TNPSC Thervupettagam

வைக்கம் போராட்டம்: காந்தியின் வருகை நிகழ்த்திய மாற்றங்கள்

October 22 , 2019 1915 days 1515 0
  • வைக்கம் என்றதும் தமிழ்நாட்டினருக்கு வயது, கட்சி, வேறுபாடு இல்லாமல் மனதுக்கு வரும் முகமும் பெயரும் பெரியாருடையவை. இந்தியருக்கு அம்முகமும் பெயரும் காந்தியுடையதாக இருக்கின்றன. இத்தனைக்கும் காந்தி, பெரியாரைப் போல ஏழு முறை வைக்கம் வந்து போராடவில்லை. ஒரே ஒரு முறை, சமாதானம் பேச வைக்கத்துக்கு 10 நாட்கள் வந்தார். ஆனால், அந்தச் சமாதானப் பேச்சுவார்த்தை, ஓராண்டாய் நடந்துகொண்டிருந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரப் பேருதவியாக அமைந்துவிட்டது.
  • போராட்டம் தொடங்கி ஓராண்டுக்குப் பிறகு வைக்கத்துக்கு காந்தி 1925 மார்ச் 9 அன்று மாலை 6 மணி அளவில் வந்து இறங்கினார். எர்ணாகுளத்திலிருந்து படகு மூலம் வந்த காந்தியை, வரவேற்பவர்கள் முன்சென்று அழைத்துவரப் படகுகள் சூழப் போனார்கள். எளிமையைக் கடைப்பிடிக்கும் காந்தி, இந்தப் படாடோபத்தை விரும்புவாரா? பிடிவாதமாகத் தடுத்து, தனியாய்த்தான் தன் படகு பயணிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

தொடங்கியது சோதனை

  • வைக்கத்தில் காலடி வைத்த அரை மணி நேரத்துக்குள் காந்திக்குச் சோதனை தொடங்கிவிட்டது. வைக்கம் மக்கள் சார்பில், சத்தியாகிரகிகள் அவருக்கு வரவேற்பிதழை வாசித்துக் கொடுத்தார்கள். வாசித்துக் கொடுப்பதற்குள் மேடையில் இருந்த காந்திக்குப் பதிவுத் தபால் வைக்கத்தின் வைதிகரிடமிருந்து வந்துவிட்டது. உள்ளூர் மக்களாகிய எங்களுள் ஒரு பகுதியினருக்குத் தீண்டாமை குறித்து, நீங்களும் சத்தியாகிரகிகளும் கொண்டிருக்கும் கருத்தில் ஒப்புதல் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக அதில் அவர்கள் எழுதியிருந்தனர்.
  • வந்திறங்கி சிரம பரிகாரம் செய்வதற்குள் தம் கருத்தை வெளிப்படுத்திவிட்ட எதிர்த்தரப்பான வைதிகர் முதல், அவர் தரப்பான சத்தியாகிரகிகள், ஈழவர், புலையர் உள்ளிட்ட மூன்றாம் தரப்பும் முக்கியமான தரப்புமான அரசாங்கம் வரை அனைவரையும் இந்த ஒரே பயணத்தில் காந்தி ஓய்வே இல்லாமல் சந்தித்து முடித்துவிட்டார். உடன் வந்த, வயதில் இளைய மகாதேவ் தேசாய் களைத்துச் சோர்ந்துவிட்டார், ராஜாஜி காய்ச்சல் வந்து படுத்துவிட்டார். ஆனால், இந்த மனிதர் அந்த நாளில் கடிதப் போக்குவரத்துகளை முழுதாய் முடித்தார்.
  • காந்தி வருவதற்கு முன்னான ஓராண்டில் வைக்கம் போராட்டம் பல உயர்வு தாழ்வுகளைக் கண்டுவிட்டிருந்தது. தொடக்கத்தில் வெகுண்ட அரசாங்கம், பின் கோபத்தைக் குறைத்துக்கொண்டது. முதலில் அமைதி காத்த வைதிகர், பின் எதிர்ப் போராட்டம் நடத்தினர். கைது, சிறை, கைகலப்பு, அடிதடி, வாள் ஊர்வலம், கண்ணில் சுண்ணாம்பைப் பூசுதல், சத்தியாகிரக ஆதரவு உயர் சாதியினருக்கு வழிபாட்டை மறுத்தல், அவர்களைச் சாதி விலக்கம் செய்தல், ஊர் விலக்கம் செய்தல்... இப்படிப் பல தாக்குதல்கள் நிகழ்ந்து, சத்தியாகிரகிகள் சோர்ந்துவிட்டிருந்தனர்.
  • ஆனால், மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுதியாகியிருந்தது. சத்தியாகிரக ஆசிரமத்தில் காய்கறிகளும் தேங்காய்களும் மலைபோலக் குவிந்துகிடக்கும் என்று சொல்கிறார் பெரியார். பெரிய கல்யாண வீடுபோல சமையல் நடந்துகொண்டேயிருக்குமாம். தொண்டர்கள் எங்கிருந்தும் வந்தவண்ணம் இருப்பார்கள். சாதி ஏற்றத்தாழ்வை மறுக்கும் மலையாளிகள், பல ஊர்களிலிருந்தும் ரூ.60, ரூ.100 என்று அனுப்பிக்கொண்டே இருப்பார்கள் என்று அச்சூழலை விவரிக்கிறார் பெரியார்.

காந்தி முன்வைத்த யோசனைகள்

  • சட்டமன்றத்தில் என்.குமாரன் (குமாரன் ஆசான் அல்ல) கொண்டுவந்த சஞ்சார உரிமைத் தீர்மானம் 22-21 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்ட சூழல் சத்தியாகிரகிகள் மனம் வீழ்ந்துபோயிருந்த நேரத்தில் காந்தியின் வருகை நிகழ்ந்தது. வைக்கம் வந்த மறுநாள் 1925 மார்ச் 10 அன்று மதியம் சமாதானப் பேச்சின் முதல் நிகழ்வாக வைக்கம் வைதிகர்களை காந்தி சந்தித்தார். இந்தன்துருந்தில் நீலகண்டன் நம்பியாத்ரியின் இல்லத்தில் 2.30மணி முதல் 5.30வரை நடந்தது அப்பெரும் உரையாடல். இந்த உரையாடல் குறித்து செவிவழிக் கதைகள் இன்றும் கேரள மண்ணில் உலவுகின்றன.
  • காந்தி கடல் கடந்தவரானபடியாலும், ஈழவரைத் தாண்டி வந்தவரானபடியாலும் வீட்டுக்குள் அனுமதிக்கப்படாமல் அவர் வாயிலின் வெளியே நின்றபடியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகச் சொல்கிறது ஒரு கதை. வைதிகர் தரப்பில் 10, 15 பேரும், காந்தி தரப்பில் ராம்தாஸ் காந்தி, ராஜாஜி, டி.ஆர்.கிருஷ்ணசாமி ஐயர் போன்ற சிலரும் அரசாங்க அலுவலர் சிலர் பார்வையாளருமாக அப்பேச்சுவார்த்தை நடந்தது. வினைக் கோட்பாட்டின்படி, சென்ற பிறப்பில் செய்த தவறுகளுக்காக இப்பிறப்பில் தாழ்த்தப்பட்டவர்கள் இந்தத் தண்டனையைப் பெற்றுள்ளார்கள் என்ற பார்வையில் அமைந்திருந்தது வைதிகர் தரப்பு வாதங்கள்.
  • ‘அப்படியே இருந்தாலும், தண்டனையைத் தருவதற்கு நீங்கள் யார்? கடவுளா?’ என்று கேட்டார் காந்தி. தெய்வம் மனுஷ்ய ரூபம் என்றனர் வைதிகர் பதிலாக. சரியான இந்து மதத்தில் தீண்டாமை இல்லவே இல்லை என்பது காந்தியின் நம்பிக்கையாகவும் வாதமாகவும் அமைந்தது. காரணங்கள் சொல்ல முடியாத எதுவும் வரலாற்றில் நிலைக்க முடியாது என்று காந்தி அப்பேச்சில் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் காந்தி மூன்று யோசனைகளை முன்னுரைத்தார்.
  • முதலாவது, பொது வாக்கெடுப்பு யோசனை. திருவாங்கூர் அல்லது வைக்கத்தில் வயது வந்தோரிடம் எடுக்கப்படும் கருத்துக்கணிப்பு. இரண்டாவது, நடுவர் மன்றம் அமைப்பது. இருதரப்பிலும் ஒவ்வொரு அறிஞர் தம் தரப்பின் நியாயத்தை எடுத்துரைப்பர். திவான் நடுவராக இருந்து இறுதி முடிவைச் சொல்வார். சத்தியாகிரகத் தரப்புக்கு அப்போதே காந்தி மதன்மோகன் மாளவியாவைப் பரிந்துரைத்தார்.
  • மூன்றாவது, சான்றாதாரச் சோதனை. ஈழவரை இப்படி நடத்துவதற்குரிய சான்றாதாரத்தை வைதிகர் காட்ட வேண்டும். அதை, கல்வி அறிவு மிகுந்த பண்டிதர் ஒருவர் படித்து விளக்கம் அளிக்க வேண்டும். இந்த மூன்று யோசனைகளையும் தெரிவித்த காந்தி, இதில் ஏதாவது ஒன்றை வைதிகரே தெரிவுசெய்யலாம் என்றும் சொன்னார். வைதிகர் முதலிரண்டு யோசனைகளை நிராகரித்தனர். மூன்றாவது யோசனையின் அடிப்படையில் சங்கரஸ்மிருதியைக் கொண்டுவந்து, காந்தியிடம் அளித்து விளக்கினர். பிரதியின் நம்பகத்தன்மையை காந்தி கேள்வி எழுப்பினார். எனினும், படித்த பண்டிதரிடம் கேட்டுப் பிறகு பேசுவதாகப் பதில் அளித்தார்.

மகாராணியுடனான சந்திப்பு

  • அரசு விருந்தினரான காந்தியின் வைக்கம் வருகையின் அடுத்த சந்திப்பு, திருவாங்கூர் மகாராணி ரீஜண்ட் உடனானது. மகாராணியின் அழைப்பின்பேரில் நிகழ்ந்தது அந்தச் சந்திப்பு. மகாராணியின் தற்காலிக முகாமான வர்க்கலையில் 1925 மார்ச் 12 மதியம் 12 மணிக்கு மகாராணியைச் சந்தித்தார். சேதுலட்சுமி பாய், வலிய கோயில் தம்புரான் (மகாராணியின் கணவர்), காந்தி மட்டுமே கலந்துகொண்ட அப்பேச்சுவார்த்தையில், சட்டசபைத் தீர்மானம் தோல்வியுற்றிருந்த சூழலில், காந்தியின் சமரசத் திட்டத்தை மகாராணி கோரியதாகத் தெரிகிறது. தனிப்பட்ட முறையில், ஈழவரின் கோயில்தெரு நுழைவுக் கோரிக்கையில் உடன்பாடு இருப்பினும், அரசுத் தலைவர் என்ற முறையில் பொதுமக்களின் கருத்தும் முக்கியம் என்று கருதுவதாகத் தெரிவித்தார் மகாராணி.
  • மகாராணியைச் சந்தித்த அதேநாள் மாலையில், நாராயண குருவைச் சிவகிரியில் காந்தி சந்தித்தார். காந்தியின் ஆன்மிக வாழ்க்கையில் நாராயண குருவுடனான சந்திப்பை மிக முக்கியமானதாகக் குருவின் சீடர்கள் குறிப்பிடுகின்றனர். அது எப்படியோ! ஆனால், நாராயண குருவை, வைக்கம் போராட்ட முறையின் ஆதரவாளராக்கும் முயற்சியில் காந்தி இச்சந்திப்பில் வெற்றிபெற்றார் எனலாம். பத்திரிகையாளர்களோ அந்நியர்களோ அனுமதிக்கப்படாத கூட்டமாகவே இச்சந்திப்பு நிகழ்ந்தது. காந்தியுடன் பெரியார், ராஜாஜி, வ.வே.சு. ஐயர் போன்றோர் அச்சந்திப்பில் உடனிருந்தனர்.
  • வர்க்கலையிலிருந்து காந்தியுடன் திருவனந்தபுரம் வந்த பெரியார், விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். காந்தி, ராணியைச் சந்தித்த பின்னர் தன்னைக் கலந்துகொண்டு பின்னர் மீண்டும் அவரைச் சந்தித்ததாக பெரியார் ஒருமுறை இச்சூழலை விவரித்தார். வைக்கம் செல்லும் வீதியில் ஈரோட்டில் எட்டாம் தேதி அதிகாலையில் காந்தியை வரவேற்ற பெரியார், அவருடன் வைக்கம் பயணித்ததாகத் தெரியவில்லை.

காந்தி உணர்த்திய செய்தி

  • சாரமாகச் சொல்வதானால், காந்தியின் வைக்கம் வருகையானது, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கியமான பங்கை ஆற்றிய நிகழ்வு எனலாம். ஈழவரின் கோரிக்கையில் பொதிந்துள்ள சமநீதி நியாயத்தை இந்து என்ற சட்டகத்துக்குள்ளிருந்தே வைதிகர்களிடம் விளக்கினார். காந்தியின் பேச்சு வைதிகர் மனத்தை மாற்ற முடியவில்லையாயினும், அவர்கள் காலத்தின் முன் கையறு நிலையில் இருந்ததை உணர வைத்தது.
  • அவர்களுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை காந்தி உணர்த்தினார். நாராயண குருவினுடனான சந்திப்பு, குருவின் ஒப்புதலோடு போராட்டத்தில் பெருமளவு ஈடுபட ஈழவருக்கு உதவியிருக்கலாம். மகாராணியினுடனான சந்திப்பு, சத்தியாகிரகிகளின் பக்கம் அவரது அனுதாபம் உள்ளதை வெளிப்படுத்தியது. திவான், காவல் ஆணையருடனான சந்திப்பு, போராட்டம் வெளிப்படையாக அடுத்த நகர்வுக்குச் செல்ல உதவியது.
  • காந்தி, காவல் ஆணையர் டபிள்யு.எச்.பிட் உடன் பேசி ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார். வைக்கத்தில் போடப்பட்டிருந்த பௌதீக மற்றும் அரசு உத்தரவு உள்ளிட்ட தடைகளை அரசு நீக்கினால், சத்தியாகிரகிகள் எண்ணிக்கையைக் கூட்டாமல், தடை இடத்தை மீற முயலாமல் போராட்டம் மேற்கொள்வார்கள் என்று காந்தி தெரிவித்தார். அதன் விளைவாக, பெரியாருக்கு வைக்கத்தில் இருந்த தடை நீங்கியது.
  • இந்த ஒப்பந்தத்தின் பாராட்டத்தக்க விளைவு, பெரியார் தொடர்பான தடைநீக்கம் என்று காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார். இவ்வருகைக்குப் பிறகு சத்தியாகிரகம் என்பது அரசாங்கத்துக்கு எதிரானது என்ற நிலையிலிருந்து வைதிகத்துக்கு எதிரானது என்று கூர்மைபட்டது எனலாம். காலம் தாழ்ந்து நடந்திருப்பினும் சரியான நேரத்தில் நிகழ்ந்தது காந்தியின் வைக்கம் வருகை எனலாம். போராட்டம் அவர் வருகைக்குப் பிறகு எட்டு மாதங்கள் கழித்துத்தான் முடிந்தது என்றாலும், முடிவை நோக்கி உந்திய முக்கியமான பயணம் இது.

நன்றி: இந்து தமிழ் திசை (22-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories