- வேளாண் சுற்றுலாவில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது ஆகும். ஆரம்ப காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளான இத்தாலி மற்றும் அமெரிக்காவில் வேளாண் சுற்றுலாவை விவசாயிகளிடத்தில் கொண்டு சேர்த்ததன் முழுமுதற் நோக்கமே, பொருளாதார ரீதியாக அவர்களை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். அதிலும் குறிப்பாக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது, சுற்றுலாவாசிகளிடத்தில் வேளாண் சுற்றுலா தொடர்பான புரிதலை ஏற்படுத்துவது, ஊரக வளர்ச்சியை வேளாண் சுற்றுலாவோடு இணைத்து மேற்கொள்வது, வேலைவாய்ப்பை உண்டாக்கித் தருவது, உள்ளூர் விவசாயிகளை வேளாண் சுற்றுலா மூலம் வலுப்படுத்துவதுதான் வேளாண் சுற்றுலாவின் நோக்கம்.
- ஜப்பான், தென் கொரியா மற்றும் தைவான் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளில் சிறு விவசாயிகள் அதிக அளவில் இருப்பதாலும், அங்குள்ள சுற்றுலாவாசிகளின் மனநிலை அமைதியான சூழலை நோக்கி விரும்பிச் செல்வதாலும் வேளாண் சுற்றுலாவானது அரசாங்க ரீதியான கொள்கை முடிவாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள வேளாண் சுற்றுலா பண்ணைத் தொழிலில் பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்கெடுத்து வருகின்றனர். அதுவே அவர்களின் வேளாண் சுற்றுலா வெற்றிக்கு வித்திடுவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
- ஆஸ்திரியாவில் வேளாண் சுற்றுலா இருக்கும் பண்ணை மற்றும் வேளாண் சுற்றுலா இல்லாத பண்ணை என்று இரு பிரிவாக எடுத்துக்கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வேளாண் சுற்றுலா இருக்கும் பண்ணையில் நிலையான வருமானம் விவசாயிகளுக்கு கிடைத்தது தெரியவந்தது. குறிப்பாக, வேளாண் சுற்றுலா இல்லாத பண்ணையோடு ஒப்பிடுகையில் வேளாண் சுற்றுலா இருக்கும் பண்ணையில் 20 முதல் 50 சதவீதம் கூடுதல் வருமானம் விவசாயிகளுக்கு கிடைத்ததாக ஆய்வு கூறுகின்றது.
- வேளாண் சுற்றுலாவை நடத்தி வரும் விவசாயிகளை மூன்று வகையான காரணிகளோடு ஒப்பிட்டு நடத்தியுள்ள ஆய்வை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். அதாவது வேளாண் சுற்றுலா மற்றும் நிலையான பொருளாதார விளைவு; வேளாண் சுற்றுலா மற்றும் நிலையான சமூக விளைவு; வேளாண் சுற்றுலா மற்றும் நிலையான சுற்றுச்சூழல் விளைவு.
- முதலாவதாக இருக்கும் வேளாண் சுற்றுலா மற்றும் நிலையான பொருளாதார விளைவில் பல வளர்ந்த நாடுகளில் வேளாண் சுற்றுலா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகவும், வேளாண் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் பண்ணையில் விவசாயிகள் முதலீடு செய்வதாகவும் அதனால் அவர்கள் பயிர் சாகுபடியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை என்றும் கூறுகிறது. மேலும் முதலீடு என்று வரும்போது வேளாண் சுற்றுலா பண்ணையாளர்கள் சில உத்திகளை மேற்கொள்கின்றனர். அதாவது சிலர் வேளாண் சுற்றுலாவை பல கோணங்களில் மேம்படுத்த முனைகின்ற அதே வேளையில் இன்னபிற பண்ணையாளர்கள் வேளாண் சுற்றுலாவை பயிர் சாகுபடியோடு இணைத்து மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவதாக ஆய்வு கூறுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் வேளாண் சுற்றுலா பண்ணையாளர்கள், சுற்றுலாவாசிகளுக்கு தங்கும் அறை மற்றும் கட்டிடங்கள் கட்டுவதில்தான் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர்.
- அதுவே வேளாண் சுற்றுலாவின் சமூக விளைவை எடுத்துக்கொண்டால் வேளாண் சுற்றுலா நடத்தி வரும் விவசாயிகளுக்கு தனிப்பட்ட வகையில் சுற்றுலாவாசிகளோடு உரையாடும்போது திருப்தி கிடைப்பதாகவும், அதோடு பண்ணையை நடத்தி வரும் பெண்களுக்கு சமூகத்தில் தகுந்த அங்கீகாரம் கிடைப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. மேலும் சமூகத்தில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் காக்கப்படுவதையும் வேளாண் சுற்றுலா உறுதி செய்வதாக ஆய்வு கூறுகிறது.
- இறுதியாக வேளாண் சுற்றுலாவை சுற்றுச்சூழல் விளைவோடு ஒப்பிட்டால் வேளாண் சுற்றுலா வைத்திருக்கும் பண்ணையாளர்கள், சுற்றுலாவாசிகள் பெரிதும் இயற்கையை விரும்புவதால் பல்லுயிர் பெருக்கம் மற்றும் நீடித்த சூழல் வளர்ச்சியை உள்ளடக்கி வேளாண் சுற்றுலாவை மேற்கொள்வதாக அந்த ஆய்வு கூறுகிறது.
- மொத்தத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகளிலும் வேளாண் சுற்றுலாவை சீரும் சிறப்புமாக வேளாண் சுற்றுலா பண்ணையாளர்கள் நடத்தி வருகின்றனர்.
நன்றி: தி இந்து (10 – 06 – 2024)