TNPSC Thervupettagam

ஹாக்கி: மெச்சத்தகுந்த பயணம்

August 9 , 2024 156 days 175 0
  • ஒரு டஜன் ஒலிம்பிக் பதக்கங்களை ஹாக்கியில் பெற்றுள்ள ஒரே நாடு இந்தியாதான்! ஆனால், இவை ‘அந்தக் காலப் பெருமைகள்’ (சொல்லப்போனால் ஒரே ஒரு கோலைக்கூட எதிரணிக்கு அளிக்காமல் தங்கப் பதக்கத்தை நம் அணி பெற்றது. இவை 1928, 1956 ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்றவை).
  • டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நாம் பெற்ற வெண்கலப் பதக்கத்தை விட்டுவிட்டால், 41 ஆண்டுகளாக ஹாக்கியில் பதக்கம் பெற ஏங்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறோம். இந்த முறை டோக்கியோவின் ஆதிக்கத்தை ஹர்மன் ப்ரீத் சிங் தலைமையேற்றுள்ள இந்திய ஹாக்கிக் அணி நிலைநிறுத்துமா என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது. ஒருகட்டம் வரை அந்த நம்பிக்கை வலுப்பெற்றுக் கொண்டே வந்தது உண்மை.
  • சுற்றுப் போட்டிகளில் நியூசிலாந்தை வென்றாலும், அர்ஜெண்டினாவோடு சமன் மட்டுமே செய்ய முடிந்தது (அதுவும் கடைசி நிமிட முயற்சி). பின் அயர்லாந்துடன் மோதி வென்றது இந்திய அணி. பெல்ஜியத்திடம் தோற்றாலும், ஆஸ்திரேலியாவை வென்று குரூப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, காலிறுதிச் சுற்றுக்கு வெற்றிகரமாக முன்னேறியது.
  • காலிறுதிப் போட்டிக்கு இந்தியர்கள் கணிசமான அளவுக்குத் திரண்டிருந்தார்கள். ‘இந்தியா ஜீதேகா’ (இந்தியா வெல்லும்) என்கிற கோஷம் அடிக்கடி ஒலித்தது. ஆனால், தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
  • இந்திய அணியின் அமித் ரோஹிதாஸ் கையிலிருந்த ஹாக்கி மட்டை, பிரிட்டன் அணியின் வில்லியம் கால்னனின் முகத்தில் பட்டுவிட, அமித்துக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. எனவே, சுமார் 40 நிமிடங்களுக்கு மத்திய தடுப்பாட்ட (சென்ட்ரல் டிஃபன்ஸ்) நிலையை ஹர்மன்ப்ரீத் சிங் சமாளிக்க வேண்டிய வேண்டிய கட்டாயம் ஏற்பட் டது.
  • போதாக்குறைக்கு (நடுவர் விசில் ஊதிய பிறகும் ஆட்டத்தைத் தொடர்ந்ததால்) சுமித்துக்கு கிரீன் கார்டு வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்டால் அவர் அப்போதைக்கு ஆட்டத்தைத் தொடர முடியாது. மாற்று ஆட்டக்காரரும் நுழைய முடியாது.
  • ஆக, 11 பேரைக்கொண்ட பிரிட்டன் அணியோடு 9 பேரைக் கொண்ட இந்திய அணி சுமார் இரண்டு நிமிடங்களுக்கு மோத வேண்டிய அவல நிலை. பிரிட்டன் முடிந்தவரை இந்த நிலையைச் சாதகமாக்கிக் கொள்ள முயன்றும் தோல்வி கண்டது. ஸ்ரீஜேஷ் அருமையாக பெனால்டி கார்னர்களைத் தடுத்தார்.
  • (அமித் ரோஹிதாஸுக்கு அடுத்த போட்டியில் ஆடவும் தடை விதிக்கப்பட்டது. ஆக, அரையிறுதிச் சுற்றிலும் இந்திய அணியால் இவரது திறமையைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. வேடிக்கை என்னவெனில், அவர் அரையிறுதிப் போட்டியில் பங்கு பெறக் கூடாது என்று பரிந்துரைத்தவர் ஒலிம்பிக் டெக்னிகல் பிரதிநிதியாகப் பங்கேற்ற ஜோஷுவா பர்ட்.
  • இவர், ‘சக் தே இந்தியா’ என்கிற திரைப்படத்தில், (இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கான பயிற்சியாளராக ஷாருக்கான் நடித்தது) இறுதிச்சுற்றில் இந்திய அணிக்கு எதிராக மோதிய ஆஸ்திரேலிய மகளிர் அணியின் பயிற்சியாளராக நடித்தவர். ரீல் வில்லன் ரியல் வில்லனாகிவிட்டார் என்றன நம் ஊடகங்கள்.
  • காலிறுதிச் சுற்றில் இறுதிக்கட்ட வெற்றி இரண்டு நாட்டு கோல் கீப்பர்களான ஒலீ பேய்ன், ஸ்ரீஜேஷ் ஆகியோர் கையில்தான் எனும் நிலைமை. ஹர்மன் பிரீத் சிங், சுக்ஜித் சிங், லலித் உபாத்யாய், ராஜ்குமார் பால் ஆகிய நால்வரும் இந்தியத் தரப்பில் ‘ஷூட் அவுட்டில்’ கோல்களைப் போட, இவர்களிடம் பிரிட்டன் அணி கோல்கீப்பரின் திறமை செல்லுபடியாகவில்லை. பிரிட்டன் தரப்பில் ஜேம்ஸ் ஆல்பரி, ஜாசாரி வாலஸ் ஆகியோர் கோல்களைப் போட, கான்ரன் வில்லியம்சன், ஃபில் ரோபர் ஆகியோரின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
  • ‘அடி பொலி’ என்கிற சத்தம் பின்வரிசையில் இருந்து கேட்டது. (ஸ்ரீஜேஷ் கேரளத்தைச் சேர்ந்தவர்). அடுத்ததாக அரையிறுதி. பிரிட்டனை வெற்றி கண்ட இந்திய அணி, ஜெர்மனியையும் வெற்றிக் காணுமா என்கிற பதற்றம் தொற்றிக்கொண்டது.
  • அமர்க்களமாகத் தொடங்கியது இந்திய அணி. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் முதல் பாதியில் நம் அணிதான் மிக அதிக நேரம் ஆக்கிரமிப்பைச் செய்தது. தொடங்கிய ஏழாவது நிமிடத்தில் ஒரு பெனால்டி கார்னரில் கோல் அடித்தார், ஹர்மன் ப்ரீத் சிங். ஆனால், அடுத்த 11 நிமிடங்களில் ஜெர்மனியைச் சேர்ந்த கொன்சலோ பெலட் அதே போன்ற ஒரு பெனால்டி கார்னர் கோலை அடித்து இரண்டு தரப்பையும் சமமாக்கிவிட்டார்.
  • அடுத்த 16 நிமிடங்கள் இரண்டு தரப்பும் சம பலத்தில் நீடித்தன. ஆனால், அப்போது பார்த்து ஹர்மன் ப்ரீத் சிங்கின் தவறால் பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு ஜெர்மனி அணிக்குக் கிடைத்தது. கிறிஸ்டோபர் ரூயெர் அதைத் தவறவிடவில்லை. 2-1 என்று ஜெர்மனி முன்னிலை பெற்றது.
  • அடுத்து பெனால்டி கார்னரில் ஹர்மன் ப்ரீத் சிங் பந்தை கோலுக்கருகே நின்றுகொண்டிருந்த சுஜித் சிங்கிடம் அனுப்ப, அதை அவர் கோலாக்கினார். மீண்டும் தராசின் இரண்டு தட்டுகளும் சமமாகின. ஆனால், போட்டி முடிய ஆறு நிமிடங்கள் இருந்தபோது, மார்க்கோ மிட்காவ் ஜெர்மனியின் மூன்றாவது கோலை அழகாகத் திணித்தார்.
  • அந்த நிமிடமே இந்தியாவின் தங்கப் பதக்கக் கனவு தவிடுபொடியானது. ஆக, நெதர்லாந்து அணியிடம் 4-0 கணக்கில் தோற்ற, ஸ்பெயினுடன் மோதி வென்றால்தான் வெண்கலப் பதக்கமாவது கிடைக்குமென்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.
  • ஹாக்கி, குழு ஆட்டம்தான். வெற்றிக்கு அனைவரும் சொந்தம் கொண்டாடலாம்தான். ஆனால், இந்த ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை ஹாக்கி ஆட்ட நாயகர்கள் ஹர்மன் ப்ரீத் சிங், ஸ்ரீஜேஷ்தான். அவர்களுடைய தனித்திறமைகள்தான் அணியை அரையிறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றன. 18 ஆண்டுகள் நம் தேசிய ஹாக்கி அணியில் இடம்பெற்றவர் ஸ்ரீஜேஷ்.
  • ‘பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கூறினீர்களே, அது குறித்து மறு பரிசீலனை உண்டா?’ என்ற கேள்விக்குப் புன்னகையை மட்டும் பதிலாக்கினர் ஸ்ரீஜேஷ்.டோக்கியோ ஒலிம்பிக் போல பாரிஸ் ஒலிம்பிக்கிலும் இந்தியா வெண்கலம் வென்றதன் மூலம், ஹாக்கி அணியின் பயணம் சிறப்பானதாகியிருக்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories