TNPSC Thervupettagam

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

February 18 , 2019 2139 days 1980 0
  • 19-ஆவது நூற்றாண்டின் இடைக்காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் வருகை இந்தியாவுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. 18-ஆவது நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்தே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நன்றாக வேரூன்றத் தொடங்கிவிட்டது.
  • ஆங்கிலேயர்களுடைய நிர்வாகத் திறமை, கல்வி முறை எண்ணப் போக்குகளில் இந்தியர்களுக்கு ஒரு பிரமிப்பு ஏற்பட ஆரம்பித்திருந்தது. "தாய் மொழி பேசினால் கேவலம்' என்று ஆங்கிலேய மோகத்தில் இருக்கும் இன்றைய தமிழர்களைப் போன்று, அன்றும் ஆங்கிலேய மோகம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது; ஆங்கிலத்தில் பேசினால்தான் கௌரவம் என்று கருதப்பட்டது.
உழுதுண்டு வாழ்வதே வாழ்வு
  • "உழுதுண்டு வாழ்வதே வாழ்வு' என்பது மாறி "உத்தியோகம் புருஷ லட்சணம்' என்ற எண்ணம் கிராமங்களில் வசித்து வந்த மத்திய தரக் குடும்பங்களில் கூட பரவத் தொடங்கியது. இதன் விளைவாக கிராமங்களின் செல்வாக்கு குறைந்து, நகரங்களுக்குப் புது வாழ்வு வந்தது.
  • இளைஞர்கள் இந்திய உடலையும், ஆங்கில உள்ளத்தையும் தாங்கியவர்களாக இருந்தார்கள்.
19 வது நூற்றாண்டு
  • சுருக்கமாகச் சொன்னால், 18-ஆவது நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து, 19-ஆவது நூற்றாண்டின் இடைக்காலம் வரையுள்ள நூறாண்டு காலத்தில் இந்தியாவின் கலைகளும், நாகரிகமும் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது.
  • எந்த ஆன்மிக அடிப்படையில் இந்தச் சமுதாயம் அமைக்கப்பட்டிருந்ததோ, அந்த ஆன்மிக அடிப்படை தகர்ந்துவிடும் நிலையிருந்தது. இந்த நிலையில்தான் நம் தேசத்து புராதன கலாசாரத்தில் பொதிந்துள்ள உண்மைகளை உணர்த்தக் கூடிய ஒரு மகா புருஷரின் தேவை இருந்தது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தோன்றியவர்தான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர்.
  • "ஸ்ரீசங்கரருடைய அறிவும், சைதன்யருடைய இருதயமும் கொண்ட ஒருவர் தோன்றுவதற்கு காலம் பக்குவமுடையதாயிருந்தது. மற்ற மதத்திடமும் ஒரே சக்தி, ஒரே கடவுள் இருப்பதைக் காணக்கூடிய ஒருவர் தோன்றுவதற்கான காலம் கனிந்திருந்தது. அப்படி ஒரு மனிதர் தோன்ற வேண்டியது அவசியமாக இருந்தது. அந்த மனிதர்தான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்' என்றார் சுவாமி விவேகானந்தர். ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான விவேகானந்தர் அமெரிக்கா சென்று உரையாற்றியபோது, அங்கிருந்த வேற்று மதத்தினரை "சகோதர சகோதரிகளே' என்றுதான் அழைத்தார். நிலையாகவுள்ளது எது? சத்தியம், தர்மம், அன்பு. அதற்கு கிருஷ்ணர், யேசு, அல்லா யார் எந்தப் பெயரிட்டழைத்தாலென்ன? பெயரிலே என்ன இருக்கிறது என்பதை உணர்ந்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். அதற்கு அவர் வாழ்க்கையே உதாரணம்.
குதிராம் சாட்டர்ஜி
  • ஏழைக் குடும்பத்திலே பிறந்து, எல்லா பிள்ளைகளையும் போல வளர்ந்து, எல்லோரையும் போல ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, ஒரு கோயில் பூஜகராக வாழ்க்கையை நடத்தினார் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். ஆனால், உண்மையில் அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் கடவுள் வாழ்க்கையாகவே இருந்தது. ஒவ்வொரு நிமிஷமும் அவர் கடவுள் நினைவாகவே இருந்தார். வங்காளத்தில் ஹூக்ளி ஜில்லாவில் காமார்புகூர் என்பது ஒரு பெரிய கிராமம். இதில் குதிராம் சாட்டர்ஜி என்கிற பிராமணருக்கு 1836-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி பிறந்த நான்காவது குழந்தை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். இவர் பிறப்பதற்கு முன் இவரது தந்தையும் தாயும் கயைக்குப் போயிருந்தார்கள். இந்த யாத்திரைக்குப் பிறகு பிறந்த குழந்தை என்பதால், கயை கோயிலின் கடவுளின் பெயரான "கதாதரன்' என்று வைத்தனர்.
  • சிறு வயதிலேயே இயற்கை காட்சிகளோடு மனம் ஒன்றிப் போவார் கதாதரர். தன்னை மறந்து விடுவார். கவிதை, சித்திரம், சங்கீதம் இதிலெல்லாம் அதிக ஈடுபாடு கொண்டவர். கவிஞர்கள், ஓவியர்கள், சங்கீத மேதைகள் இவர்களுடைய மனம் விரைவில் ஒன்றுபடும்.
  • இந்தத் திறனெல்லாம் கதாரரிடம் இருந்தது. இனிமையான சாரீரம்.அபார ஞாபக சக்தி. சின்ன வயதிலிருந்தே தன் நடை, உடை பாவனைகளால் மற்றவர்களைக் கவர்ந்தார். பள்ளிப் படிப்பில் அதிக ஈடுபாடில்லை. ஆனால், கேட்ட மாத்திரத்தில் புராண இதிகாசக் கதைகளையும் பாடல்களையும் ஒரு வரி விடாமல் சொல்வார். சிறு வயதில் தந்தையை இழந்தார். சகோதரருடன் கொல்கத்தா வந்தார். அங்கே ராணி ராசமணி என்ற ஜமீந்தாரினி, காளிதேவிக்கு பெரிய கோயில் கட்டியிருந்தார். இதனுடன் சேர்த்து சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் கட்டி வைத்தார். இந்தக் கோயிலின் பூசாரியானார் சுதாதரருடைய மூத்த சகோதரர் ராம்குமார். அவருக்கு உதவியாக இருந்தார் கதாதரர்.
  • கதாதரர் ஒரு சிற்பியும்கூட. அவர் வடிக்கும் சிற்பங்கள் அத்தனை அழகாக இருக்கும். இதனால் இவருக்கு அடிமையானார் ராணி ராசமணியின் மருமகன் மதுரநாத விசுவாசர். சகோதரர் வேலை பார்த்த கோயிலில் இருந்த காளியின் தீவிர பக்தரானார் கதாதரர். ஆழ்ந்த பக்தி இவர் மனோநிலையையும், உடல் நிலையையும் பாதித்தது. இந்த நிலை மாற, ஏதாவது ஒரு ரூபத்தில் இவர் கடவுளைக் காண வேண்டும். அதற்கு தாந்திரிக தர்மத்தில் இவரை அழைத்துச் சென்றார் பைரவி பிரம்மணி என்கிற அம்மையார். தாந்திரிக சாதனங்கள் மூலமாக ஜகதாம்பிகையை பல ரூபங்களில் கண்டார். அஷ்டமா சித்திகளும் இவருக்குக் கிடைத்தன. ஆனால், அவற்றைத் துச்சமென தள்ளினார். "உலகை மயக்குவதற்கல்லவோஇது தேவை' என்று அதை உதறினார். அத்வைத மார்க்கத்துக்கு திரும்பினார். வேற்று மதத்தினர் கடவுளைக் காண எந்தெந்த வழிகளில் செல்கிறார்களோ அதையும் தெரிந்துகொள்ள ஆசை கொண்டார். இஸ்லாமிய மதத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார். இதற்குப் பிறகு தனது 38-ஆவது வயதில் கிறிஸ்தவ மதத்தில் ஈடுபட்டு அவர்கள் முறைகளிலே கடவுளைக் கண்டார்.
அத்வைத மார்க்கம்
  • அத்வைத மார்க்கத்தில் இருந்த காலத்தில் புத்தமத அனுபவங்களையும் பெற்றார். இவரது மனைவி ஸ்ரீ சாரதாமணி தேவியார்; இவருக்கு தாயாகவும் இருந்து கவனித்தார். சிஷ்யை போன்று பணிவிடைகள் செய்தார். 1866-ம் ஆண்டிலிருந்து இவர் ஒரு மகானாகவே வாழ்ந்தார். சுதாதரருக்கு "ஸ்ரீராமகிருஷ்ணர்' என்ற பெயர் யார் மூலம் வந்தது என்பதில் யாருக்கும் தெளிவில்லை. மகானாக இருந்த காலத்தில் ஒரு வெல்ல மலையாகவும், மலர்க் கூட்டமாகவும் இருந்தார். இந்த மலர்க் கூட்டத்திலிருந்து ஞான ரசம் குடித்த வண்டுகள்தான் எத்தனை? இவருடைய பிரதான சீடர்தான் சுவாமி விவேகானந்தர்.
  • இவரின் உபதேசங்களின் வழியாக, அறியாமை இருள் அகலத் தொடங்கியது. மேல்நாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்த பலர், நம் தாய் நாட்டைப் பார்க்கத் தொடங்கினார்கள். "வந்த வேலை முடிந்து விட்டது' என்று 1886-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று தனது ஐம்பதாவது வயதில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கண்களை மூடிக் கொண்டார்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories