TNPSC Thervupettagam

ஹிட்லரின் நெருக்கமான நண்பர் - ருடால்ஃப் ஹெஸ்

January 23 , 2025 13 hrs 0 min 12 0

ஹிட்லரின் நெருக்கமான நண்பர் - ருடால்ஃப் ஹெஸ்

  • இரண்டாவது உலகபோர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த நேரம். ஹிட்லரின் நாஜிப் படை தோல்வியும் வெற்றியும் மாறி மாறி ஹிட்லருக்குச் சந்தோஷத்தையும் கோபத்தையும் கொடுத்துக்கொண்டிருந்தது. சோவியத் ரஷ்யாவுடன் தாக்குதல் நடத்த ஜெர்மன் திட்டமிட்டிருந்த நேரம் அது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. உலக நாடுகளை, முக்கியமாக பிரிட்டனை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம் அது.
  • 1941ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி இரவு. இங்கிலாந்தில் எல்லையோரமாக உள்ள ஒரு கிராமம். டேவிட் மக் லீன் என்கிற விவசாயி, வரலாற்றில் தனது பெயர் குறிப்பிடப்போகும் நாளாக அன்றைய தினம் இருக்கப்போவதை அறியாமல், தூங்கச் சென்றார். ஒரு விமானத்தின் சத்தம் மிக அருகே கேட்டது. வெடி வெடித்ததைப் போல அவரது வீடு அதிர்ந்தது. பதறியடித்து வெளியே வந்து பார்த்தார். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. கொஞ்ச தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. இருட்டில் தட்டுத் தடுமாறிப் போய்ப் பார்த்தார்.

விமானத்தில் வந்தவர் யார்?:

  • பாராசூட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ராணுவ உடையணிந்த ஒருவர் முயன்று கொண்டிருப்பது தெரிந்தது. பாராசூட்டிலிருந்து விடுபட்ட மனிதன் முகத்தில் வலியால் துடிப்பதற்கான அறிகுறிகள். நடக்க முடியாமல் தடுமாறி, லேசாகத் தாங்கி நடந்தார். விவசாயியிடம் நெருங்கி வந்தவர், ஆங்கிலத்தில், “நான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன். ஹாமில்டன் பிரபுவுக்கென்று முக்கியமான செய்தியுடன் வந்திருக்கிறேன்” என்றார்.
  • அந்த விவசாயி, வீட்டுக்கு அருகில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் படையினருக்குத் தவகல் கொடுத்தார். அடுத்த சில விநாடிகளில் பிரிட்டிஷ் அரசின் ராயல் சிக்னல் படைப்பிரிவின் வீரர்கள் அந்த விவசாயியின் வீட்டுக்குள் குவிந்து விட்டார்கள். அந்த ஜெர்மானியன் கைது செய்யப்பட்டார். குதிகால் வலியால் துடித்த அவரை அருகிலிருந்த மரிஹில்ஸ் பாரெக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டுத் தங்கள் உயரதிகாரிகளுக்குத் தவகல் தந்தனர்.
  • அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவர் அருகிருலிருந்த சகாவிடம் தனக்கேற்பட்ட சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டார். “இந்த ஆளை எங்கோ பார்த்த ஞாபகம். ருடால்ஃப் ஹெஸ் என்று நினைக்கிறேன்” என்றான். அடுத்த கணம் அங்கிருந்த பிற அதிகாரிகள் வாய்விட்டுச் சிரித்தனர். “ஆனாலும் உனக்குக் கற்பனை அதிகம்தான்” என்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அந்த ஜெர்மானியன், “ஹாமில்டன் பிரபுவைச் சந்திக்க வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அவரைப் புலம்ப விட்டுவிட்டு, அவர் சந்திக்க விரும்பும் ஹாமில்டன் பிரபுவைப் பார்ப்போம்.

ஹாமில்டன் பிரபு:

  • ஹாமில்டன் பிரபு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர். ராயல் ஏர்போர்ஸ் என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் விமானப் படைப் பிரிவில் மூத்த ராணுவ அதிகாரியும்கூட. 1941ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி இரவு டர்ன்ஹவுஸில் இருந்த அவரது அலுவலகத்திற்கு அவசரமாக ஒரு தொலைபேசி அழைப்பு. கையிலெடுத்துத் தகவலை உள்வாங்கிக் கொண்ட ஹாமில்டனின் முகம் இறுகிப் போனது. போர் விமானத்தில் வந்து பாராசூட் மூலம் குதித்த ஒரு ஜெர்மானியன், அவரைச் சந்திக்க விரும்புவதாக வந்த தகவல்தான் அவரை இறுக்கமாக்கியது.
  • யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், எதிரிமுகாமைச் சேர்ந்த ஒருவன் தன்னைச் சந்திக்க விழைவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த ஜெர்மானியன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்தார். அவனைச் சந்திக்கவும் செய்தார். ஆனால், ஜெர்மன் ஆசாமி அப்படியொரு வார்த்தை வெடியைக் கொளுத்திப்போடுவான் என அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பரஸ்பர முகமனுக்குப் பிறகு, “என் பெயர் ருடால்ஃப் ஹெஸ்” - ஜெர்மன் ஆசாமி தன் பெயரைச் சொன்னார். பெயரைச் சொன்னாரா அல்லது வெடிகுண்டை வீசினாரா என்கிற சந்ததேகம் ஹாமில்டன் பிரபுவுக்கு ஏற்பட்டது.

மூன்றாவது முக்கியப் பிரதிநிதி:

  • ருடால்ஃப் ஹெஸ், இரண்டாம் உலகப்போர் நடக்க மூலகர்த்தாவும், ஜெர்மானியச் சர்வாதிகாரியுமான ஹிட்லரின் நெருங்கிய சகா. ஹிட்லரின் நம்பிக்கைக்கு உரியவர். நாஸி ஜெர்மனியின் மூன்றாவது முக்கியப் பிரதிநிதி. ஹாமில்டன் பிரபு, ஹெஸ்ஸைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால், இப்படி ரத்தமும் சதையுமாக அந்த மனிதரை, அதுவும் பிரிட்டிஷ் மண்ணில் சந்திக்க நேருமெனக் கனவில்கூடக் கண்டதில்லை.
  • ஹாமில்டனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ருடால்ஃப் ஹெஸ் ஜெர்மானிய அதிகார வரிசையில் முக்கியமான நபரென்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அந்நபரை இப்படி யுத்தக் காலத்தில் பிரிட்டன் எல்லைக்குகுள் சந்திக்க நேருமென்றோ, எதிரெதிரே அமர்ந்து உரையாட முடியுமென்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
  • எனினும், கண்முன்னே நடப்பதை நம்புவதா கூடாதா என்கிற குழப்பம். வந்திருப்பவன் ஒருவேளை பைத்தியக்கார ஆசாமியாக இருப்பானோ, நாம்தான் தீர யோசிக்காமல் வந்து விட்டோமோ? இவையெல்லாம் கேலிக்கூத்தென்று மனதில் தோன்றியது. ஹாமில்டன் குழப்பத்தில் இருக்க, அந்த ஜெர்மானியன் தன்னை ருடால்ஃப் ஹெஸ் என்பதை நிரூபிப்பது அவசியமென்று உணர்ந்தார். சில ஆதாரங்களைக் காட்டினார். அந்த ஆதாரங்கள், அவர் ருடால்ஃப் ஹெஸ்தான் என்பதை ஹாமில்டனுக்கு உணர்த்தின. யோசனையில் ஆழ்ந்தார் ஹாமில்டன். அவர் யோசித்து முடிப்பதற்கு முன் ருடால்ஃப் ஹெஸ்ஸைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்த்துவிடுவோம்.

முதல் சந்திப்பு:

  • சிறு வயதில் இருந்தே, ஹெஸ்ஸுக்குப் பிடித்த துறையாக அரசியல் இருந்து வந்திருக்கிறது. மியூனிச் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்த காலம்தொட்டே அரசியல் அறிஞர் ஹௌஸ்ஷோபர் போன்றவர்களின் அரசியல் சிந்தனைகளில் தீவிரப் பிடிப்புடன் இருந்தார்.
  • யுத்தத்தின் போது கவசப்படையில் பணியாற்றியிருக்கிறார். இரண்டு முறை போரில் படுகாயமுற்று உயிர் பிழைத்தவர். அதன் பிறகு, விமானப்படையில் சேர்ந்து மளமளவென்று உயர் பதவியை எட்டினார். முதல் போரில் ஜெர்மனுக்கு நேர்ந்த தோல்வியை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஜெர்மன் நாடு இழந்த புகழை மீட்கக்கூடிய ஓர் அதிபரை எங்ஙனம் உருவாக்கப்போகிறோம் என்று சக தோழர்களிடம் ஆதங்கப்பட்டார்.
  • ஹெஸ்ஸின் ஆதங்கம் ஹிட்லர் காதுக்கு எட்டியது. சோஷலிஸ்டு கட்சியின் நிகழ்வொன்றில் ஹிட்லர்-ஹெஸ் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. ஹெஸ், அவரிடம் ஹௌஸ்ஷோபர் சிந்தனைகள் குறித்து உரையாடினார். அன்று முதல் ஹெஸ், ஹிட்லரின் நெருங்கிய சகாவானார். 1933ஆம் ஆண்டுவரை அவருடைய துணை நிர்வாகியாகவும், அவருடைய அந்தரங்கச் செயலாளராகவும் பணியாற்றினார். அவரிடம் ஹிட்லர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஹிட்லரின் எதிரிகளை அழிக்க எடுத்த நடவடிக்கைகளிலும் சரி, 1935ஆம் ஆண்டில் நிகழ்ந்த யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சரி, ஹெஸ்தான் முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார். அந்த உத்தரவுகளில் கையொப்பமும் இட்டிருக்கிறார்.

கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்கு:

  • நாளுக்கு நாள் ஹெஸ்ஸின் செல்வாக்கு ஆட்சியில் மட்டுமல்ல, சோஷலிஸ்டு கட்சியின் நிர்வாகத்திலும் அதிகரித்தது. ஹெஸ்ஸின் மேற்பார்வையிலேயே பல சட்ட வரைவுகள் கொண்டுவரப்பட்டன. 1938 முதல் நாட்டின் ரகசிய அமைச்சகத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து யுத்தத்திற்கான திட்டங்களை வகுத்தார். ஜெர்மன் நாட்டிற்கும் பிற நாடுகளுக்குமிடையே பகைமை வெளிப்படையாகத் தெரிய வந்தபோது, ரை (Reich) பாதுகாப்புச் சபையின் ஆறு உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.
  • தமது அரசியல் குருவான ஹௌஸ்ஷோபர் மனைவி ஒரு யூதர் என்று அறிய வந்தபோது அவரை வதை முகாமிலிருந்து காப்பாற்றியவர். குறிப்பாக ஹிட்லர், கோரிங்கிற்கு அடுத்த இடத்தை வழங்கியதன் மூலம் தமது நம்பிக்கைக்கு உரியவர் ஹெஸ் என்பதை உலகுக்கு அறிவித்திருந்தார்.
  • இந்நிலையில்தான், ஜெர்மனுக்கும் பிரிட்டனுக்கும் சமாதானம் செய்து வைக்கிறேன் பேர்வழி என்று, தனி போர் விமானத்தில் பிரிட்டனுக்கு வந்து பாராசூட்டில் குதித்தார். தன் பயணத்தின் நோக்கத்தை ஒரு கடிதத்தில் விரிவாக எழுதி ஹிட்லருக்கு அனுப்பி வைத்துவிட்டுத்தான் இந்தப் பயணத்தைத் தொடங்கினார்.
  • மீண்டும் ருடால்ஃப் ஹெஸ் படுத்திருக்கும் மருத்துவமனைக்கு வருவோம்.
  • “உங்களுடன் சமாதானம் பேச வந்திருக்கிறேன்... இறுதி வெற்றி எங்களுக்குத்தான் என நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும், தேவையின்றி உயிரிழப்புகள் எதற்கு? இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு நாம் ஏன் காரணமாக வேண்டும்?” என்ற ருடால்ஃப் ஹெஸ், சமாதானத்துக்குச் சில நிபந்தனைகளையும் விதித்தார்.
  • கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்த ஹாமில்டன் பிரபு, “மன்னிக்க வேண்டும்... பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பாக எந்தவித வாக்குறுதியையும் உங்களுக்கு அளிக்க முடியாது. அதற்கான அதிகாரம் என்னிடமில்லை” என்பதைப் பொறுமையுடன் விளக்கிய பின்னர், காலதாமதமின்றித் தனது அலுவலகத்திற்கு ஹாமில்டன் பிரபு திரும்பினார்.
  • பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரென அவர் அறியப்பட்டிருந்தாலும், யுத்தப் பிரச்சினையில் சிக்கியிருந்த பிரிட்டனில் அவருக்குப் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. ஒருவழியாக நீண்ட முயற்சிக்குப் பின்னர், இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமரைச் சந்திக்கச் சென்றபோது, சில காட்சிகளைக் காண நேர்ந்தது. லண்டன் மாநகரம் முழுவதும் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்தது. பலியானவர்கள் எண்ணிக்கையைக் கணக்கிடக்கூட இயலாத நிலை. தீயை அணைப்பதற்குப் போதுமான தண்ணீருக்கும் ஆள்களுக்கும் பற்றாக்குறை. ஒரே நேரத்தில் பலமுனைத் தாக்குதகள். ஒருவழியாக, பிரதமர் சர்ச்சிலைச் சந்தித்த ஹாமில்டன் பிரபு, நடந்தவற்றை விளக்காமாகத் தெரிவித்தார். எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டார் சர்ச்சில்.
  • மறுநாள், இவான் கிர்க்பட்றிக் என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு அவசரமாக வரவழைக்கப்பட்டார். கிர்க்பட்றிக் பி.பி.சி.யில் ஐரோப்பிய இயக்குநராகப் பணியாற்றியபோது 1933லிருந்து 1938 வரை பெர்லினில் இருந்தவர். நாஜி அரசாங்கத்தின் முக்கியத் தலைவர்கள் அனைவரையும் தமது பணியின் காரணமாகச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. ஆக, அவருக்கு ‘ஹெஸ்’ அறிமுகமாகியிருந்தார்.
  • “உங்களால ஹெஸ்ஸை அடையாளப்படுத்த முடியுமில்லையா?” என்று கிர்க்பட்றிக்கிடம் கேட்டபோது, “நிச்சயமாக முடியும்” என்றார். ஹெஸ்ஸைச் சந்திக்குபடி கிர்க் பட்றிக் கேட்டுக்கொள்ளப்பட்டார். இதையடுத்து, கிர்க் பட்றிக்கிற்கும் ஹாமில்டனுக்குமாக விமானமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு ஒன்பது மணி இருபது நிமிட அளவில் டர்ன்ஹௌஸை அடைந்தபோது இருவருமே களைத்திருந்தார்கள். வந்தவர்கள் உட்காரக்கூட நேரமில்லை. இவர்கள் அங்குப் போய் சேர்ந்தபோது, ஜெர்மன் வானொலியில், “ஹெஸ்ஸைக் காணவில்லை” என்று அறிவித்திருக்கும் தகவலும் பிரிட்டன் அரசுக்குக் கிடைத்தது.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories