- 2023ஆம் ஆண்டின் இறுதியில் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சில இளைஞர்கள் நுழைந்து தாக்குதல் நடத்தியது அனைவருக்கும் நினைவிருக்கக்கூடும். இத்தாக்குதலுக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால், நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினையே இளைஞர்கள் இவ்வாறான செயல்பாடுகளில் இறங்க முக்கியக் காரணம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.
- கல்வி, பொருளாதாரம், விண்வெளி, மருத்துவம் எனப் பல்வேறு துறைகளில் இந்தியா வளர்ச்சி கண்டிருந்தாலும், இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினையாக வேலைவாய்ப்பின்மை கருதப்படுகிறது. உண்மையில், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை நிலவரம் எப்படி இருக்கிறது?
சுதந்திரத்துக்குப் பின்
- இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர், நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய துறையாக வேளாண் துறையும், சேவைத் துறையும் இருந்தன. அடுத்துவந்த உலகமயமாக்கல் காலகட்டம், தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகக் காரணமானது. இதனால், இந்தியாவின் பொருளாதாரம் முன்பைவிட வேகமாக வளரத் தொடங்கியது.
- இந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகள் ஏற்பட்டாலும், இன்றும் ஏராளமான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினை இந்தியாவின் கரும்புள்ளியாகவே தொடர்கிறது.
தொடரும் ஏற்றத்தாழ்வுகள்
- தனிநபர் ஒருவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவரது கல்வித் தகுதிக்கேற்ப வேலை பெற முடியாத சூழலே வேலைவாய்ப்பின்மை என வரையறுக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை வேலைவாய்ப்பின்மை என்பது பல்வேறு வகையிலான ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.
- 2017–2018இல் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 6% ஆக இருந்தது. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்து 2022-23ஆண்டில் 3.2% ஆகக் குறைந்துள்ளதாகக் காலமுறை அடிப்படையிலான தொழிலாளர் கணக்கெடுப்பின் (PLFS) சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் 2022-2023 காலகட்டத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறைந்திருந்தாலும் வேலைவாய்ப்பைப் பெறுவதில் நாடு முழுவதும் சமமற்ற தன்மையே நீடிக்கிறது.
- மேலை நாடுகளில் பட்டதாரி ஒருவர் வேலைவாய்ப்பைப் பெற அவர் முன் உள்ள வாய்ப்புகள் ஏராளம். இந்திய இளைஞர்கள் இத்தகைய சாதகமான சூழல்களைக் கொண்டிருக்கவில்லை. உதாரணத்துக்கு, உயர் கல்வித் தகுதியுடைய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் இங்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.
பின்தங்கும் பெரிய மாநிலங்கள்
- 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் அந்தமான்-நிக்கோபார், லடாக், ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகம் உள்ளதாகவும், பெரிய மாநிலங்களான ராஜஸ்தான், ஒடிஷாவில் நிலைமை மோசம் என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. 2023இல் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்கள் மிகக் குறைந்த வேலைவாய்ப்பின்மை விகிதத்தைப் பதிவுசெய்துள்ளன.
காரணங்கள்
- மக்கள்தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள்தொகைப் பெருக்கம் உறுதுணையாக இருக்கக்கூடிய ஒரு காரணி என்றாலும், வேலைவாய்ப்பின்மை நிலவும் சூழலில் அதுவே சுமையாகக்கூடும். அந்த வகையில், அதிகரித்துவரும் இந்திய மக்கள்தொகைக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.
- அடுத்த பிரச்சினை, மாணவர்களிடம் நிலவும் திறன் குறைபாடு. கல்லூரிகளிலிருந்து வெளிவரும் இளைஞர்கள் போட்டி மிகுந்த உலகத்தை எதிர்கொள்வதற்குப் போதிய திறனை, கல்வி நிறுவனங்கள் உருவாக்கவில்லை. இவ்வாறான சூழலில், வேலைவாய்ப்புகள் உருவானாலும் அவற்றை மாணவர்களால் தமதாக்கிக்கொள்ள முடியாமல்போகிறது. இதன் விளைவாக, குறைந்த ஊதியம் பெறும் வேலையில் சேர்கிறார்கள் அல்லது போலியான மோசடி வேலைகளில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
- அதிகரிக்கும் பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மை ஏற்பட ஒரு காரணம். அதிகரிக்கும் விலைவாசியால் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைந்து, பொருள்கள், சேவைகளுக்கான தேவை குறைகிறது. இதனால் நிறுவனங்கள் செலவுக் குறைப்பு நடவடிக்கையாக ஆள்குறைப்பில் ஈடுபடுவதால், நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என்பதே நிதர்சனம்.
பொருளாதாரமும் வேலைவாய்ப்பும்
- உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைத் தக்கவைத்துக்கொள்ள வளர்ந்துவரும் பொருளாதாரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது முக்கியம்.
- 1% வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்பது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6% அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று உலக வங்கி குறிப்பிடுகிறது. அதன்படி வேலைவாய்ப்பு என்பது தனி நபர்களுக்கு மட்டும் நன்மை பயக்கக்கூடியது அல்ல; நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்துக்கும் நலன் சேர்க்கக் கூடியதே.
- அதிகளவில் வேலைவாய்ப்பு உருவானால் பொருள்கள், சேவைகளுக்கான தேவையும் அதிகரித்து, தொழில்கள் விரிவடையும். அதன் மூலம் இன்னும் கூடுதலான வேலைவாய்ப்பு உருவாகும். ஒரு நாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில்தான் இருக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 01 – 2024)