TNPSC Thervupettagam

வேளாண் தொழிலில் அதிகரிக்கும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு: வேளாண்மை பல்கலை. வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக நிர்வாக இயக்குநர் ஏ.வி.ஞானசம்பந்தம் பேட்டி

January 27 , 2025 3 days 20 0

வேளாண் தொழிலில் அதிகரிக்கும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு: வேளாண்மை பல்கலை. வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக நிர்வாக இயக்குநர் ஏ.வி.ஞானசம்பந்தம் பேட்டி

  • உலகத்தில் உள்ள அனைவரின் பசியைப் போக்கும் மேன்மையான இடத்தில் வேளாண் தொழில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் என பல்வேறு நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் வேளாண் தொழிலிலும் புகுத்தப்பட்டு வருகின்றன.
  • உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் உணவளிக்கும் வேளாண் துறையில் தொழில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. இந்நிலையில், இத்துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. புதிதாக வேளாண் சார் தொழில் தொடங்கும் இளம் தொழில்முனைவோருக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வணிக காப்பகம் (இன்குபேஷன்) வழிகாட்டி வருகிறது.
  • இதுகுறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் நிர்வாக இயக்குநரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான ஏ.வி.ஞானசம்பந்தம் இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியிலிருந்து..

வேளாண் இன்குபேஷனில் வழங்கப்படும் பயிற்சிகள் என்னென்ன?

  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை உதவியுடன் 2011-ல் தொழில்நுட்ப வணிக காப்பகம் நிறுவப்பட்டது. இங்கு தொழில் தொடங்குவது, அதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது, வரவு-செலவு, தணிக்கை, வங்கி கணக்கு விவரங்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அக்ரி ஸ்டார்ட் அப்களுக்கான நிதி உதவி திட்டங்கள் குறித்து விளக்க முடியுமா?

  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் அக்ரி ஸ்டார்ட் அப்களுக்கு நிதி பெற்றுத் தரப்படுகிறது. மத்திய அரசின் ஆர்கேவிஒய் (RKVY) பிரிவின் கீழ் 100 சதவீத மானிய திட்டங்களும் இதில் அடங்கும். தொழில் தொடங்குவது முதல் உற்பத்தி வரையிலான திட்டங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 72 ஸ்டார்ட் அப்களுக்கு ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய வேளாண் மற்றும் விவசாய நலத்துறை R-ABI திட்டத்தின் கீழ் இளம் பட்டதாரிகளுக்கு வேளாண் வணிக பயிற்சியும் (AOP), துளிர் நிறுவனத் தொழில் முனைவோருக்கான வேளாண் வணிகப் பயிற்சியும் (SAIP) வழங்கப்படுகிறது. மேலும் NIDHI-EIR திட்டத்தின் கீழ்வேளாண் மற்றும் அது தொடர்புடைய துறைகளில் புதிய வணிக யோசனையுடைய பட்டதாரிகளுக்கு அவர்களின் கல்வித் தகுதி, பணி அனுபவம் மற்றும் வணிக யோசனை ஆகியவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.10,000 முதல் ரூ.30,000 வரையிலான நிதியுதவியுடன் கூடிய தொழில்முனைவோர் ஆவதற்கான பயிற்சி 12 மாதத்துக்கு அளிக்கப்படுகிறது.
  • தொழில் முனைவோருக்கான ஆரம்ப மூலதன திட்டத்தின் (SISFS) கீழ் ஆரம்ப நிலை தொழில்முனைவோருக்கு வணிக கருத்தின் ஆதாரம் காண்பித்தல், முன்மாதிரி உருவாக்குதல், தயாரிப்புகளுக்கான சோதனைகள் ஆகியவற்றுக்கு ரூ.20 லட்சம் வரைமானிய வாய்ப்பு உள்ளது. மேலும் சந்தைப்படுத்துதல், வணிகமயமாக்கல் மாற்றத்தக்க கடன் வழியில் வணிகத்தை மேம்படுத்துதல் ஆகியவைகளுக்கு ரூ.50 லட்சம் வரை முதலீட்டுத் தொகை பெறலாம்.
  • மேலும் NIDHI-PRAYAS திட்டத்தின் கீழ் வேளாண் மற்றும் அது சார்ந்த புதிய சிந்தனைகளைக் கொண்ட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கும் ரூ.10 லட்சம் வரையிலான தொகையை மானியமாக வழங்கக் கூடிய வாய்ப்பு இத்திட்டத்தில் உண்டு. இத்திட்டத்தில் 5 பேருக்கு தலா ரூ.50 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (TN-EDII - IVP) மூலம் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆரம்ப நிலை, சிறு, குறு மற்றும்துளிர் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம்வரையும், தொழில் அபிவிருத்தி நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் வரையும் மானியம் பெறலாம்.

வேளாண் வணிகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் என்ன?

  • உணவுத் துறையில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்ளன. இதனால் இத்துறையில் வேளாண் சார் ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. ட்ரோன் தொழில்நுட்பம், இணையவழி சார்ந்த ஐ.ஓ.டி., செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களும் வேளாண் தொழிலில் புதிய வாய்ப்புகளை தருகிறது.
  • அதுமட்டுமல்லாமல் தேங்காய், வாழை உள்ளிட்ட கழிவுகளில் இருந்து மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரித்தலிலும் ஏராளமானோர் ஸ்டார்ட் அப்களை தொடங்கி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மற்றும் இணைய வேளாண்மை, பண்ணை உயிரியல் தயாரிப்புகள், வேளாண் உற்பத்தி, பண்ணை சார் இயந்திர தயாரிப்புகள், உயிரி தொழில்நுட்பம், அங்கக வேளாண்மை, சுற்றுச்சூழல் நலன் பொருட்கள் ஆகிய தொழில்களை செய்யலாம்.

வணிக காப்பகத்தின் சேவைகள் குறித்து கூற முடியுமா?

  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக காப்பகத்தின் தயாரிப்பு பொருட்களுக்கான மேம்பாட்டு தொழில்நுட்ப வழிகாட்டுதல், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்களுடன் இணைப்பு, வணிக மேலாண்மை ஆலோசனை மற்றும் பயிற்சி, காப்புரிமை வழங்குதல், வங்கிக் கடன் மற்றும் தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்துதல் ஆகியவைகுறித்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இதுவரை எத்தனை ஸ்டார்ட் அப்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன?

  • வேளாண் தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் 610-க்கும் மேற்பட்ட வேளாண் தொழில்முனைவோர்கள், விவசாய குழுக்கள், இளம் பட்டதாரிகள், வேளாண் சார் தொழில்புரிவோர் உறுப்பினர்களாக உள்ளனர். டெல்லி முதல் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஸ்டார்ட் அப்கள் பல்வேறு புத்தொழில்களை தொடங்க பதிவு செய்துள்ளனர். ஸ்டார்ட் அப்களை பொறுத்த வரை புது சிந்தனையில் இருந்து நிதியுதவி, உற்பத்தி, மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு, சந்தைப்படுத்துதல் என ஆலோசனைகளையும், உதவிகளையும் செய்து வருகிறோம்.

யாரெல்லாம் அக்ரி ஸ்டார்ட் அப்கள் தொடங்கலாம்?

  • விவசாயிகள், வேளாண் சார் தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்கள், பட்டதாரி பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரும் அக்ரிஸ்டார்ட் அப் தொடங்கி தொழில்முனைவோராக மாறலாம். தொழில்முனைவோர் ஆலோசனை பெற உரிய கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாகப் பதிவு செய்யலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories