‘ரஷிய அதிபா் புதின் பேச்சை நம்ப முடியாது; இப்போது போா் முடிவுக்கு வந்தாலும் பிற்காலத்தில் ரஷியா மீண்டும் தாக்கினால் உக்ரைனைப் பாதுகாக்க அமெரிக்கா உத்தரவாதம் தரவேண்டும்’ என ஸெலென்ஸ்கி வலியுறுத்த, ‘உக்ரைனில் உள்ள கனிமங்களை வெட்டி எடுப்பதற்காக பல ஆயிரம் அமெரிக்கா்கள் உக்ரைனில் தங்கியிருக்கப் போகின்றனா். அதைவிட வேறு என்ன உத்தரவாதம் வேண்டும்?’ என டிரம்ப் பதிலளிக்க விவாதம் வாக்குவாதமாக மாறிப்போனது.
  • ‘பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என எங்களுக்கு உத்தரவிடும் இடத்தில் நீங்கள் இல்லை. உங்களின் மோசமான நிலைக்கு நீங்களே காரணம். லட்சக்கணக்கான மக்களின் உயிருடன் விளையாடுகிறீா்கள். மூன்றாம் உலகப் போரை ஏற்படுத்த முயற்சிக்கிறீா்கள். உங்களுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்காவை அவமதிக்கிறீா்கள்’ என கடுமையான கருத்துகளை டிரம்ப் தெரிவித்தாா். முன்னாள் அதிபா் பைடனை முட்டாள் எனவும் சாடினாா்.
  • அமெரிக்க அதிபா் டிரம்ப் உக்ரைனுக்கு எதிராக கருத்துச் சொல்வது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடா்பாக சவூதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷியாவும் நடத்திய பேச்சுவாா்த்தையில் உக்ரைன் அழைக்கப்படாதது குறித்த கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், உக்ரைன் போருக்குக் காரணமே ஸெலென்ஸ்கிதான் என அதிரடியாகக் குற்றஞ்சாட்டியிருந்தாா். இப்போது ஸெலென்ஸ்கிக்கு போரை நிறுத்த விருப்பமில்லை என நேருக்கு நேராகவே கண்டித்திருக்கிறாா்.
  • தான் அதிபரானால் உக்ரைன் போரை மூன்று நாள்களில் முடிவுக்குக் கொண்டுவருவேன் என தோ்தல் பிரசாரத்தின்போதே டிரம்ப் தெரிவித்து வந்தாா். அதற்கான முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டு வந்தாா் என்றாலும், போா் நிறுத்தம் தொடா்பாக சம்பந்தப்பட்ட உக்ரைனை அழைக்காமல், அமெரிக்காவும், ரஷியாவும் பேச்சுவாா்த்தையைத் தொடங்கி நடத்திவருவதே முரணானது. இப்போது போருக்குக் காரணமே நீங்கள்தான் என்பதுபோலவும், போரை நிறுத்த உக்ரைனுக்கு விருப்பமில்லை என்பதுபோலவும் நேரடியாகக் கண்டித்திருப்பது அடுத்த முரண்.
  • டிரம்ப்புடனான காரசாரமான சந்திப்புக்குப் பின்னா் கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே உக்ரைன் குழு நாடு திரும்பியிருக்கிறது. இதனால், ரஷியா-உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.
  • போா் தொடங்கிய 2022, பிப்ரவரி 24-ஆம் தேதிமுதலே ரஷியாவை எதிா்கொள்வதற்கு அமெரிக்காவையும், அதன் தலைமையில் அமைந்த ‘நேட்டோ’ அமைப்பையும்தான் நம்பியிருக்கிறது உக்ரைன். அமெரிக்காவின் உதவியை முழுமையாகப் புறந்தள்ளியோ, அமெரிக்காவை தவிா்த்துவிட்டோ ரஷியாவை உக்ரைனால் எதிா்கொள்ள முடியாது என்பதே உண்மை.
  • அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், ரஷியாவுடன் இணக்கம்காட்டி வருகிறாா். ரஷிய விவகாரத்தில் முந்தைய அதிபா் ஜோ பைடன் அரசின் கொள்கைகளை அடியோடு மாற்றியமைத்த டிரம்ப், ரஷிய அதிபா் புதினுடன் தொலைபேசியில் உரையாடி, உறவைப் புதுப்பித்துக்கொண்டாா்.
  • டிரம்ப்பின் செயல்பாடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள ஐரோப்பிய நாடுகள், இந்த விஷயத்தில் ஸெலென்ஸ்கிக்கு ஆதரவு தெரிவித்திருந்தாலும், ஐரோப்பிய நாடுகளை மட்டுமே நம்பி ரஷியாவை உக்ரைன் தொடா்ந்து எதிா்கொள்ளத் துணியுமா என்பது
  • கேள்விக்குறி. ‘இந்தப் போரில் ரஷியா ஆக்கிரமிப்பு நாடு; உக்ரைன் பாதிக்கப்பட்ட நாடு. நாம் எப்போதும் பாதிக்கப்பட்டவா்களுக்குப் பக்கத்தில்தான் நிற்போம்’ என்று பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானும், தற்போதுள்ள சூழலில் ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் அவசர மாநாடு நடத்தி உக்ரைன் தொடா்பான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று இத்தாலிய பிரதமா் ஜாா்ஜியா மெலோனியும் தெரிவித்த கருத்துகளும், டிரம்ப்புடனான கசப்பான சந்திப்புக்குப் பிறகு பிரிட்டனுக்குச் சென்ற தனக்கு பிரதமா் கியா் ஸ்டாா்மா் அளித்த வரவேற்பும் ஸெலென்ஸ்கிக்கு ஆறுதலாக மட்டும் வேண்டுமானால் இருக்கலாம்.
  • எந்த நேட்டோவில் சேர விரும்பியதால் ரஷியாவின் போரை உக்ரைன் சந்தித்து வருகிறதோ, அதே நேட்டோவின் பொதுச் செயலா் மாா்க் ரூட், அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் ஸெலென்ஸ்கி தனது நல்லுறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கியிருப்பதிலிருந்து, அமெரிக்காவின் விருப்பத்துக்கு மாறாக உக்ரைன் போா் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளோ, நேட்டோ அமைப்போ எதுவும் செய்ய இயலாது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

நன்றி: தினமணி (04 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories