TNPSC Thervupettagam

ஷந்தால் மூஃப் சமூக முழுமை என்பது முரண்களமே

August 14 , 2023 517 days 346 0
  • ஷந்தால் மூஃப் (Chantal Mouffe, 1943) சமகால அரசியல் சிந்தனையாளர்களில் இடதுசாரி வெகுஜனவியம், முரணரசியல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர். இவரது இணையர் எர்னெஸ்டோ லக்லாவுடன் (Ernesto Laclau, 1935-2014) இணைந்து எழுதிய ‘Hegemony and Socialist Strategy: Towards a Radical Democratic Politics’ (1985) நூல் பரவலான கவனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, இருவரும் தனித்தனியாகப் பல்வேறு முக்கிய அரசியல் கோட்பாட்டு நூல்களைக் கடந்த 30 ஆண்டுகளில் எழுதியுள்ளனர்.
  • மூஃப், லக்லாவ் இருவருமே இத்தாலிய மார்க்சிய சிந்தனையாளரான கிராம்சியை அடியொற்றிய சிந்தனையாளர்கள். ஆதிக்க சக்திகளின் கருத்தியல் மேலாதிக்கத்துக்கு எதிராக எளிய, சாமானிய மக்களின் அரசியல் அணிகள் எப்படியான சொல்லாடல்களை, உருவகங்களைப் பயன்படுத்தி அரசியல் முரணை முன்னெடுக்கின்றன என்பதையும், இவை தேர்தல்களில் ஈடுபட்டு ஆட்சியைக் கைப்பற்றுவது, மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுப்பது ஆகியவற்றின் மூலம் எப்படி அதிகாரப் பகிர்வைச் சாத்தியமாக்குகின்றன என்பன போன்ற அரசியல் போக்குகளையும் பற்றிச் சிந்திப்பதில், கோட்பாட்டாக்கம் செய்வதில் ஆர்வம் காட்டினர்.
  • வழமையான இடதுசாரி இயக்கங்களின் வர்க்க அடிப்படையிலான, வர்க்க சாராம்சவாதம் சார்ந்த சிந்தனைகளுக்கு மாற்றாக, வெகுஜன அணிசேர்க்கையின் உள்முரண்களுடன் கூடிய அரசியல் முன்னெடுப்புகளில் மக்கள் நலனைப் பாதுகாப்பது சாத்தியம் என்று சிந்தித்தனர். ஒரு விதத்தில் கருத்தியல் தூய்மைவாதத்திலிருந்து விடுபட்டு, அரசியல் சொல்லணிகளின் உருவகத் தன்மை, முரண்கள் உருவகம் ஆகியவற்றின் செயல்பாட்டு முக்கியத்துவத்தை இவர்கள் சுட்டிக்காட்டினர் எனலாம்.
  • தமிழக வரலாற்றை எடுத்துக்கொண்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெகுஜன அணிசேர்க்கை இவர்கள் கோட்பாட்டாக்கத்துக்கு அணுக்கமானது. ஐம்பது, அறுபதுகளில் திமுக-வை கம்யூனிஸ்ட் கட்சி அணுகிய விதம், மரபார்ந்த வர்க்க சாராம்சப் பார்வையில் அமைந்ததால், அதன் முற்போக்கான வெகுஜன வியக் கூறுகளைக் கம்யூனிஸ்ட்டுகள் உள்வாங்கிக்கொள்ளவில்லை என்பதை அக்காலத்திய விவாதங்கள் சுட்டி நிற்கின்றன.
  • திமுக-வை இடதுசாரி வெகுஜனவியக் கட்சியாகப் பார்க்கலாம் என்று எழுதும்போது சில ஆய்வாளர்கள், எப்படி மூஃப் இன்றைக்கு எழுதுவதை அன்றே திமுக செய்துவிட்டதா என்று கேட்கின்றனர். என்றுமே அரசியல் முரண்களின் இயக்கம் கோட்பாடுகளுக்காகக் காத்திருப்பதில்லை. நம்முடைய புரிதலுக்காகவே நாம் அரசியல் வரலாற்றைக் கோட்பாட்டாக்கம் செய்கிறோம்.
  • ஷந்தால் மூஃபின் மூன்று சிறிய கோட்பாட்டு நூல்கள் இணைந்து பயில்வதற்கு உகந்தவை, ஒன்றோடொன்று உள்ளார்ந்த தொடர்புடையவை: ‘The Democratic Paradox’ (2000), ‘Agonistics: Thinking the World Politically’ (2013), ‘For a Left Populism’ (2018). அதில் முரண் கள இயக்கம் என்ற முக்கிய அச்சினை விவாதிக்கும் பொருட்டு, Agonistics நூலினை மையப்படுத்தி சில அம்சங்களைக் கூறத் தலைப்படுகிறேன். அகன் (agon) என்ற சொல், கிரேக்கத்தில் மல்யுத்த வீரர்கள் மோதும் களத்தைக் குறிப்பது.

சுதந்திரவாதத்தின் அனுமானங்கள் யாவை?

  • மக்களாட்சி உருவாக்கத்தின் மையமான கருத்தியல், சுதந்திரவாதமாகும். அது ஒவ்வொரு குடிநபரும் சுதந்திரமானவர் என்ற கருத்தாக்கத்தை அச்சாணியாகக் கொண்டது. அப்படிச் சுதந்திரமான குடிநபர்கள் தங்களுக்குள் சில சமூக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
  • அந்தச் சமூக ஒப்பந்தங்களின் தொகுப்பே ஒரு அரசியல் அமைப்பாக உருவாகிறது. மக்களின் பிரதிநிதிகள் சமூக அமைப்புகளை நிர்வகிக்கிறார்கள். இவ்வகையான சட்ட திட்டங்களின்படியான இயக்கம் முழுமையாக முதிர்ச்சி அடைந்தால் அரசதிகாரம் என்பதே அவசியமில்லை என்று கூறலாம்.
  • அதாவது, எப்படிப் போக்குவரத்து விதிகளை அனைத்து வாகன ஓட்டிகளும் கடைப்பிடிக்கும்போது, யாரும் மேற்பார்வையிடாமலேயே போக்குவரத்து சுமுகமாக இருக்குமோ அதுபோல சமூக இயக்கம் அமைய வேண்டும். நெருக்கடியான சில சந்திப்புகளில் போக்குவரத்துக் காவலர்கள் வாகனங்களை நெறிப்படுத்துவார்கள். இது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவு நல்லது அல்லவா.
  • அதுபோலவே அரசு என்பது மிகவும் குறைவாகச் சிறுத்துப் போவதும், குடிமைச் சமூகம் தானாகவே உள் ஒழுங்குடன் இயங்குவதும் சுதந்திரவாத லட்சிய அனுமானம். ஆனால், சமூகத்தில் பல்வேறு விதமான ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் நடை முறையில் நிலவுகின்றன. ஒட்டுமொத்த சமூக வளங்களில், அதன் உற்பத்தியில், உபரியில் தங்களுக்கு உரிய பங்கு கிடைக்காதவர்கள் அதற்காகப் போராடுகிறார்கள்.
  • வலியோர் அவர்களை ஒடுக்குகிறார்கள். ஒரு சிலர் பிறரிடமிருந்து தட்டிப்பறிக்கவும் தயங்குவதில்லை. இப்படியான நிலையில், அரசு தன் வலிய கரங்களால் சமூகத்தைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. ராணுவம், காவல் துறை என்று ஆயுத பலத்துடன் அரசு ஆட்சி செய்கிறது.
  • சரி, சமூக முரண்பாடுகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றால், அதுவும் முடிவற்ற பயணமாகத்தான் உள்ளது. அதனால் பெரும்பான்மையினர் எதை ஆதரிக்கிறார்களோ அதுவே அனைவருக்குமான விதியாக மாறுகிறது. அந்தப் பெரும்பான்மையின் கருத்தை உருவாக்குவதே கருத்தியல் மேலாதிக்கம் எனப்படுகிறது.
  • இந்தக் கருத்தியலுக்கு ஆதரவாகக் கருத்தொப்புமையை உருவாக்க அரசு பிரச்சாரம் செய்கிறது. ஆயுத பலம், கருத்தியல் மேலாதிக்கம் ஆகிய இரண்டுமே சுதந்திரவாத நம்பிக்கையான அனைவரும் கூடிப்பேசி அறிவுபூர்வமாக முடிவெடுத்தல் என்பது போன்ற லட்சிய மாதிரிகளுக்கு எதிராகவே உள்ளன. அதற்குக் காரணம், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளே. ஆதிக்க சக்திகள் சமத்து வத்தை விரும்புவதில்லை என்பதால், அவை சுதந்திரவாத லட்சியங்களைப் பயன்படுத்தி மக்களைக் கட்டுப்படுத்தவே விரும்புகின்றன.

முரண் களத்தின் முக்கியத்துவம்

  • எனவேதான், மக்களாட்சியின் உயிர் நாடி என்பது உயிர்ப்புள்ள முரண் களம் என்று கூறுகிறார் மூஃப். நாம் முந்தைய வாரம் விவாதித்த ஷ்மிட்டின் முரணரசியல் (political) என்ற கோட்பாட்டைப் பயனுள்ளதாகக் கருதும் இவர், சமூகத்தில் கருத்தொப்புமையை உருவாக்க முயல்வதைவிட, முரண்களைச் சுதந்திரமாகப் பேச, அனைத்துக் களங்களிலும் வெளிப்பாடு கொள்ள அனுமதிப்பதே முக்கியம் என்று கூறுகிறார்.
  • சமூக முழுமை என்பது ஒருபோதும் அனைவரும் ஒற்றைப் பொது ஒழுங்கை ஏற்றுக்கொண்டு இயங்குவதாக அமைய வேண்டியதில்லை. அத்தகைய லட்சியம் பலருடைய குரல்களை ஒடுக்குவதாகவே முடியும். எனவே, சமூக முழுமை என்பதை நிரந்தர முரண் களமாகவே நாம் உருவகிக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (14– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories