TNPSC Thervupettagam

ஹாங்காங் தேர்தல் முறையை நாம் பரிசீலிக்கலாமா?

April 30 , 2019 2067 days 1499 0
  • இந்தியா முழுவதும் தேர்தல் களை கட்டியிருக்கிறது. வாக்குறுதிகளும் குற்றச்சாட்டுகளும் காற்றை நிறைக்கின்றன. இதற்கிடையே தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த குரல்களையும் கேட்க முடிகிறது. கட்சிகளின் தேர்தல் செலவுகள், வேட்பாளர்களின் நடத்தை விதிகள் முதலானவையே அதிகம் பேசப்படுகின்றன. இந்தச் சீர்திருத்தங்கள் அவசியமானவைதான். அதேவேளையில், இப்போதைய தேர்தல் முறையான ‘நேரடித் தேர்தல்’ முறைக்கு மாற்றான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை குறித்து இந்த முறையும் பல குரல்களைக் கேட்க முடிகிறது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை தேர்வை ஹாங்காங் தேர்தலில் அருகில் இருந்து பார்த்தவன் என்ற முறையில் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது.
  • இந்தியாவிலும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கு நாடுகளிலும் நேரடித் தேர்தல் முறையே பின்பற்றப்படுகிறது. அதிக வாக்குகள் பெறுகிறவர், அந்தத் தொகுதியின் உறுப்பினராவார். இது எளிதானது. ஆண்டாண்டு காலமாய்ப் பயன்பாட்டிலும் இருக்கிறது. நேரடித் தேர்தலில் வெற்றி பெறுகிறவர் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கலாம்; ஆனால், பல வேளைகளில் இது பெரும்பான்மை வாக்காளர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதில்லை. பிரதானப் போட்டியாளர்கள் தவிர, சிறிய கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் கணிசமான வாக்குகள் பெற்றபோதும், அவை நேரடித் தேர்தலில் வெற்றிக் கோட்டைத் தொடுவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை.
பயனடையும் பெரிய கட்சிகள்
  • ஓட்டப்பந்தயத்தில்கூட வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் உண்டு. நேரடித் தேர்தல் முறையில் இல்லை. இங்கே ஒரு கட்சி பெறுகிற வாக்குகளுக்கும் அடைகிற தொகுதிகளுக்கும் தொடர்பு இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 31% வாக்குகளைப் பெற்ற பாஜக 282 இடங்களைக் கைப்பற்றியது. இது மொத்தமுள்ள 543 இடங்களில் 52% ஆகும். 2009, 2004 தேர்தல்களில் இந்தத் தேர்தல் முறையால் ஆதாயம் அடைந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 37% (2009), 35% (2004) வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தது.
  • விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை இதற்கெல்லாம் மாற்றாக அமைகிறது. இந்த முறையில் கட்சிகள் அல்லது குழுக்கள் அல்லது சுயேச்சைகள் தாங்கள் பெறுகிற வாக்குகளின் விகிதாச்சாரத்தில் இடங்களைப் பெறுவார்கள். இதில் பல வடிவங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
பட்டியல் வாக்கு முறை
  • பல ஐரோப்பிய நாடுகளிலும் ஹாங்காங்கிலும் பின்பற்றப்படுவது ‘பட்டியல் வாக்கு முறை’ என்பதாகும். இதில் தொகுதிகள் பெரியதாக இருக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று முதல் 10 வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு கட்சியும் தொகுதியில் உள்ள மொத்த இடங்களுக்குப் போட்டியிடலாம். ஐந்து இடங்கள் உள்ள தொகுதிக்கு ஐந்து வேட்பாளர்களை ஒரு பட்டியலின் கீழ் அவை களம் இறக்கலாம். சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடலாம்.
  • 74 லட்சம் மக்கள்தொகையும், 38 லட்சம் வாக்காளர்களையும் கொண்ட ஹாங்காங் ஐந்து தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஐந்து தொகுதிகளிலுமிருந்து 35 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஒரு தொகுதியில் 3 இடங்களுக்கு, இரண்டு கட்சிகளும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுவதாகக் கொள்ளலாம். மொத்தம் 3 லட்சம் வாக்குகள் பதிவாகின்றன எனலாம். அப்போது ஓர் இடத்தைப் பெறுவதற்கு 3,00,000/3 = 1,00,000 வாக்குகள் தேவை. இது தொடக்கநிலை மதிப்பு எனப்படுகிறது. முதல் சுற்றில் பெறுகிற ஒவ்வொரு 1,00,000 வாக்குகளுக்கும் ஒரு இடம் கிடைக்கும்.
  • கட்சி-1, கட்சி-2, சுயேச்சை-1, சுயேச்சை-2 ஆகியோர் முறையே 1,20,000; 1,10,000; 60,000; 10,000 வாக்குகள் பெறுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். முதல் சுற்றில், தொடக்கநிலை மதிப்பைக் காட்டிலும் கூடுதலாகப் பெற்ற கட்சி-1ம் கட்சி-2ம் தலா ஒரு இடத்தைப் பெறும். எஞ்சிய வாக்குகள் இரண்டாம் சுற்றுப் பரிசீலனைக்கு வரும். அப்போது கட்சி-1,
  • கட்சி-2, சுயேச்சை-1, சுயேச்சை-2 ஆகியோரின் கணக்கில் முறையே 20,000; 10,000; 60,000; 10,000 வாக்குகள் இருக்கும். இதில் அதிக வாக்குகளைப் பெற்ற சுயேச்சை-1 மூன்றாவது இடத்தைக் கைப்பற்றுவார். இந்த முறையில் கட்சிகள் பெற்ற வாக்குகளுக்கும் இடங்களுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருக்கும்.
கூடுதல் ஜனநாயகம்
  • இப்போது 2016-ல் நடந்த ஹாங்காங் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம். இங்கே அரசியல் கட்சிகளை பெய்ஜிங் ஆதரவுக் கட்சிகள் என்றும், ஜனநாயக ஆதரவுக் கட்சிகள் என்றும் பிரிக்கலாம். இத்துடன் 2014-ல் கூடுதல் ஜனநாயகத்துக்காக வீதிகளில் இறங்கிப் போராடிய இளைஞர்கள் தங்களை உள்ளூர்வாசிகள் என்று அழைத்துக்கொண்டு தனியே களமிறங்கினர். இந்த மூன்று பிரிவினரும் முறையே 40%, 36%, 19% வாக்குகளைப் பெற்றனர். இவர்கள் பெற்ற இடங்கள் முறையே 16, 13, 6. அதாவது இவர்கள் பெற்ற இடங்களின் வீதம் 46%, 36%, 17%. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் பெற்ற வாக்குகளுக்கும் இடங்களுக்கும் பெரிய இடைவெளி இருப்பதில்லை என்பது புலனாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories