TNPSC Thervupettagam

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்: தனித்தன்மையுடன் வென்ற தமிழ்நாடு

January 24 , 2024 216 days 185 0
  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த செயல்திறன் கொண்ட பிரிவில் இடம்பிடித்திருக்கும் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை இடத்தைப் பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய வர்த்தகம்-தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும்தொழில்-உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறைவெளியிட்டிருக்கும் இந்தத் தரவரிசைப் பட்டியல், தமிழ்நாட்டில் புதிய நிறுவனங்களைத் தொடங்க விரும்புபவர்களுக்குப் பெரும் ஊக்கம் தரும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
  • சந்தைக்குப் புதிதான தயாரிப்புகளைக் கொண்டுவருகின்ற அல்லது ஏற்கெனவே இருக்கும் தயாரிப்புகளை முற்றிலும் புதிய வடிவில் கொண்டுவருகின்ற நிறுவனங்களும், புதிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன; புத்தாக்கச் சிந்தனைதான் இவற்றின் தனித்தன்மை. இந்தியாவில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கான வலுவான சூழலை உருவாக்கும் நோக்கில் 2018 பிப்ரவரியில், மாநிலங்களின் ஸ்டார்ட்-அப் தரவரிசை அமைப்பு தொடங்கப்பட்டது. மாநில / யூனியன் பிரதேச அரசுகள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அமல்படுத்தும் கொள்கைகள், முன்னெடுக்கும் வளர்ச்சிச் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் ஜனவரி 16 அன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், நான்காவது தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 2022, 2023 ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
  • 2022-க்கான பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இது தென்னிந்தியாவில் நிகழ்ந்துவரும் ஸ்டார்ட்-அப் தொழில் வளர்ச்சிக்கான அத்தாட்சி. முதல் இரண்டு தரவரிசைப் பட்டியல்களில், ‘வளர்ந்துவரும் சுற்றுச்சூழல் அமைப்புஎன்னும் வகையில் கடைசி இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2021இல் வெளியிடப்பட்ட மூன்றாவது தரவரிசைப் பட்டியலில், முதன்மையான இடத்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது. கடைசிப் பிரிவிலிருந்து முதல் பிரிவுக்குத் தமிழ்நாட்டைக் கொண்டுசென்றிருக்கும் திமுக அரசு பாராட்டுக்குரியது.
  • சமீபத்திய பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் விருதுகளைப் பெற்றுள்ளன. கோவையைச் சேர்ந்த கிரீன்விரோ குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘நிலைத்தன்மைபிரிவில் சாம்பியன் விருது பெற்றிருக்கிறது. அட்சயா டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புத்தாக்கக் கண்டுபிடிப்பு விருதைப் பெற்றிருக்கிறது.
  • தமிழ்நாட்டில் தற்போது 7,000-க்கும் அதிகமாகப் பதிவுசெய்யப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 2,000-க்கும் மேற்பட்டவை கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவானவை. தலைநகர் சென்னையில் மட்டுமல்லாமல், பிற நகரங்களிலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்குவதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தியது, இந்த ஆக்கபூர்வ நிலையை எட்டுவதற்கு உதவியது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்னும் நோக்கில் பட்டியல் சாதியினர் / பழங்குடியினர் தொடங்கிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தமிழ்நாடு தனித்தன்மையுடன் மிளிர வழிவகுத்திருக்கின்றன.
  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைப்புதிய இந்தியாவின் முதுகெலும்புஎனப் பிரதமர் மோடி குறிப்பிடுகிறார். எனினும், படிப்படியான வளர்ச்சி, அவ்வப்போது சரிவு-மீட்சி, வேலையிழப்பு என்று சாதக பாதகங்கள் நிறைந்த இந்தத் துறை, மேலும் வளர்ச்சி பெற தொலைநோக்குச் சிந்தனையும், அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். தமிழ்நாடு அதில் தொடர்ந்து பீடுநடை போடட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories