- இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டன. ஜூன்-9 அன்று ஹாங்காங் வீதிகளில் லட்சக்கணக்கானோர் அணிவகுத்தனர்.
குற்றவாளிகளை சீனாவுக்கு நாடுகடத்த வகைசெய்யும் மசோதா ஒன்றை அரசு முன்மொழிந்திருந்தது. இந்த மசோதாவைப் பேரணி எதிர்த்தது. ஹாங்காங் அரசு மசோதாவை முடக்கிவைப்பதாக அறிவித்தது. ஆனால், போராட்டக்காரர்கள் பலருக்கும் அந்த உறுதிமொழி மட்டும் போதுமானதாக இல்லை. மசோதாவைத் திரும்பப்பெற வேண்டும், செயலாட்சித் தலைவர் பதவி விலக வேண்டும் என்று பல கோரிக்கைகள் அவர்களுக்கு இருந்தன. போலீஸார் எதிர்பாராத இடங்களில், எதிர்பாராத நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன. பிரதான வீதிகளிலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விமான நிலையத்திலும் போராட்டக்காரர்கள் போலீஸாரை எதிர்கொண்டனர். இந்த முறை அவர்களது எண்ணிக்கை குறைந்திருந்தது. ஆனால், பலரும் அகிம்சையைக் கீழே போட்டுவிட்டனர்.
- ஹாங்காங் விமான நிலையம் உலகின் பரபரப்பான நிலையங்களில் ஒன்று. போராட்டக்காரர்கள் வெளிநாட்டுப் பயணிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட்-9 அன்று விமான நிலையத்தின் வருகை வளாகத்தில் கூடினர். ஆனால், அடுத்த சில தினங்களில் நடந்தவை அவர்களது நோக்கத்துக்கு நேரெதிராக இருந்தன. கோஷங்களோடும் பதாகைகளோடும் அமைதி வழியில் தொடங்கிய ஆர்பாட்டம், ஆகஸ்ட்-13 அன்று புறப்பாட்டுப் பயணிகளைத் தடுத்து நிறுத்துவதுவரை போனது. ஆகஸ்ட்-14 அன்று உளவாளிகள் என்று சந்தேகப்பட்ட இரண்டு சீனர்களின் கைகளைக் கட்டித் தாக்கவும் செய்தனர். நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. செல்வந்த நாடான ஹாங்காங்கின் பங்குச் சந்தை சரிந்தது. சட்டத்தின் மாட்சிமை பேணப்படுகிற நகரம் என்கிற பெயருக்குக் களங்கம் நேர்ந்தது.
தலைமை இல்லாத போராட்டம்
- இந்த இடத்தில் முன்னாள் பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங் 1997 முதல் சீனாவின் ஒரு மாநிலமாக இயங்கிவருகிறது என்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம். சீனாவின் பிற மாநிலங்களைப் போல் அல்லாமல், ஹாங்காங் சுயாட்சி மிக்க மாநிலம். முதலாளித்துவம், பேச்சுச் சுதந்திரம், தனி நாணயம், தனி அரசமைப்புச் சட்டம், கட்டற்ற துறைமுகம் போன்றவை அதன் சில அடையாளங்கள். சீனாவின் தலையீடு அந்த அடையாளங்களைச் சிதைக்கும் என்று ஹாங்காங் இளைஞர்கள் அஞ்சுகிறார்கள்... போராடுகிறார்கள்.
- போராட்டத்தை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் தலைமை இல்லை. பல்வேறு குழுக்கள் சமூக வலைதளங்களின் மூலமாகத் தங்களை ஒருங்கிணைத்துப் போராடிவருகின்றனர்.இந்த இளைஞர்களால் ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை: நாடு கடத்தும் மசோதா பின்வாங்கப்பட வேண்டும், நடுநிலையான குழு ஒன்று, போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் நடந்த கைகலப்புகளை விசாரிக்க வேண்டும், போராட்டத்தைக் கலவரம் என்று அழைக்கக் கூடாது, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை மீளப்பெற வேண்டும், இடைநிறுத்தப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும். இவற்றில் முதல் நான்கு கோரிக்கைகளை ஹாங்காங் அரசாலும் அதன் செயலாட்சித் தலைவர் கேரி லாமாலும் முன்னெடுக்க முடியும். கடைசிக் கோரிக்கைக்கு சீன அரசின் இசைவு வேண்டும். ஹாங்காங்கின் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள்தான் தேர்ந்தெடுக்கின்றனர். ஆயின் செயலாட்சித் தலைவரை மைய அரசுக்கு இணக்கமான சிறிய குழுதான் தேர்ந்தெடுக்கிறது. செயலாட்சித் தலைவரைத் தாங்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பரந்துபட்ட மக்களின் விருப்பம். ஹாங்காங் முழுமையான ஜனநாயக நாடன்று. அதற்காக, தங்களது குரலை உச்சத்தில் ஒலிக்கச் செய்வதில் ஹாங்காங் மக்கள் தயங்கியதேயில்லை. மத்திய-மாநில அரசுகள் அவர்களது ஜனநாயக வேட்கையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சரியும் பொருளாதாரம்
- போராட்டக்காரர்களின் கோரிக்கைகளில் மக்களின் வாழ்நிலை இடம்பெறவில்லை. ஆனால், போராட்டத்துக்கு அதுவும் ஒரு உந்து சக்திதான். தலைக்கு மேல் சொந்தமாக ஒரு கூரை என்பது உலகெங்கும் வாழும் மக்களின் கனவாகும். ஹாங்காங்கில் இதை நனவாக்கிக்கொள்வது எளிதன்று. எல்லா நிலமும் அரசுக்குச் சொந்தமானது. பொது ஏலங்களின் மூலமாக ரியல் எஸ்டேட் முதலாளிகள் இவற்றை வாங்கி அடுக்கங்களைக் கட்டுவார்கள். ரியல் எஸ்டேட் முதலாளிகள் ஐந்தாறு பேர்தான் மொத்தச் சந்தையையும் கட்டுப்படுத்துகிறார்கள். உலக அளவில் வீட்டு விலையும் வாடகையும் அதிகமான நகரங்களில் ஒன்று ஹாங்காங். சாதாரண வேலைகளில் இருப்பவர்கள் வீடுகள் வாங்குவது மிகவும் கடினமாகிவிட்டது. கட்டுப்படியாகக்கூடிய விலையில் மக்களுக்கு வீடுகள் கிடைக்க வேண்டும். இதை வீட்டுவசதி வாரியத்தால் செய்ய முடியும்.
- ஹாங்காங்கின் பொருளாதார நிலை சரிந்துகொண்டிருக்கிறது. இதை மனதில் கொண்டு நிதி அமைச்சர் பால் சான் ஆகஸ்ட்-15 அன்று ஒரு சிறிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல்செய்தார். 150 பில்லியன் ஹாங்காங் டாலர் (ரூ.1,36,000 கோடி) மதிப்பிலான சலுகைகளை அறிவித்தார். வருமான வரிக் குறைப்பு, முதியவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் உதவித்தொகை அதிகரிப்பு, சிறுதொழில் முனைவோருக்குச் சலுகைகள், மருத்துவ ஒதுக்கீடுகள் முதலானவை இதில் அடங்கும். ஓர் அரசியல் பிரச்சினைக்குப் பொருளாதாரச் சலுகைகள் தீர்வாகிவிட முடியாது. எனில், இதை நல்லெண்ண சமிக்ஞையாக மக்கள் எடுத்துக்கொள்வார்கள் என்பது அரசின் எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
இரு தரப்பும் இணையட்டும்
- ஹாங்காங் கல்வியில் சிறந்த நாடு. அதன் பாதுகாப்பும் சட்டத்தின் மாட்சிமையும் பல்லாண்டு கால உழைப்பில் உருவானவை. அவற்றைப் பங்கப்படுத்தித் தாங்கள் எதையும் அடைந்துவிட முடியாது என்பதைப் போராடும் இளைஞர்கள் உணர வேண்டும். மக்களின் வாழ்நிலையையும் அரசியல் வேட்கையையும் உணர்ந்து செயலாற்ற அரசு முன்வர வேண்டும்.
- இதற்கு முன் 2003-ல் ஹாங்காங் ஓர் இக்கட்டை எதிர்கொண்டது. ஸார்ஸ் எனும் முன்னர் அறிந்திராத ஒரு தொற்றுநோய், நகரத்தில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டது. ‘சுவாசிப்பதுகூட மரணத்துக்குக் கதவு திறந்துவிடுமோ’ என்று அஞ்சப்பட்ட அசாதாரண நிலைமை நிலவியது. இப்போதுபோலவே பல நாடுகள் ஹாங்காங்கைத் தவிர்க்கச் சொல்லித் தம் குடிமக்களை அறிவுறுத்தின. இப்போதுபோலவே பங்குச் சந்தை பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. வணிகம், தொழில், சுற்றுலா அனைத்தும் பாதிக்கப்பட்டன. ஆனால், மக்களும் அரசும் ஒற்றைக்கட்டாக நின்று நகரத்தை மீட்டெழுப்பினார்கள். அவர்கள் மீண்டும் ஒருமுறை அதைச் செய்துகாட்ட வேண்டும். இரு தரப்பும் இணைந்து செயலாற்றுவதன் மூலமே அதைச் சாதிக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை(20-09-2019)