TNPSC Thervupettagam

ஹரியாணாவில் பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி - காங்கிரஸின் தோல்விக்கு காரணம்

October 9 , 2024 3 hrs 0 min 15 0
  • ஹரியாணா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
  • தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, ஹரியாணாவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று முன்னணி ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் நேர்மாறாக அமைந்துள்ளன.
  • ஜம்மு - காஷ்மீரில் இந்தியா கூட்டணி 49 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தாலும், 42 தொகுதிகளில் வென்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.எல்.ஏ.வே முதல்வராகவும், முக்கிய அமைச்சர் பதவிகளையும் வகிக்கவுள்ளனர். காங்கிரஸ் 38 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது பின்னடைவே.
  • இதுதான் முடிவு என்று முன்பே தெரியுமோ, என்னவோ.. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பெயரளவில் குறைவான நாள்களை ஜம்மு - காஷ்மீரில் செலவிட்டு, ஹரியாணா தேர்தல் பிரசாரத்துக்கே முக்கியத்துவமும் கொடுத்தனர்.

ஹரியாணா முடிவுகள்

  • ஹரியாணா மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேலும், 3 கட்டங்களாக நடைபெற்ற ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஹரியாணா வாக்குகளும் இன்று(அக். 8) காலை எண்ணப்பட்டன.
  • தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட போது, பாஜகவைவிட அதிக தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் எண்ணி முடிக்கையில், பாஜக முன்னிலை பெற்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • முடிவில், பாஜக 48, காங்கிரஸ் 37, இந்திய தேசிய லோக் தளம் 2, சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

தலைகீழான கருத்துக் கணிப்பு

  • அக்டோபர் 5-ஆம் தேதி மாலை வெளியிடப்பட்ட பெரும்பான்மையான ஊடகங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சி என்பதே.
  • சிஎன்என், ரிபப்ளிக் பாரத்-மாட்ரிஸ், இந்தியா டுடே மற்றும் சி ஓட்டர், டைம்ஸ் நவ் என அனைத்து முதன்மை ஊடகங்களும் ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவித்திருந்தனர்.
  • ஆனால், கருத்துக் கணிப்புகளுக்கு நேர்மாறாக பாஜக 50 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது எதிர்க்கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தோல்விக்கு காரணம்?

  • ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவுக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவுக்கும் இடையேயான உள்கட்சி கோஷ்டிப் பூசல்தான்.
  • தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, முதல்வர் பதவிக்கான போட்டியை இருவரும் தொடங்கினர். இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான சுர்ஜேவாலாவும் தனது மகனுக்கு முக்கியத்துவம் கோரி கட்சிக்குள் மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினார்.
  • பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சலிப்பைப் பயன்படுத்தி வெற்றி வியூகத்தை வகுக்காமல், முதலில் பிரசாரத்தையே குமாரி செல்ஜா புறக்கணித்தார். பின், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் தலையீட்டுக்கு பிறகு பிரசாரத்தில் பங்கேற்றது அரசியல் ஸ்டண்ட்.
  • அதேபோல், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்துக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இதுவாகும்.
  • இந்த தேர்தலில், வேளாண் சட்டத்தின்போது, விவசாயிகளுக்கு ஏற்பட்ட இன்னல்களை நினைவுப் படுத்தி, அந்த வாக்குகளை பெறுவதிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.
  • இதனிடையே, பாஜக அரசுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகளையும் புறம்தள்ளி, காங்கிரஸின் உள்கட்சிப் பூசலை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தி தேர்தல் களத்தை எளிமையாக கையாண்டு வாகை சூடியுள்ளது பாஜக.

வாக்குகளை பிரித்த ஆம் ஆத்மி

  • மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட்டன. ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் 9-இல் காங்கிரஸும், ஒன்றில் ஆம் ஆத்மியும் போட்டியிட்டன. போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் ஆம் ஆத்மி தோல்வியை தழுவியது.
  • இந்த நிலையில், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தனர்.
  • இதனிடையே, ஆம் ஆத்மி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாவிட்டாலும், கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இந்த வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்திருந்தால், நூலிழை தோல்விகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.
  • இதுமட்டுமின்றி, பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்த இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால், இதர சிறுசிறு கட்சிகளுக்கு சிதறிய வாக்குகளும் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கும்.
  • ஆம் ஆத்மியை சமரசம் செய்து காங்கிரஸ் கூட்டணி வைக்காதது மிகப் பெரிய தவறே.

வினேஷ் - பஜ்ரங்கின் வரவு வீண்

  • ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வகுத்த வியூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று மல்யுத்த வீரர்கள் கட்சியின் இணைந்தது.
  • பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷணுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள் வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும்.
  • இவர்கள் இருவரும் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸின் இணைந்த நிலையில், பஜ்ரங் புனியாவுக்கு கட்சிப் பொறுப்பும், வினேஷுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
  • அதன்படி, ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத், பாஜக வேட்பாளரை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி அடைந்துள்ளார்.
  • காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தால், வினேஷ் போகத் விளையாட்டுத் துறை அமைச்சராகி இருக்கக்கூட வாய்ப்பு இருந்திருக்கும்.

பாஜக ’ஹாட்ரிக்’

  • பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றப் பிறகு நடைபெற்ற மூன்று ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பாஜக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
  • 2014ஆம் ஆண்டில் காங்கிரஸை படுதோல்வி அடையச் செய்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மட்டும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
  • 2019ஆம் ஆண்டில், பாஜகவுக்கு(40) பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா தளத்துடன்(10) இணைந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது பாஜக.

மீண்டும் நயாப் சிங் சைனி

  • ஹரியாணா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்கர் கடந்த மார்ச் மாதம் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தற்போது மத்திய அமைச்சராகியுள்ளார்.
  • இந்த நிலையில், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்னதாகவே, நயாப் சிங் சைனியை முதல்வராக்கியது பாஜக.
  • ஹரியாணாவில் கணிசமான மக்கள்தொகையை கொண்ட சைனி சமூகத்தை சார்ந்த நயாப் சிங், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முகமாக மாநிலத்தில் வலம்வருகிறார்.
  • தற்போது, மீண்டும் இவரையே ஹரியாணாவின் முதல்வராக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

நன்றி: தினமணி (09 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories