- ஹாங்காங் ஒரு நகரம். ஹாங்காங் ஒரு நாடு. அது தனித்துவமானது. அது 150 ஆண்டுகள் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. தன் தனித்துவத்தின் ஒரு சிறு பகுதியை அது பிரிட்டிஷாரிடமிருந்து பெற்றிருக்கலாம். 1997-ல் சீனாவோடு இணைந்தது. தன் தனித்துவத்தின் பிறிதொரு பகுதியை அது தாய் மண்ணிலிருந்து பெற்றிருக்கலாம். எனில், ஹாங்காங்கின் தனித்துவத்தின் பெரும் பகுதியை அதன் குடிமக்களே உருவாக்கினார்கள். வரலாறு இதற்கான நிரூபணத்தை இதற்கு முன்பும் எழுதியிருக்கிறது. கடந்த வாரம் மீண்டும் ஒரு முறை எழுதியது.
- ஏகதேசம் சென்னைப் பெருநகரத்தின் பரப்பளவும் மக்கள்தொகையும் உள்ள ஹாங்காங்கை ஜூன் 9-ம் தேதி உலகம் திரும்பிப் பார்த்தது. அன்றுதான் வெள்ளுடை தரித்த ஹாங்காங் மக்களின் பேரணி நடந்தது. 10 லட்சம் பேர் அணிவகுத்தனர் என்றனர் ஏற்பாட்டாளர்கள். 4 லட்சம் பேர் என்றது காவல் துறை.
- எப்படியாயினும் நகரின் பிரதானத் தெருக்கள் ததும்பி வழிந்தன. அவர்களது கோஷங்களிலும் பதாகைகளிலும் ஒரே கோரிக்கைதான் இருந்தது. ஹாங்காங் கைதிகளை விசாரணைக்காக சீனாவிடம் கைமாற்றலாம் என்கிற மசோதாவை நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது அரசு. அதைத் திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் கோரிக்கை.
ஒரு தேசம் ஈராட்சி முறை
- சீனாவின் நீதித் துறை வெளிப்படையானதல்ல என்கிற அச்சம் பல அணிகளாய்ப் பிரிந்திருந்த ஜனநாயக ஆதரவாளர்களை ஒன்று திரட்டியது. ஒரு வாரம் நீண்ட விவாதங்கள், போராட்டங்களின் முடிவில் ஜூன் 15-ம் தேதி மசோதாவை இப்போதைக்கு முன்னெடுக்கப்போவதில்லை என்று அறிவித்தது ஹாங்காங் அரசு. எனினும், போராட்டக்காரர்கள் திருப்தியுறவில்லை. மசோதாவைப் திரும்பப்பெற வேண்டும் எனும் கோரிக்கையோடு அவர்கள் ஜூன்-16 அன்று மீண்டும் அணிவகுத்தார்கள். இம்முறை இது கருஞ்சட்டைப் பேரணியாக இருந்தது. முந்தைய வாரத்தைவிட இம்முறை திரண்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக இருந்தது.
- ஹாங்காங்கின் ஆட்சி முறையே தனித்துவமானது. 1997 ஜூன்-30 நள்ளிரவில் அப்போதைய சீன அதிபர் ஜியாங் ஜெமின், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் கைகளை இறுக்கமாகக் குலுக்கியபோது 150 ஆண்டு கால காலனியாட்சி முடிவுக்கு வந்தது. மறைந்த சீனத் தலைவர் டெங் ஜியோ பிங்கின் ‘ஒரு தேசம் ஈராட்சி முறை’யும் அமலுக்கு வந்தது. அதாவது, சீனத்தின் மைய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளபோதும், ஹாங்காங் ‘சிறப்பு நிர்வாகப் பகுதி’யாக விளங்கும்.
- ஹாங்காங்கின் தடையற்ற வர்த்தகமும் திறன்மிக்க துறைமுகமும் உலகப் புகழ்பெற்றவை. நகரம் பாதுகாப்பானது. சட்டத்தின் மாட்சிமை பேணப்படுகிறது. பேச்சு சுதந்திரம் நிலவுகிறது. கல்வியில் சிறந்தது. நிர்வாகம் ஊழலற்றது. விரைந்து விரைந்து அலுவலகம் சென்று, விரைந்து விரைந்து வீடு திரும்பும் ஹாங்காங் மக்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்கள். ஒரு சமூகத் தேவை என்று வந்தால் ஒன்றுபடத் தயங்காதவர்கள்.
- 2003-ல் நகரைத் தாக்கியது ஸார்ஸ் எனும் தொற்றுநோய். 1,800 பேரைப் பாதித்து 300 பேரைக் காவு கொண்டது. இதற்கு முன்பு மனித குலம் எதிர்கொண்டிராத நோயோடு பொருதியது மருத்துவத் துறை. பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தியது நிர்வாகம். பல்கலைக்கழகங்கள் நோய் முதல் நாடி வைரஸின் மரபைக் கட்டவிழ்த்தன. மக்களும் அரசும் ஒற்றைக் கட்டாக நின்று நோயைப் புறங்கண்டனர்.
பெய்ஜிங் வரை உயர்ந்த ஹாங்காங் அதிர்ச்சி அலை
- இந்த இக்கட்டான தருணத்தில் ஹாங்காங் அரசியல் சட்டமான ஆதார விதிகளில் பிரிவு 23-ஐச் சட்டமாக்கும் முயற்சியில் இறங்கியது அரசு. தேசத்துரோகம், பிரிவினை, ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி போன்றவற்றை அடக்கக் கொண்டுவந்த தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் முன்வரைவு சில கடுமையான விதிகளைக் கொண்டிருந்தது. இதற்கு எதிராக 2003 ஜூலை 1-ம் தேதி 5 லட்சம் மக்கள் வீதிகளில் திரண்டனர். ஹாங்காங்கில் எழுந்த அதிர்ச்சி அலைகள் பெய்ஜிங் வரை உயர்ந்தன. அரசு சட்டத்தை மீளப்பெற்றது. அப்போதைய செயலாட்சித் தலைவர் துங் சீ வாவ் பின்னாளில் பதவி விலகினார். அதற்கு இந்தப் பேரணியே காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுவதுண்டு.
- 2014-ல் நடந்த மாணவர்களின் ‘சென்ட்ரலை ஆக்கிரமிப்போம்’ போராட்டம் வித்தியாசமானது. ஹாங்காங்கின் ஜனநாயகம் முழுமையானதல்ல. அதன் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். செயலாட்சித் தலைவரை 1,200 உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு தேர்ந்தெடுக்கிறது. உறுப்பினர்கள் பலரும் பெய்ஜிங்குக்கு அனுசரணையானவர்கள். செயலாட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டவர். செயலாட்சித் தலைவரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் சென்ட்ரல் போராட்டத்தின் சாரம்.
- மாணவர்கள் நகரின் மையப் பகுதிகளில் சாலைகளில் கூடாரமிட்டார்கள். இந்த ஆக்கிரமிப்பு இரண்டரை மாதம் நீடித்தது. ஆனால், பரவலான ஆதரவைப் பெறவில்லை. 2017-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்போதைய செயலாட்சித் தலைவர் கேரி லாம், உயர்நிலைக் குழுவினரால்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அவர்தான் கடந்த பிப்ரவரி மாதம் கைதிகளை விசாரணைக்காக நாடு கடத்தும் மசோதாவை முன்வைத்தார். அப்போது ஒரு ஹாங்காங் இளைஞன் தன் காதலியை தைவானில் கொன்றுவிட்டு, அரவமின்றி ஹாங்காங் திரும்பிவிட்டான். குற்றம் கண்டறியப்பட்டது. ஆனால், குற்றவாளியை தைவானுக்குக் கைமாற்ற முடியவில்லை. இரண்டு நாடுகளுக்கிடையில் அதற்கான ஒப்பந்தம் இல்லை. அதற்கான மசோதாவைத் தயாரித்தது ஹாங்காங். அதில் தைவானோடு சீனாவையும் சேர்த்தது. இந்த மசோதாவில் 36 விதமான குற்றச் செயல்கள் அடங்கும். இந்தக் குற்றங்களை இழைத்தவர்கள், ஏழாண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறத்தக்கவர்கள், இப்படியானவர்களை பெய்ஜிங் வேண்டிக்கொண்டால், ஹாங்காங் நீதிமன்ற அனுமதியோடு சீனாவுக்குக் கைமாற்றலாம் என்பதுதான் மசோதாவின் சாரம்.
அரசுகளின் டி.என்.ஏ. அப்படி
- ஹாங்காங்கின் நீதித் துறை சுயேச்சையானது, வெளிப்படையானது. சீனாவில் கைதிகள் அப்படி முறையாக விசாரிக்கப்பட மாட்டார்கள் என்பது போராட்டக்காரர்களின் அச்சம்; ஏனென்றால், சீன அரசின் அபிலாஷைகளுக்கு முரணாக சீன நீதித் துறை செயல்படுவது அரிது. ஆக, போராட்டக்காரர்கள் இந்த மசோதாவை ஏற்கத் தயராக இல்லை. அதைத் திரும்பப்பெற வேண்டும் என்கிறார்கள். ஜூன்-16 கருஞ்சட்டைப் பேரணி 7 மணி நேரம் நீண்டது. பேரணி முடியும் முன்பாகவே செயலாட்சித் தலைவர் கேரி லாம், மக்களிடம் அவநம்பிக்கையும் துயரமும் விளையக் காரணமாக இருந்த மசோதாவை முன்னெடுத்ததற்காக மன்னிப்பைக் கோரினார்.
- 2003 தேசப் பாதுகாப்புச் சட்டத்தை அரசு திரும்பப்பெற்றது. கைதிகளைக் கைமாற்றும் மசோதாவையும் அரசு திரும்பப்பெறக் கூடும். அப்படித் திரும்பப்பெறாவிட்டாலும் இது வருங்காலத்தில் அரங்கேற்றப்படாது என்று கேரி லாமின் அமைச்சரவை சகாக்களே சொல்கிறார்கள். இதற்குக் காரணம் ஹாங்காங் மக்கள். அவர்கள் அதிகாரத்தோடு பேசத் தயங்காதவர்கள். அது அவர்கள் டி.என்.ஏ.வில் இருக்கிறது என்கிறார் பத்திரிகையாளர் ஜெஃபி லாம். அதிகாரத்துக்கு எதிராக அஞ்சாமல் மக்கள் அணிதிரண்டால் எந்த அரசும் பணிந்துதான் ஆக வேண்டும்; அரசுகளின் டி.என்.ஏ.வும் அப்படித்தான் இருக்கிறது!
நன்றி: இந்து தமிழ் திசை (20-06-2019)