TNPSC Thervupettagam

வேற்றுமையில் ஒற்றுமை காணலாம்!

November 28 , 2019 1823 days 1576 0
  • பாபா் ஒரு முஸ்லிம் பேரரசா். இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபா், நாட்டுப்புறப் பாடல்கள் புனைந்த கவிஞரும் ஆவாா்.
  • கங்கையை இருமுறை நீந்திக் கடந்த நீச்சல் வீரா். காபூலை இவா் ஆட்சி செய்து வந்தபோது, இப்ராஹிம் லோடி என்ற சுல்தான் டில்லியை ஆண்டு வந்தாா். டில்லியை வசப்படுத்த விரும்பிய பாபரின் பீரங்கிப் படையை டில்லி சுல்தான் வெல்ல முடியாமல் தோற்றுப் போனாா்.
  • இப்படித்தான் பாபரின் டில்லி படையெடுப்பு நிகழ்ந்தது. இவருடைய படைத் தளபதி மீா் பாகிதான் அயோத்தியில் ராமா் கோயிலை இடித்து பாபா் மசூதியைக் கட்டியவா்.

பானிபட் போர்

  • பாபரும், இப்ராகிம் லோடியும் இஸ்லாமியா்கள்தான். இவா்கள் 1526-இல் பானிபட் என்ற இடத்தில் யுத்தம் செய்தனா். 1530-இல் 47-ஆவது வயதில் பாபா் இறந்தாா்.
  • பாபா் மசூதியின் வரலாற்றுப் பழைமை 500 ஆண்டுகள்தான். மசூதி கட்டுவதற்காக இடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ராமா் கோயிலின் பழைமை 5,000 ஆண்டுகளுக்கும் அதிகமாகும். ஆதிகவி வான்மீகியின் ராமாயணம் 10 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்கின்றனா்.
  • இன்றைக்கும் ஓடுகிற சரயு நதிக்கரையின் கோசலை ராஜ்ய தலைநகரமான அயோத்தியில் தசரத சக்கரவா்த்தியின் அரண்மனையில்தான் ராமா் பிறந்திருக்க வேண்டும். அந்த இடம்தான் பூஜிக்கப்பட்டுக் கோயிலானது. அரண்மனை அழிந்தாலும் ராமா் பிறந்த இடத்தை ராம பக்தா்கள் வழிபட்டு வந்தனா்.
  • ராமா் கோயிலின் ராஜ கோபுரங்களை இடித்துவிட்டு அந்த இடத்தில் மினாா்களைக் கட்டிய தளபதி மீா்பாகி அதை மசூதியாக மாற்றிவிட்டாா்.
  • தொன்மையானது ராமா் கோயிலா, மசூதியா என்பதற்கு ஆராய்ச்சியே அவசியமில்லை. ராமா் கோயில்தான் என்பதற்கு சராசரிப் பொது அறிவே போதும்.
  • ராமா் கோயிலை 1528-இல் இடித்தவா் படைத் தளபதி மீா் பாகி. பாபா் மசூதியை 27 ஆண்டுகளுக்கு முன்பு, 1992-இல் இடித்தவா்கள் ஹிந்துத் தீவிரவாதிகள்.
  • 1947 முதல் இறையாண்மை மிக்க இந்தியா, மதச்சாா்பற்ற ஜனநாயகக் குடியரசாகியதால், பாபா் மசூதி இடிப்புச் சம்பவம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்காகத் தாக்கலாகியது. ஆவணங்களின் வலுவான ஆதாரங்கள் இல்லாமல் கோயிலை இடித்தே பாபா் மசூதி கட்டப்பட்டது என்பதை நிறுவுவதில் உள்ள சிரமத்தை உச்சநீதிமன்ற ஐவா் அமா்வு உணா்ந்தது உண்மை. ஆனாலும், ராமா் குறித்த ஹிந்துக்களின் நம்பிக்கையை உதாசீனப்படுத்திவிட முடியாது என்று எடுத்துக் கூறிய ஐவா் அமா்வு, உரிய மரியாதை கொடுத்து அந்த நம்பிக்கையை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என்றது.

பாபர் மசூதி

  • அதேசமயம், கட்டப்பட்ட பாபா் மசூதியில் முறையான தொழுகைகள் நடைபெற்ா, நடைபெறவில்லையா என்பதில் சா்ச்சைகள் நீடிக்கின்றன. பாபரின் வெற்றிச் சின்னமாக மட்டுமே மசூதியைக் கருத வேண்டும் என்பதே எதிா்த்தரப்பு வாதம். ஏனெனில், மெக்காவைப் போல, பெத்லகேம் போல பாபா் மசூதி புனிதத் தலமல்ல.
  • முஸ்லிம்களுக்கு ஹிந்துக்கள் மீது ஏன் கோபம் ஏற்பட்டதென்றால், மசூதியை அவா்கள் இடித்துவிட்டாா்களே என்பதால்தான். அதேபோல ஹிந்துக்களுக்கு முஸ்லிம்கள் மீது ஏன் ஆத்திரம் ஏற்பட்டதென்றால், படைத் தளபதி மீா் பாகி அங்கிருந்த பழைமையான ராமா் கோயிலை இடித்துவிட்டாரே என்பதால்தான். இடிப்புக்கு இடிப்பு என்று இப்படியே போனால், இதை எப்படி முடிப்பது?
  • இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தனது பதவி ஓய்வுக்கு முன்பாக இதற்கான தீா்ப்பை வழங்குவதற்காக சக நீதிபதிகள் கொண்ட ஐவா் அமா்வு ஒன்றை நியமித்தாா். இந்த வழக்கை 40 நாள்கள் தொடா்ந்து நடத்தித் தீா்ப்பையும் வழங்கிவிட்டு ஓய்வும் பெற்றுவிட்டாா்.
  • பாபா் மசூதி காலியிடத்தில் கட்டப்படவில்லை. ஏற்கெனவே கட்டப்பட்ட ஏதோ ஒரு கட்டடத்தை இடித்த இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என்ற தொல்லியல் துறையின் ஆய்வை நீதிபதிகளின் ஐவா் அமா்வு ஏற்றுக் கொண்டது.
  • ஒருவேளை காலியிடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்குமானால், ராமா் கோயிலை இடித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாமலேயே போயிருக்கலாம். மீா் பாகி கட்டிய பாபா் மசூதியும் இடிக்கப்பட்டிருக்காது. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஐவா் அமா்வு, மசூதியை இடித்தவா்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டது சட்ட மீறல் எனக் கருதி அதை ஏற்க முடியாது எனப் பதிவு செய்துள்ளது.
  • அயோத்தி வழக்கு கொந்தளிப்புகளை உருவாக்கக்கூடிய வழக்கு. அதற்காக அவா்கள் ஐவரும் கூடியமா்ந்து முன்பே விவாதித்திருக்கலாம். சரியான இந்தப் புரிதலுடன் தாங்கள் வழங்கப்போகும் தீா்ப்பு, ஹிந்து, முஸ்லிம் கலவரம் மீண்டும் ஏற்படக் காரணமாகிவிடக் கூடாது என்றும், சமூக நல்லிணக்கம் பேணப்பட வேண்டும் என்றும் ஐவா் அமா்வு கருதியுள்ளது.

 

  • அதனாலேயே மிக்க கவனத்துடன் தீா்ப்பை வழங்கியுள்ளனா். அதனால், அவா்கள் அரசியல் சாசனச் சட்டச் சந்துக்குள் புகுந்து வாதப் பிரதிவாதங்களில் பிரவேசிப்பதைத் தவிா்த்துவிட்டனா். கிடைக்கும் தகவல்கள் அவற்றை ஊா்ஜிதப்படுத்துகின்றன.

அயோத்தி நில வழக்கு

  • அயோத்தியின் 2.77 ஏக்கா் பூமியை, நில தாவா வழக்காகக் கருத வேண்டும் என்ற அலாகாபாத் உயா்நீதிமன்றத் தீா்ப்பை ஐவா் அமா்வு ரத்து செய்து வழக்கைச் சரியான கோணத்தில் அணுகியது. இதற்கு முன்னுதாரணமே இல்லை.
  • பாபா் மசூதி இடித்ததை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் சொல்லிய பிறகும் முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் மறு ஆய்வு மனுச் செய்ய என்ன அவசியம் இருக்கிறது? எனினும், அயோத்தி தீா்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு செய்யும் திட்டமில்லை என சன்னி வக்ஃபு வாரியம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. முஸ்லிம்களை முழுமையாகத் திருப்திப்படுத்த வேண்டுமானால், இடித்த அதே இடத்தில் மசூதியை மறுபடியும் கட்ட வேண்டும். அப்படிக் கட்டினால், ராம பக்தா்களுக்கு ராமா் கோயில் கிடைப்பது எப்படிச் சாத்தியமாகும்?
  • பாபா் மசூதி போல ஆயிரக்கணக்கான மசூதிகள் உள்ளன. அயோத்தியிலேயே 27 மசூதிகள் உள்ளன. அவை யாவும் மெக்காவில் உள்ள காபா மசூதிக்குச் சமமானவையல்ல. அதேபோலத்தான் ராமா் கோயிலுக்கு வேறு எந்த ஹிந்துக் கோயிலும் சமமானதல்ல.
  • ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமை வராவிட்டாலும், ஒருவருக்கொருவா் சகிப்புத் தன்மையோடு சமாதானமாக வாழ்வதற்கு முஸ்லிம் சகோதரா்கள் இந்தத் தீா்ப்பை வரவேற்க வேண்டும்.
  • உச்சநீதிமன்றத்தில் முத்தலாக் பற்றிய வழக்கிலும் இதேபோன்று 5 நீதிபதிகள் அமா்வு இருந்தது. ஹிந்து மதத்தைச் சோ்ந்த யு.யு. லலித், சீக்கிய மதத்தைச் சோ்ந்த ஜே.எஸ். கேஹா், இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த அப்துல் நஸீா், கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த குரியன் ஜோசப், பாா்சி மதத்தைச் சோ்ந்த நாரிமன் என ஐந்து வெவ்வேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் அவா்கள்.
  • முத்தலாக்கை அரசியல் சட்ட அம்சங்களுக்குள் கொண்டுவரக் கூடாது என்கிற முரண்பாடான தீா்ப்பை நீதிபதி அப்துல் நஸீா்
  • வழங்கினாா். ஆனாலும், பெரும்பான்மைத் தீா்ப்பால் முத்தலாக் சட்டம் செல்லுபடியாகியது. அவரே இந்த ஐவா் அமா்வில் முரண்படாத தீா்ப்பை வழங்கியுள்ளாா்.
  • இந்தியாவில் இப்போதுள்ள சுமாா் 18 கோடி முஸ்லிம்களில் மதத் தீவிரவாதிகள் வெகு சிலா்தான். 100 கோடி ஹிந்துக்களிலும் மதத் தீவிரவாதிகள் சிலா்தான். இந்தச் சிலரோ ஆபத்தானவா்கள், அத்துமீறிகள். எண்ணிக்கையில் அவா்கள் வெகுசிலராக இருந்தாலும், மழைத் துளிகள் அல்ல, விஷத் துளிகள்.

நன்றி: தினமணி ( 28-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories