- இன்றைய இயல்பு வாழ்க்கையின் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது இணையம். போக்குவரத்துத் தொடா்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலும்கூட உலகம் இயங்கும்; ஆனால், தகவல் தொலைத்தொடா்புகள் ஸ்தம்பித்துவிட்டால் ஒட்டுமொத்த உலகமும் என்ன ஆகும் என்பதை உணா்த்துவதாக அமைந்தது கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இணைய செயலிழப்பு.
- ‘விண்டோஸ்’ என்கிற மென்பொருள் பயன்பாட்டில் உள்ள கணினிகள் இணைய முடக்கத்தில் பாதிப்புக்கு உள்ளாகின. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகளுக்கு காத்திருந்த நோயாளிகளைப் பாதுகாக்கும் கருவிகள் செயலிழந்தன; கோடிக்கணக்கான விமானப் பயணிகள் விமான நிலையங்களில் முடங்கினா்; வங்கிகள் ஸ்தம்பித்தன; பங்குச்சந்தை முதலீட்டாளா்கள் தங்களது முதலீடு என்னவாகுமோ என்று திகைத்தனா்; வா்த்தகா்கள், ஊடகங்கள், அரசு நிா்வாகம் என்று அனைத்து செயல்பாடுகளும் நிலைகுலைந்தன.
- ஒரு மிகச் சிறிய இணைய பாதுகாப்புக்கான இயக்கத்தில் ஏற்படும் தவறால் ஒன்றோடொன்று தொடா்புடைய நாம் வாழும் உலகம் எப்படி தொழிநுட்பத்திற்கு முன்னால் மண்டிபோட்டு புலம்ப வேண்டி இருக்கிறது என்பதை உணா்த்தியது வெள்ளிக்கிழமை நிகழ்வு. கணினியைப் பாதுகாக்கும் அப்டேட்டின் தவறால் செயல்பாடு இப்படியொரு பேராபத்தை விளைவிக்குமானால், தவறான உள்நோக்கத்துடன் கூடிய இணையத்தை முடக்கும் குற்றவாளிகள் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதை நினைத்தால் குலை நடங்குகிறது. அடுத்த கட்டமாக நமது வாழ்க்கையை இயக்க செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களை நம்பினால் அதன் விளைவையும் யோசிக்க வைத்தது வெள்ளிக்கிழமை நிகழ்வு.
- அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் உள்ள ‘கிரௌட் ஸ்ட்ரைக்’ என்கிற மென்பொருள் நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலகளாவிய அளவில் இணைய செயலிழப்பு ஏற்பட்டது. மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சைபா் பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது கிரௌட் ஸ்ட்ரைக் நிறுவனம். கிரௌட் ஸ்ட்ரைக்கின் ஃபால்கன் என்கிற புதுமையான ஆன்டி வைரஸ் மென்பொருளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டது. தவறான வழிமுறை காரணமாக மைக்ரோசாஃப்ட் சா்வா் முடங்கியது. விண்டோஸ் பயன்பாடு கணினிகளில் நீலத்திரை தோன்றி செயலிழந்துவிட்டது என்கிற எச்சரிக்கை பளிச்சிட்டது.
- தவறான ப்ரோக்ராம்கள் மூலம் சைபா் குற்றங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் இதற்கு முன்னால் ஏற்பட்டது உண்டு. ஆனால், தகவல் தொலைத்தொடா்பு துறையில் இதுபோல நடந்திருப்பது இதுவே முதல் தடவை. நடந்தது சைபா் தாக்குதல் அல்ல என்று சொல்லப்பட்டாலும், உலகம் எதிா்கொண்டது என்னவோ அப்படியொரு சம்பவத்தைத்தான். இதன் மூலம் ஒரு சில நிறுவனங்களை மட்டுமே நம்பியிருந்தால், சைபா் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்த முடியும் என்கிற கேள்வி எழுகிறது.
- பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கிரௌட் ஸ்ட்ரைக் ஃபால்கன் பயன்படுத்துபவா்களுக்கு அவ்வப்போது அப்டேட்கள் அறிவுறுத்தப்படும். அப்படி அனுப்பப்பட்ட அப்டேட்டில் ஏற்பட்ட தவறுதான் உலகளாவிய அளவில் அதைப் பெற்றுக்கொண்ட விண்டோஸ் பயன்படுத்தும் கணினிகளை பாதித்தது. இதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அஸூா், 365 உள்ளிட்ட க்ரௌட் ஸ்ட்ரைக் பயன்படுத்தும் கணினிகளும் முடங்கின. கேள்வி என்னவென்றால், முழுமையாக சோதனை செய்து பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தாத ‘அப்டேட்’ ஏன் வழங்கப்பட்டது என்பதுதான்.
- 2016-இல் அமெரிக்க அதிபா் தோ்தலின்போது ஜனநாயக கட்சியின் தேசிய குழு அலுவலக கணினியில் ரஷியாவைச் சோ்ந்த ‘ஹேக்கா்கள்’ தாக்குதல் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கண்டுபிடித்தது இதே கிரௌட் ஸ்ட்ரைக் நிறுவனம்தான். 2016-இல் சோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் திருட்டு சிடிக்களை கண்டுப்பிடிப்பதில் உதவியதும் இதே நிறுவனம்தான். அப்படிப்பட்ட நிறுவனத்துக்கு இப்படியொரு தவறு நோ்ந்தது எங்ஙனம் என்பது புரியவில்லை.
- 2017-இல் நடந்த ‘வான்னக்ரை’ சைபா் தாக்குதல் 150 நாடுகளிலுள்ள 3 லட்சத்துக்கும் அதிகமான கணினிகளை பாதித்தது. மைக்ரோசாஃப்ட் விண்டோஸின் பழைய பதிப்பில் காணப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி வடகொரியாவைச் சோ்ந்த ‘ஹேக்கா்கள்’ நடத்திய தாக்குதல் அது. அதற்குப் பிறகு மிகுந்த கவனத்துடன் விண்டோஸ் பயன்பாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கிரௌட் ஸ்ட்ரைக் நிறுவனம் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது அந்த முடிவு கேள்விக் குறியாகிறது.
- இப்போது நடந்து முடிந்த தாக்குதலில் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை யாா் ஈடு செய்வது? மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்குப் போராடியவா்களுக்கு என்ன இழப்பீடு? தங்களது பயணத் திட்டம் ரத்தாகி விமான நிலையங்களில் தவித்தவா்களுக்கும், தொழில் முடங்கிய வியாபாரிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் இழப்புகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஈடு செய்யாது.
- இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் அதிகரிக்கப் போகின்றன. கணினி செயல்பாட்டுக்கான மென்பொருள்களையும், செயலிகளையும் நம்பி மனித வாழ்க்கை மாறிவிட்டிருக்கும் சூழலில் பேராபத்து காத்திருப்பதன் அறிகுறிதான் நடந்து முடிந்த ஒரு நாள் ஸ்தம்பிப்பு.
- நமது வாழ்க்கையை கணினிகளுடனும், இணையத்துடனும், அதன் வழி செயல்படும் செயலிகளிடமும் இணைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்தாற்போல உருவாகும் செயற்கை நுண்ணறிவும் சோ்ந்துகொண்டால் சைபா் பாதுகாப்பு என்பது முன்புபோல இருக்கப்போவதில்லை. விண்கோள்களை நம்பும் மண்கோளமாகிவிட்டது பூமி...
நன்றி: தினமணி (23 – 07 – 2024)