TNPSC Thervupettagam

ஹெச்.எம்.பி.வி வைரஸ்: அச்சம் வேண்டாம்

January 11 , 2025 7 hrs 0 min 26 0
  • சீனாவில் 2019ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அதுவரை மனித இனம் சந்தித்திராத புதிய வகை கரோனா வைரஸ் பரவல் வூஹானில் நிகழ்ந்தது. அதற்குப் பின் இரண்டு வருடங்கள் உலகையே முடக்கிப் பெருந்தொற்றாகப் பரவிப் பல லட்சம் உயிர்களை கரோனா காவு வாங்கியது.
  • அந்தப் பெருந்தொற்று தந்த தாக்கம் இன்னும் நம் மனங்களில் தீரா ரணமாக மாறியிருக்கிறது. இதன் விளைவாக சீனாவில் இருந்து வரும் செய்திகள் எதுவாயினும் அதை அச்சத்துடனே நோக்கும்படியாக நமது நிலை மாறி இருக்கிறது. தற்போது சீன மருத்துவமனைகளில் சுவாசப் பாதைத் தொற்றுடன் மக்கள் கூட்டமாகச் சிகிச்சை பெறுவது போன்ற ஒளிப்படங்களும் காணொளி களும் சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டுள்ளன.
  • எங்கே இன்னொரு பெருந்தொற்றுக்கு இது இட்டுச் சென்று விடுமோ என்கிற பீதி மீண்டும் மக்களிடையே எழுந்துள்ளது. வைரஸ் கிருமியால் உடலுக்கும் உயிருக்கும் ஏற்படும் அச்சுறுத்தல் ஒருபக்கம் என்றால், பொது முடக்கம், போக்குவரத்து முடக்கம் என்று பொருளா தாரத்திற்கும் அச்சுறுத்தல் நிலை ஏற்படுமே என்கிற அச்சம் மக்களிடையே துளிர் விடத் தொடங்கியுள்ளது.

ஹெச்.எம்.பி.வி வைரஸ்:

  • சீனாவில் ஹெச்.எம்.பி.வி (HMPV - HUMAN META PNEUMO VIRUS) எனும் புதிய வைரஸ் பரவுகிறது என்கிற அச்சமூட்டும் செய்தி பரவத் தொடங்கியது. ஆனால், ஹெச்.எம்.பி.வி. எனும் இந்த வைரஸ், 2019இல் பரவத் தொடங்கிய நாவல் கரோனா வைரஸ் போன்ற புதிய வைரஸ் அல்ல.
  • அது ஏற்கெனவே ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நமது பூமியில் பரவிவரும் வைரஸ்தான். இந்த வைரஸ், குளிர் காலங்களில் பரவும் ஏனைய சுவாசப்பாதை வைரஸ் களான இன்ஃபுளூயன்சா, கரோனா, அடினோ வைரஸ், ரைனோ வைரஸ், ரெஸ்பிரேட்டரி சிண்ஸ்டியல் வைரஸ் ஆகிய வைரஸ்களுடன் சேர்ந்து பரவும் வைரஸ் ஆகும்.
  • ஹெச்.எம்.பி.வி வைரஸை நெதர்லாந்தில் ஆராய்ச்சியாளர்கள் 2001இல் கண்டறிந்தனர். இந்தியாவில் 2003இல் மகாராஷ்டிரத்தில் ஒரு குழந்தைக்கு இந்தத் தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதற்காக அப்போதுதான் இந்த வைரஸ் பூமியில் பரவத் தொடங்கி யது என்று அர்த்தமில்லை. மாறாக அந்த வைரஸைக் கண்டறியும் தொழில் நுட்பம் அப்போதுதான் கைகூடியது என்று அர்த்தம். இந்தியாவில் இந்த ஹெச்.எம்.பி.வி தொற்று புதிதானது அல்ல. எனவே கரோனா போன்ற பீதி தேவை அற்றது.

தீவிரம்:

  • வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ஹெச்.எம்.பி.வி தொற்று ஏற்படும். பெரும்பான்மை யினருக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாத சாதாரண தொற்றாகக் கடந்து செல்லும். எனினும் ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகள், அதிலும் எடை குறைவாக உள்ள குழந்தைகள், பிறவிக் குறைபாடு உள்ள குழந்தைகள், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள், முதியோர்கள், பல இணை நோய்களுடன் வாழ் பவர்கள், எதிர்ப்புச் சக்தி குன்றச் செய்யும் மருந்துகள் உள்கொள்ப வர்களுக்குச் சற்று தீவிரத்துடன் இவ் வைரஸ் வெளிப்படக்கூடும். இவர்கள் ‘ஹை ரிஸ்க்’ நோயாளிகள்.

அறிகுறிகள்:

  • பெரும்பான்மையினருக்குக் காய்ச்சல், சளி இருமல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு போன்ற சாதாரண அறிகுறிகள் மட்டுமே ஏற்பட்டுக் குணமடையும். ‘ஹை ரிஸ்க்’ என்று மேலே குறிப்பிடப்பட்டுள்ள மக்களிடையே, மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம், நடக்கும்போது தலை சுற்றல், உள்ளங்கை, பாதம் நீல நிறத்தில் மாறுதல், குழந்தைகளின் நெஞ்சுப் பகுதி உள்ளிழுத்து மூச்சு விடுதல், குழந்தை மூச்சு விடும்போது குறட்டைச் சத்தம் கேட்பது போன்றவை அபாய அறிகுறிகளாகும்.
  • இந்தத் தொற்று ஏனைய சுவாசப் பாதைத் தொற்றுகள் போலவே இருமல், தும்மல் மூலம் சளித் துகள்கள், காற்றில் பறந்து அதை சுவாசிப்பவர்களுக்குப் பரவுகிறது. சுகாதாரமற்ற இடங்களில் கை வைப்பதன் மூலம் கையில் தொற்றுப் பட்டு அதை மூக்கிலும் வாயிலும் வைப்பதன் மூலம் பரவுகிறது. நோயாளிகள் உடுத்திய உடைகள், பயன்படுத்திய துணிகள் ஆகிய வற்றிலும் இந்த வைரஸ் கிருமிகள் சில மணி நேரம் வாழும். அவற்றைத் தொடுவதன் மூலமும் தொற்றுப் பரவல் நடக்கிறது.

அச்சம் தேவையில்லை:

  • உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய வழிகாட்டுதல்களில் சீனாவில் தற்போது குளிர்காலம் நிலவிவருவதால் குளிர்கால வைரஸ் தொற்றுகளில் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஏற்றம் தெரிகிறது. எனினும் பொதுச் சுகாதாரத்தை அச்சுறுத்தும் வகையிலோ நெருக்கடி நிலை ஏற்படுத்தும் வகையிலோ தொற்றுப் பரவல் இல்லை. அங்கு இன்ஃபுளூயன்சா வைரஸ் மூலமே அதிகமான தொற்றுகள் ஏற்படுகின்றன.
  • ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று அதற்கடுத்த நிலையில் இருக்கிறது; கூடவே இந்தத் தொற்றுப் பரவலால் மருத்துவமனைகள் ஸ்தம்பிப்பதோ அதிகமான மரணங்களோ நேரவில்லை எனத் தெரிவித்திருக்கிறது. ஹெச்.எம்.பி.வி., வைரஸ், கரோனா போன்ற பேரிடர் நிலையை உருவாக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. இது ஒரு சாதாரண வைரஸ் தொற்று என்று மத்திய அரசின் சுகாதாரத் துறையும் தெரிவித்துள்ளது. எனவே, மக்களாகிய நாம் அச்சமின்றி இருப்போம். அதே வேளை, எச்சரிக்கையுடன் இருப்போம்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories