- ஹாங்காங்கில் சீன அரசால் நியமிக்கப்பட்ட நகர நிர்வாக அதிகாரிகளுக்கும், ஜனநாயக உரிமைகளைக் கோரும் ஹாங்காங் மக்களுக்கும் இடையிலான போராட்டம் மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது. சந்தேகப்படும்படியாக இருப்பவர்களை அல்லது குற்றச் செயல்கள் தொடர்பாக தேடப்படுபவர்களைக் கைதுசெய்து, நாடு கடத்த உதவும் மசோதாவை நிறைவேற்றும் வேலைகளில் ஹாங்காங் நகர ஆணையம் இறங்கியதை எதிர்த்து இம்முறை வீதிகளில் இறங்கினார்கள் ஹாங்காங் மக்கள்.
- லட்சக்கணக்கில் ஒன்றுதிரண்டவர்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், முயற்சியைக் கைவிடுவதாக அறிவித்து, இப்போதைக்குப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ஹாங்காங் நகர ஆணையம். ஆனால், ஜனநாயகத்துக்கு எதிரான கருமேகங்கள் இம்மியளவும் அகலவில்லை.
ஹாங்காங் நகர ஆணையம்
- பிரிட்டனின் நிர்வாகத்திலிருந்த ஹாங்காங், மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடத்தக்க சுதந்திர – தாராள – ஜனநாயகக் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தது. சீனாவிடம் 1997-ல் அது ஒப்படைக்கப்பட்டபோதே அதனுடைய கலாச்சாரம் என்னவாகும் என்ற கவலை ஏற்பட்டது. ‘இந்தப் பிரதேசம் சுயாட்சித்தன்மையுடன் நிர்வகிக்கப்படும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு அடிப்படைச் சட்டமே ஹாங்காங் நகர நிர்வாகத்தை வழிநடத்தும்’ என்று அப்போது சொன்னது சீன அரசு; இன்றளவும் சீனாவுடன் ஒப்பிடுகையில் ஹாங்காங் சூழல் தாராளமயமானதாகவே இருக்கிறது என்றாலும், ஹாங்காங் மீது தனது அதிகாரத்தை முழு அளவில் செலுத்தும் முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டேவருகிறது சீன அரசு.
- ஹாங்காங்கின் முதன்மை நிர்வாக அதிகாரி கேரி லாம், “வேறு இடங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு ஹாங்காங்குக்கு வந்து தலைமறைவாக வாழ்வோரைத் தண்டிக்க இச்சட்டம் வேண்டும்” என்று சொன்னார்.
தேடப்படும் நபர்
- ஆனால், ஏற்கெனவே ஜனநாயக வெளி சுருங்கிக்கொண்டிருக்கும் ஹாங்காங்கில் இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவோர் உட்பட எவரை வேண்டுமானாலும் சீன அரசு, ‘தேடப்படும் நபர்’ என்று அறிவித்து, அவர்களை சீனாவுக்குக் கொண்டுசென்றுவிடும்; இந்த வகையில் கைதுசெய்யப்படுபவர்கள் சீன அரசின் கொடுங்கோன்மையிலிருந்து தப்பவே முடியாது” என்பது மசோதாவை எதிர்ப்பவர்களின் வாதம்.
- ஜனநாயகத்துக்காகப் போராடுவோர் சுட்டிக்காட்டுவதுபோல, ஹாங்காங்கில் நகர நிர்வாகத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகள் அதிகரித்துவருவது உண்மைதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தகுதி நீக்கப்படுவது, ஜனநாயகச் செயல்பாட்டாளர்கள் தேர்தலில் நிற்க முடியாதபடிக்குத் தடுக்கப்படுவது;
- அரசியல் கட்சிக்குத் தடை விதிக்கப்படுவது என்று அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் புதிய மசோதாவின் மீது மக்கள் மத்தியில் அச்சத்தையும் எதிர்ப்பையும் உருவாக்கியிருப்பது நியாயமானதாகவே தோன்றுகிறது. ‘ஒரே நாடு – இரண்டு வித அரசு’ என்ற வாக்குறுதியையே சீனாவுக்கு ஹாங்காங் மக்கள் நினைவூட்ட விரும்புகின்றனர். ஹாங்காங்கின் தனித்தன்மை பாதுகாக்கப்படுவதே அங்கு அமைதி நிலவுவதற்கான நிரந்தரமான தீர்வாகவும் இருக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19-06-2019)