- வறட்சியைத் தாங்கி வளரும் பயிர்களின் அறிமுகத்தாலும், விவசாய நிலங்களின் பரப்பளவு விரிவடைவதாலும் 2015-16 முதல் வேளாண் உபரி உற்பத்தி அதிகரித்துவருகிறது. இது காய்கறி, தோட்டக்கலைப் பயிர்களிலும் எதிரொலிக்கிறது. பால், மீன், முட்டை உற்பத்தியும் கடந்த பத்தாண்டுகளாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும், விவசாயிகளின் உற்பத்திச் செலவுக்கும் மேலதிகமாக கொள்முதல் விலை இல்லாததால், விவசாயிகளின் வருவாய் உயராமலேயே தொடர்வது பெரும் அவலம்தான்.
வேளாண் பொருள்கள்
- விவசாயிகளிடமிருந்து வேளாண் உற்பத்திப் பொருட்களை நல்ல விலையில் கொள்முதல் செய்ய வேண்டும். எல்லா வகைப் பயிர்களுக்கும் காப்பீடு முறையைக் கொண்டுவர வேண்டும். பயிர்களுக்குக் காப்பீடு வழங்கும்போது வெவ்வேறு பயிர்களுக்கு வெவ்வேறு விதமான காப்பீட்டுத் தொகையை நிர்ணயிப்பதும் எளிதானதுதான்.
- வேளாண் உற்பத்தி அதிகமாக இருந்த நிலையில் கொள்கையை வகுப்பதில் அரசு செய்த தவறுகளால் வேளாண் இறக்குமதி கடந்த 5 ஆண்டுகளாக ‘ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சிவீதம்’ 9.8 என்ற அளவில் உயர்ந்துகொண்டே வருகிறது. ஏற்றுமதியோ 1% என்ற அளவிலேயே இருக்கிறது. இதைப் போக்க விவசாயத்துக்கு உதவும் அரசு அமைப்புகளின் பணிகளைச் சீர்திருத்தி ஒருங்கிணைக்க வேண்டும். அனைத்து விவசாயிகளையும் உள்ளடக்கும் வகையில் ‘உற்பத்தியாளர் சங்கங்கள்’ நாடெங்கும் ஒரே அமைப்பாகச் செயல்பட வேண்டும். வங்கிகளிடமிருந்து கடன் பெறுவது, விளைபொருட்களை உற்பத்தியாகும் இடங்களிலிருந்து தேவைப்படும் இடங்களுக்குக் குறைந்த செலவில் கொண்டுபோய்ச் சேர்ப்பது, சந்தையில் விற்பதில் உள்ள தடைகளை நீக்குவது ஆகியவற்றை விவசாய அமைப்புகளுடன் சேர்ந்து அரசு சரிசெய்ய வேண்டும்.
2017
- 2017-ல் இயற்றப்பட்ட ‘வேளாண் விளைபொருள், கால்நடைகள் சந்தைப்படுத்தல் மாதிரிச் சட்ட’த்தை எல்லா மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். வேளாண் பொருட்களைப் பதப்படுத்தும் தொழில் பிரிவுகளில் முதலீடு பெருக, ஊக்குவிப்புகளைத் தர வேண்டும். வேளாண் விளைபொருள் விற்பனைச் சந்தைக் கிடங்குகளைப் பராமரிக்க வேண்டும். தோட்டக்கலைப் பயிர்களின் விளைச்சல் அதிகரித்துவருவதால், குளிர்பதன வசதியுள்ள கிடங்குகளை அதிகம் நிறுவ வேண்டும். வேளாண் விளைபொருட்களிலிருந்து உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் தொழில் பூங்காக்கள் எப்படிச் செயல்படுகின்றன என்று கண்காணிக்க வேண்டும்.
- இதையெல்லாம் செய்யாமல், குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதால் மட்டுமே விவசாயத் துறையைக் கரைசேர்த்துவிட முடியாது. உணவு தானியத்துக்கான தேவையையும் மத்திய அரசால் அதிகப்படுத்த முடியாது. உலக சந்தையிலும் அதன் விலையை அதிகரிக்கச்செய்ய முடியாது. எனவே, சாகுபடியாளர்களுக்கு உதவும் வகையில் ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பாக நீண்டகாலக் கொள்கையை வகுக்க வேண்டும். அந்நிய நாட்டு விளைபொருட்களுக்கு ‘காப்பு வரி’ விதிப்பதைவிட இது நல்ல மாற்று வழி. விவசாயத் துறையைக் காப்பாற்ற மத்திய அரசு தனது வேளாண் கொள்கையை மேலும் வலுவாக்கி ஒருங்கிணைப்பது அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (04-06-2019)