TNPSC Thervupettagam

ஸரமாகோ பாடழிவும் பாலஸ்தீனமும்

November 16 , 2023 422 days 306 0
  • போர்த்துக்கீசிய எழுத்தாளர் ஜோஸெ ஸரமாகோ (Jose Saramago) இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவரது கொடைகளைக் கொண்டு அமைக்கப்பட்டு லிஸ்பன் நகரில் இயங்கிவரும் ஜோஸெ ஸரமாகோ நிறுவனம் அந்த நிகழ்ச்சியை இம்மாதம் கொண்டாடிவருகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளால், மூன்றாம் உலக மக்கள் சுரண்டப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் கண்டனம் செய்துவந்தவர் ஜோஸெ ஸரமாகோ. இந்தோனேசிய, ஆஸ்திரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய கிழக்கு தைமூர் மக்களுக்கும் போர்த்துக்கீசியக் காலனிகளாக இருந்த ஆப்ரிக்க நாட்டு மக்களுக்கும் அவர் ஆதரவு தந்துவந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காகத் தன் கடைசி நாள் வரை குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.

பாலஸ்தீனப் பயணம்

  • காலஞ்சென்ற பாலஸ்தீனக் கவிஞர் மஹ்மூத் தார்விஷின் அழைப்பின் பேரில், மேற்குக் கரைப் பகுதியிலுள்ள ரமல்லா நகருக்கும் காஸாவுக்கும் 2002 மார்ச் மாதம், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களான வோலெ ஸோயிங்கா (நைஜீரியா), வின்சென்ஸோ கோன்ஸோலோ (இத்தாலி), பெய் டாவோ (சீனா), யுவான் கோய்டொஸோலோ (ஸ்பெயின்), கிறிஸ்டியன் சால்மன் (பிரான்ஸ்), ரஸ்ஸல் பேங்க்ஸ் (அமெரிக்கா), ப்ரெய்டென் பெரெய்டென்பாஹ் (தென்ஆப்ரிக்கா) ஆகியோருடன் மூன்று நாள் பயணம் சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸரமாகோ கலந்துகொண்டார். அப்போது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் ஜியோனிஸ்ட்டுகளையும் கண்டனம் செய்து பேசினார்.
  • “பாலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருப்பது ஒளஸ்விட்ஸில் (Auschwitz) என்ன நடந்ததோ அதே போன்ற குற்றத்துக்கு ஒப்பானதாக உள்ளது. தண்டனையிலிருந்து விதிவிலக்குப் பெற்றவர்கள் என்ற உணர்வு இஸ்ரேலிய மக்களிடமும் அதன் ராணுவத்திடமும் இருக்கிறது. அவர்கள் ‘பாடழிவை’ (Holocaust), தாங்கள் வாழ்வதற்கு வேண்டிய வருமானத்துக்கான வழியாக மாற்றிவிட்டனர்” என்று அவர் குற்றம்சாட்டினார். இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களை அடைத்து வைத்துச் சித்ரவதை செய்யவும், நச்சுவாயுவால் அவர்களை ஒழித்துக்கட்டவும் நாஜிக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் 40க்கும் மேற்பட்ட வதை முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சீறிய ஜியோனிஸ்ட்டுகள்

  • பாலஸ்தீனத்தில் நடக்கும் இனக்கொலைகளை ஒளஸ்விட்ஸுடன் ஒப்பிட்டதன் காரணமாக உலகெங்கிலும் உள்ள ஜியோனிஸ்ட்டுகளின் கண்டத்துக்கு உள்ளானார் ஸரமாகோ. தாராளவாதப் போக்குடைய யூத, யூதர் அல்லாத எழுத்தாளர்களும்கூட இஸ்ரேலிய ராணுவத்தை நாஜிக்களுடன் அவர் ஒப்பிட்டது தவறு என விமர்சித்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் ஒரு விளக்கம் கொடுத்தார்: “இஸ்ரேலின் நடவடிக்கை கண்டனம் செய்யப்படக்கூடியது, போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டுவருகின்றன- உண்மையில், இஸ்ரேலியர்கள் அதற்குப் பழக்கப்பட்டுள்ளனர். அதை அவர்கள் பொருட் படுத்துவதில்லை.
  • ஆனால், அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாத சில சொற்கள் உள்ளன. ‘ஒளஸ்விட்ஸ்’ என்று நான் அங்கு சொன்னது - நன்றாகக் குறித்துக்கொள்ளுங்கள், ரமல்லாவும் ஒளஸ்விட்ஸும் ஒன்று என்று நான் சொல்லவில்லை, அப்படிச் சொல்வது முட்டாள்தனமானது. நான் கூறியதெல்லாம் ‘ஒளஸ்விட்ஸ் உணர்வு’ ரமல்லாவில் பிரசன்னமாகியுள்ளது என்பதுதான். நாங்கள் எட்டு எழுத்தாளர்கள்... அவர்களும் கண்டனம் செய்தனர். ஆனால், இஸ்ரேலியர்கள் இவற்றைப் பொருட்படுத்தவில்லை. ‘ஒளஸ்விட்ஸ்’ என்ற புண்ணின் மீது என் விரலை வைத்தேன் என்கிற உண்மைதான் அவர்களைக் (ஜியோனிஸ்ட்டுகளை) குதிக்கவைத்தது.”
  • 2009 பிப்ரவரி 5 அன்று தன் வலைதளத்தில் ஸரமாகோ இப்படி எழுதினார்: “பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் அரசு நடத்தும் ஒடுக்குமுறை, அடக்குமுறை ஆகியவற்றை எப்போதும் விமர்சித்துவந்துள்ள என்னைப் பொறுத்தவரை, அந்த அரசைக் கண்டனம் செய்துவந்ததற்கும் தொடர்ந்து கண்டனம் செய்துவருவதற்குமான எனது முக்கியமான வாதம், ஒரு தார்மிகத் தளத்தில்தான் இயங்குகிறது; வரலாறு முழுவதிலும் யூதர்கள் மீது இழைக்கப்பட்ட, வார்த்தைகளால் சொல்ல முடியாத துன்பங்கள், அதிலும் மிகவும் குறிப்பாக இறுதித் தீர்வு என்று சொல்லப்படும் பகுதியாக அமைந்துள்ள துன்பங்கள், இன்றைய இஸ்ரேலியர்கள் (அல்லது, துல்லியமாகச் சொல்வதென்றால் கடந்த 60 ஆண்டு கால இஸ்ரேலியர்கள்)பாலஸ்தீன நிலத்தில் தங்கள் சொந்தக் கொடுங்கோன்மைகளை இழைக்காமல் இருப்பதற்கான ஆகச் சிறந்த காரணமாக இருந்திருக்க வேண்டும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்ரேலுக்குத் தேவைப்படுவது ஒரு தார்மிகப் புரட்சி. இந்தக் கருத்தில் உறுதியாக உள்ள நான், ‘பாடழிவு’ நடந்ததை ஒருபோதும் மறுக்க மாட்டேன். நான் செய்ய விரும்புவதெல்லாம், பாலஸ்தீன மக்களை உட்படுத்தப்பட்டுவரும் எல்லாவகையான கடுஞ்சீற்றம், அவமதிப்பு, உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு ‘பாடழிவு’ என்கிற கருத்தாக்கத்தை விரிவுபடுத்துவது மட்டுமே.”

ரத்தம் சிந்தும் நிலம்

  • இன்று ஸரமாகோ உயிரோடு இருந்திருந்தால் காஸாவிலும் மேற்குக் கரையிலும் நடப்பது இன்னொரு ஒளஸ்விட்ஸ்தான் என்பதை உறுதியாகச் சொல்லியிருப்பார். பாலஸ்தீன விடுதலை பற்றிய அக்கறையை அவர் கொண்டிருந்ததன் நினைவாக மேற்சொன்ன நிறுவனம் கடந்த 11ஆம் தேதி பாலஸ்தீனக் கவிஞர்கள் சிலரை அழைத்து, அரபு மொழியில் எழுதப்பட்ட தங்கள் கவிதைகளை அரபு மொழியிலேயே வாசிக்கவும் அதை உடனுக்குடன் போர்த்துக்கீசியத்திலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யவும் வைத்தது.
  • பாலஸ்தீனக் கவிஞர் முகமது ராஸா மாஸ்டர் காஸா பற்றி 2009இல் எழுதிய கவிதையின் தமிழாக்கம்:

கொல்வதை நிறுத்துங்கள்

காஸா ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறது

இறந்துகொண்டிருக்கிற குழந்தைகளாக

ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறது

தாய்மார்களின் கண்ணீராக

ரத்தம் சிந்திக்கொண்டிருக்கிறது

கனிவு எங்கே

மனிதத்தன்மையற்ற இந்த நிலையை

நாம் வென்று வருவோம்

கருணையுடன் நாம் வாழ்வோமாக

மூர்க்கத்தனமின்றி நாம் வாழ்வோமாக

எங்களுக்கு உண்மை தெரியும்

போலி அமைதியை நாங்கள் அறிவோம்

பேய்கள் பொய்களைப்

பூசி மெழுகுவதை நாங்கள் அறிவோம்

நாங்கள் தேடுவது அமைதியை

அமைதி வீறிட்டு அலறுகிறது

ஒவ்வொரு மூச்சிலும் அது புலம்புகிறது

அமைதிதான் உலகுக்கு நிவாரணம்

அமைதிதான் இந்த உலகில் எங்கள் வேட்கை.

நன்றி: இந்து தமிழ் திசை (16 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories