TNPSC Thervupettagam

ஹேமந்த் சோரன் கைது: ஊழல் ஒழிப்பில் அரசியல் கூடாது

February 5 , 2024 289 days 308 0
  • ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதும், இந்தப் பின்னணியில் அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதும் தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2019 சட்டமன்றத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது.
  • ஜேஎம்எம் கட்சித் தலைவர் ஹேமந்த் சோரன் முதலமைச்சர் ஆனார். இந்நிலையில், பழங்குடியினருக்கு நிலம் வழங்கும் பரிவர்த்தனைகளில் போலி ஆவணங்களின் மூலம் பொருளாதாரப் பயன்களை அடைந்ததாக ஹேமந்த் சோரன் மீது 2023இல் குற்றம்சாட்டியது அமலாக்கத் துறை.
  • பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின்கீழ் 2024 ஜனவரி 31 அன்று ஹேமந்த் சோரன் கைதுசெய்யப்பட்டார்.
  • அவரைக் கைதுசெய்வதற்கான அதிகாரங்களை அமலாக்கத் துறைக்கு வழங்கும் வகையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது கவனிக்கத்தக்கது. 2022 ஜூலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இதை ஏற்றுக்கொண்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீடு நிலுவையில் உள்ளது.
  • எல்லாவற்றையும் தாண்டி, ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படி அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீதும் வழக்கு தொடர்ந்துள்ள அமலாக்கத் துறை, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு தொடர்ந்து சம்மன் அனுப்பிவருவதும் சர்ச்சையாகியிருக்கிறது.
  • மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக அமலாக்கத் துறை செயல்படுகிறது என்னும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு இது வலுசேர்த்துள்ளது. பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவரான ஹேமந்த் சோரன், தன் மீதான வழக்கு பழங்குடியினர் மீதான தாக்குதல் என்று குற்றம்சாட்டியிருக்கிறார். கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகிய நிலையில், உச்ச நீதிமன்றம் இதில் தலையிட மறுத்துவிட்டது.
  • இதற்கிடையே அவருடைய புகாரின் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் ராஞ்சி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊழல், மோசடி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் அதிலிருந்து தப்பிக்கத் தன் சமூக அடையாளத்தைப் பயன்படுத்துவதை ஏற்க முடியாதுதான். அதே நேரம், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதே அமலாக்கத் துறை தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவருவது தொடர்பாக எழும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும் அவசியம்.
  • ஹேமந்த் சோரன் பதவி விலகியதை அடுத்து, பழங்குடி உரிமைகள் மூத்த போராளியான சம்பய் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் ஜேஎம்எம் தலைமையிலான அரசுக்கு 47 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கடிதம் அளிக்கப்பட்டது.
  • அவர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காததை அடுத்து விமர்சனங்கள் எழுந்தன. ஒருநாள் தாமதத்துக்குப் பிறகு ஆட்சி அமைக்க சம்பய் சோரனுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துவிட்டார்.
  • எனினும், இன்று (திங்கள் கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவிருக்கும் நிலையில், ஜார்க்கண்டில் அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டிருக்கிறது. ஊழல் கறைபடிந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டியது அவசியம். அதே வேளையில், விசாரணை அமைப்புகள் அரசியல் தலையீடுகள் இன்றி சுயாதீனமாக இயங்குவதை உறுதிசெய்வதன் மூலமாகவே ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories