- இந்தியாவில் அதிக ஆண்டுகள் ஒரு மாநிலத்தை ஆண்ட பெண் என்ற பெருமைக்குரியவரும், தனது 15 ஆண்டுகள் தொடர் ஆட்சியில் நவீன டெல்லியைச் சீரமைத்து அழகூட்டியவருமான ஷீலா தீட்சித்தின் (81) மறைவு டெல்லிவாசிகளைக் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு துயரத்தில் தள்ளியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. டெல்லிக்கு அவ்வளவு செய்திருக்கிறார் அந்த பஞ்சாபி பெண்.
- வசதியான பின்னணி என்றாலும், சவால்கள் நிறைந்த வாழ்க்கைதான் ஷீலா தீட்சித்தினுடையது. மார்ச் 31, 1938-ல் பஞ்சாபில் பிறந்த ஷீலா படித்தது, வளர்ந்தது எல்லாமே டெல்லியில்தான். உத்தர பிரதேசத்தின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களில் ஒருவரான உமாசங்கர் தீட்சித்தின் மகனும் ஐஏஎஸ் அதிகாரியுமான வினோத் தீட்சித்தைக் காதல் திருமணம் செய்துகொண்டார் ஷீலா. ஆனால், மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை. வினோத்தின் அகால மரணம் ஷீலாவைத் துயரத்தில் தள்ளியது. பள்ளி மாணவர்களாக இரு பிள்ளைகளும் இருந்த நிலையில், சராசரியான ஒரு இந்திய விதவையின் வாழ்க்கை வீட்டோடு முடங்கிவிடும். ஷீலாவோ குழந்தைகளை வளர்த்தபடியே அரசியலில் ஈடுபடலானார்.
- தனது 31-வது வயதில் அரசியலில் காலடி எடுத்துவைத்த ஷீலா 1970-களில் இளம் பெண்களுக்கான சங்கத்தின் கவனிக்கத்தக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார்; அப்போதே இந்திராவின் அன்புக்குப் பாத்திரமானவரானார். 1984-ல் உத்தர பிரதேசத்தின் கனௌஜ் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர், ராஜீவின் அமைச்சரவையில் இடம்பெற்றார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னகர்ந்தவரின் முழுமையான ஆளுமை 1998-ல் தலைநகர் டெல்லியில் அவர் முதல்வரானதன் மூலம் வெளிப்படலானது.
எதிர்த் தரப்பினர் எதிரிகள் அல்ல
- இந்தியாவில் ஏதோ ஒரு மாநிலத்துக்கு முதல்வராக இருப்பதும் இந்தியாவின் தலைநகரான டெல்லியின் முதல்வராக இருப்பதும் ஒன்றல்ல. பல நூற்றாண்டுகளில் சுற்றிச் சுற்றி வளர்ந்து வந்த இன்றைய டெல்லி அதன் சமூக, கலாச்சார, அரசியல் பண்புக்கு ஏற்பவே சிக்கலான, வரைமுறையற்ற கட்டமைப்பைக் கொண்டது.
- 6 கோடி மக்கள்தொகையைக் கொண்ட டெல்லி உலகிலேயே மக்கள் நெருக்கடி மிகுந்த நகரங்களில் ஒன்று; ஆனால், ஒரு சதுர கிமீக்கு 12 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் அடர்த்தியைக் கொண்ட அதன் முதல்வருக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டவை. இந்தியாவில் முழு மாநில அந்தஸ்தில் உள்ள மாநில முதல்வர்களுக்கான அதிகாரம் குறைவு என்றால், யூனியன் பிரதேசத்தன்மையைக் கொண்ட டெல்லியின் முதல்வருக்கான அதிகாரங்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?
ஷீலா மிக சாதுரியமாகக் கையாண்டார். அவர் முதல் முறை முதல்வராகப் பதவியேற்ற காலம் மத்தியில் பாஜக ஆட்சியிலிருந்த காலம். எப்போதுமே அரசியலுக்கு அப்பாற்பட்டு மனித உறவுகளைப் பேணும் ஷீலா, டெல்லியின் நலனுக்காக பாஜகவில் யாரையும் சந்திக்கவும், யாருடனும் பேசவும் எப்போதும் தயாராக இருந்தார்.
- டெல்லி மின் வாரியம் ஊழல், முறைகேடுகளுக்குப் பேர் போனது. மின் திருட்டு, மின் இழப்பு சகஜம். இதனால், நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் என்றாலும் வாரிய அதிகாரிகளையும் ஊழியர்களையும் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மின் விநியோகத்தைச் சீரமைக்கவும் மின் நுகர்வோர்களுக்கு அதிகப் பலன் கிடைக்கவும் தனியார்மயத்தைத் தவிர வேறு வழியில்லை என்றபோது அதற்காக மாநில துணை நிலை ஆளுநர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மத்திய மின் துறை அமைச்சர், பங்கு விலக்கலுக்கான அமைச்சர், தலைமை கணக்குத் தணிக்கையாளர் என்று ஒவ்வொருவர் வீட்டுப்படியாக ஏறி இறங்கி அதைச் சாதித்தார். அவருடைய சீர்திருத்தத்தின் விளைவாக டெல்லி அரசுக்கு நிதிச்சுமை குறைந்தது, மின் நுகர்வோர்களுக்குக் கேட்டவுடன் மின்சார இணைப்பு கிடைத்ததுடன் மின்சார வெட்டும் இல்லாமல்போனது.
- அகங்காரத்துக்கு அவர் இடமளிப்பதில்லை என்பதற்கு இன்னொரு உதாரணம்: 2002 டிசம்பரில் டெல்லி மெட்ரோ திறப்பு விழாவுக்கு இரண்டு மூன்று தினங்கள் முன், பாஜகவின் மாநிலப் பிரிவுத் தலைவரும் முன்னாள் முதல்வருமான மதன் லால் குரானாவை டெல்லி மெட்ரோ தலைமைப் பதவியில் அமர்த்துகிறது மத்திய அரசு. இதற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தலாம் என்கிறார்கள் ஷீலாவின் காங்கிரஸ் சகாக்கள். ஆனால், அதை ஏற்க மறுக்கும் ஷீலா, குரானா நியமனத்தை வரவேற்கிறார். “மத்திய அரசைச் சார்ந்து நாம் இயங்க வேண்டியிருக்கிறது. எனது எதிர்ப்பால் குரானாவையும் பகைத்துக்கொள்வதால் மெட்ரோ பணி மேலும் தாமதமடையக்கூடும். அவர்கள் அதை எதிர்பார்த்துதான் காய்நகர்த்துகிறார்கள். நாம் பலியாகக் கூடாது; மக்களையும் பலியாக்கக் கூடாது” என்கிறார். அரசியல் குளறுபடிகளால் டெல்லியின் வளர்ச்சி தடைபடுவதை அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை.
டெல்லி போக்குவரத்தின் முகமாற்றம்
- தனது 15 ஆண்டு கால (1998-2013) ஆட்சியில் டெல்லியின் முகத்தையே அவர் மாற்றியமைத்தார். டெல்லியின் பெரும் சவால் போக்குவரத்து நெருக்கடி. ஷீலாவின் ஆட்சிக்காலத்தில் மட்டும் சுமார் 70 மேம்பாலங்கள் டெல்லியில் கட்டப்பட்டன. அனுதினமும் டெல்லிக்குள் பயணிக்கும் சுமார் 32 லட்சம் பேரின் பயணங்களையும் இலகுவாக்கும் பொருட்டு 5,500 அரசுப் பேருந்துகளை அவரது அரசாங்கம் கொண்டுவந்தது. ஷீலாவின் ஆட்சிக்குப் பிறகாக ஒரு பேருந்துகூட அதற்கு அடுத்துவந்த அரசால் வாங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.டெல்லியிலுள்ள எல்லா பேருந்துகளையும் மூன்று சக்கர வாகனங்களையும் டீசலுக்குப் பதிலாக எரிவாயுவால் இயக்க வேண்டும் என்ற பெருஞ்சுமையை உச்ச நீதிமன்றம் டெல்லி அரசின் தலையில் கட்டியபோது அதையே ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் ஏற்று சாதித்தார் ஷீலா. 2003-ல் இதற்காக விருதளித்துக் கௌரவித்தது அமெரிக்க அரசு.
- இந்தப் பணிகள் நடந்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் மெட்ரோவை டெல்லிக்கு அறிமுகப்படுத்த முற்பட்டார் ஷீலா. போக்குவரத்துத் துறையில் உலக அளவில் மிக விரைவாக வளர்ந்துவரும் மெட்ரோவை ஷீலா கையில் எடுத்ததென்பது அவரது நவீனத்துவ மனதுக்கான ஓர் உதாரணம். ஷாஹ்தராவுக்கும் தீஸ் ஹஜாரிக்கும் இடையே முதல் மெட்ரோ இணைப்பு 2002-ல் சாத்தியப்பட்டபோது அது டெல்லிவாசிகளின் பயண பாணியையே மாற்றப்போகிறது என்று அப்போது யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. முதல் மெட்ரோ வெறும் 8 கி.மீ. வழித்தடத்தில்தான் ஆரம்பித்தது. பிறகு, அது தலைநகரின் போக்குவரத்தில் உயிர்நாடியாகவே மாறியது.
மக்களின் முதல்வர்
- சமூகத்தின் எல்லா பிரிவினரையும் ஒன்றுபோல நடத்தியதும், அவர்கள் மீதான அக்கறையை ஒன்றுபோல வெளிப்படுத்தியதும் ஷீலாவின் மகத்தான பண்புகள். தொழிலதிபர்கள், சிறுவியாபரிகள், கூலித் தொழிலாளிகள் என எல்லாத் தரப்பினரும் தங்கள் பிரச்சினைகளுக்கு ஷீலாவிடம் தீர்வு கிடைக்கும் என்று நம்பினார்கள். தனது காதுகளை எல்லோருக்கும் திறந்துவைத்திருந்தார்; இறுதியாக, எது சரியென்று படுகிறதோ அதைச் செயல்படுத்தினார். மக்கள் குழுக்கள் எப்போதும் அவரை அணுக முடிந்தது.
நல்ல வாசகர் அவர். லூயி கரோலின் ‘ஆலிஸின் அற்புத உலகம்’ நாவலும், ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாவல் வரிசைகளும் ஷீலாவின் மனதுக்கு நெருக்கமான புத்தகங்கள். இளம் பிராயத்திலிருந்தே மேற்கத்திய இசைப் பிரியையாக வலம் வந்தவர் அவர். சினிமா மீதும் அவருக்குத் தீராக் காதல் உண்டு. ஷாருக்கின் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படத்தை 20 தடவை பார்த்திருக்கிறார். எல்லாத் தரப்பினருடனும் தன்னை இணைத்துக்கொண்டவர் அவர். பருத்தி அல்லது கைத்தறி சேலை. முக ஒப்பனைகள் கிடையாது. நெற்றியில் திலகம் இருக்காது.தோளில் கைப்பை இருக்காது. சாமானியர்களைச் சந்திக்கையில், ‘குடிநீர் வருகிறதா? ரேஷனில் பொருட்களெல்லாம் ஒழுங்காகத் தருகிறார்களா? சமையல் எண்ணெய்யின் தரம் எப்படி இருக்கிறது?’ என்றெல்லாம் அவர் விசாரிக்கும்போது அவர்கள் ஷீலாவைத் தங்களில் ஒருவராகக் கருதினார்கள். இதற்கு அவருடைய எளிமையும் காரணம்.
- இந்த எளிமையும், தன்னை எப்போதும் யார் வேண்டுமானாலும் அணுக முடியும் என்கிற சுபாவமும்தான் பல்வேறு கலாச்சாரப் பின்புலம் கொண்ட டெல்லி மக்களைக் கட்டிப்போட்டது. அதனால்தான், அவரது மறைவு இப்போது பெரும் வெறுமையாக டெல்லிவாசிகளால் உணரப்படுகிறது!
நன்றி: இந்து தமிழ் திசை (22-07-2019)