TNPSC Thervupettagam

ஹேமா ஆணையம்: பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரல்!

September 1 , 2024 134 days 199 0

ஹேமா ஆணையம்: பாலியல் சுரண்டலுக்கு எதிரான குரல்!

  • பணியிடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு தொடர்பாகப் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விசாகா கமிட்டி, பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகளை முன்மொழிந்துள்ளது. ஆனாலும் பெண்களுக் கான பாதுகாப்பு கேள்விக்கு உரிய ஒன்றாகத்தான் இருக்கிறது.
  • ‘மார்த்தா ஃபேரல் ஃபவுண்டேஷன்’ ஆய்வின்படி இந்திய அளவில் பணியிடங்களில் 80 சதவீதப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். ‘மீடியா ஜர்னல் ஆஃப் மாடர்ன் ரிசர்ச் அண்ட் ரிவ்யூ’ஸின் ஆய்வறிக்கை ஒன்று இந்திய அளவில் பணியிடங்களில் நடக்கும் பாலியல் முறைகேடுகளை நேரடிக் கள ஆய்வு செய்துள்ளது. பெண்கள் சொற்களால், முறைகேடான தொடுதலால், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அந்த அறிக்கை தெளிவாக்குகிறது. பொருளாதார நலிவு, சட்டப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லாததெல்லாம் இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.
  • இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் சினிமாத் துறையில் நடக்கும் பாலியல் சுரண்டல்கள் பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் சிலர் பொதுவெளியில் பேசினர். உலக அளவில் முன்னெடுக்கப்பட்ட #மீடூ இயக்கத்தின் தொடர்ச்சியாக இந்த வெளிப்படுத்தல் நடந்தது. ஆனால், தமிழ்நாட்டு அளவில் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நமக்கு அருகில் இருக்கும் அண்டை மாநிலமான கேரளம், இந்த விஷயத்தைக் கையாண்ட விதம் உண்மையில் இங்குள்ள அரசு அறிய வேண்டிய ஒன்றாகும்.

பெண்களுக்கான அமைப்பு:

  • மலையாளத் திரையுலகை ஆண்டு கொண்டிருந்த நடிகர் திலீப், நடிகை ஒருவர் கடத்தப்பட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்படுவதற்கு முன்பு அங்கும் இதே நிலைதான்இருந்தது. உள்ளே கனன்றுகொண்டி ருந்தது.
  • உதாரணமாக, இன்று நடிகர் முகேஷ் உள்ளிட்ட ஏழு பேர் மீது புகார் கொடுத்துள்ள மினு குரியன் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சினிமா இதழில் இதே குற்றச்சாட்டைக் கூறியிருந்தார். ஆனால், அது எந்தப் பாதிப்பையும் விளைவிக்கவில்லை. நடிகை கடத்தப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’, திலீபுக்கு ஆதரவாகவே இருந்தது. முக்கியமான நிர்வாகிகள் பலரும் திலீபைச் சிறைச்சாலை சென்று சந்தித்தனர். காவல் துறை விசாரணையில் உண்மையைக் கூறிய பலரும் நீதிமன்றத்தில் தங்கள் வாக்குமொழியை மாற்றி திலீபுக்காகப் பொய் சாட்சி கூறினர். அதில் நடிகர்கள் சித்திக், இடைவேளை பாபு ஆகியோர் வாக்கு மாறிய முக்கிய சாட்சிகள்.
  • ‘அம்மா’வின் நிலைப்பாடு காரணமாக ‘டபுள்யூசிசி’ (women in cinema collective) என்னும் புதிய அமைப்பு பெண்களுக்காகத் தொடங்கப்பட்டது. நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர், படத் தொகுப்பாளர் பீனா, இயக்குநர் அஞ்சலி மேனன் உள்ளிட்ட பலர் இதன் முக்கிய நிர்வாகிகளாக இருந்தனர். இந்த அமைப்பின் கோரிக்கையின் அடிப்படையில்தான் திரைத்துறையில் நடக்கும் பாலியல் சுரண்டல்களை ஆராயத் தனி ஆணையம் அமைக்கப்பட்டது. இத்தகைய ஆணையம் அமைக்கப்பட்டது இந்திய அளவில் அதுதான் முதல்முறை; முன்னுதாரணமான முயற்சியும்கூட.

ஆணையத்தின் செயல்பாடு:

  • நீதிபதி ஹேமா தலைமையிலான இந்த ஆணையம், பொதுவான ஆணையங்களைப் போல் பெயருக்காகச் செயல்படவில்லை. திலீப் தலைமையிலான ‘பவர் குரூப்’புக்கு வெளியே இயங்கும் பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன் போன்ற நடிகர்கள் இந்த ஹேமா ஆணையம் முன்பு சாட்சியம் அளித்திருக்கிறார்கள் என்பது கவனம் கொள்ளத்தக்கது.
  • மினு குரியன் போலத் தாமாக முன்வந்து பத்திரிகைகளில் புகார் அளித்த பலரையும் தேடிச் சென்று அவர்களது வாக்குமூலங்களை இந்த ஆணையம் பதிவுசெய்துள்ளது. இந்த ஆணையத்தின் அசல் வாக்குமூலங்கள், தனிப்பட்ட சிலரது வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் அதை அப்படியே அறிக்கையாக வெளியிடவில்லை. ஆனாலும் அதில் 87 பக்கங்கள் நீக்கப்பட்டுத்தான் இப்போது கிடைக்கும் அறிக்கை வெளியாகியுள்ளது.
  • கேரள அரசு, ஹேமா ஆணைய அறிக்கையின் பேரில் குற்ற வழக்குகள் எதுவும் பதிவுசெய்யும் உத்தேசமில்லை என்பதை சூசகமாகத் தெரிவித்திருந்தது. ஆனால், ஆணை யத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளப் பண்பாட்டுத் துறை அமைச்சர் சஜி செரியன் தெரிவித்தார். ஆனால், ஹேமா ஆணைய அறிக்கை வெளியிடப்பட்டதைப் பெண்கள் ஒரு நிமித்தமாகக் கொண்டனர். தங்கள் குரல்கள் செவிசாய்க்கப்படுவதற்கான நேரம் இது என்பதை அறிந்து அதிகாரங்களை நோக்கி உண்மையைப் பேசினர். நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமான முகேஷுக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • இதற்கு முன்பு முகேஷுக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டு வந்தபோது, அதை அரசியல் பழிவாங்கல் எனச் சொல்லிப் புறந்தள்ளிவிட்டார். ‘அம்மா’வையும் மலையாள சினிமாவையும் நிர்வகித்த முன்நிறை தளபதிகள் சித்திக், இடைவேளை பாபு, மணியம்பிள்ளை ராஜு, முகேஷ் என எல்லாரும் தற்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். இவர்கள் நால்வரும் திலீப் 8ஆம் குற்றாவளியான வழக்கில் அவருக்கு ஆதரவாகப் பொய் சாட்சி கூறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கூண்டோடு ராஜினாமா:

  • இயக்குநர் துளசிதாஸ், வி.கே.பிரகாஷ், ரஞ்சித் உள்ளிட்ட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டு தொலைக் காட்சிகள்வழி முன்வைக்கப் பட்டுள்ளன. சினிமா சார்ந்த நட்சத்திர அந்தஸ்து இந்தச் செய்திகளுக்குக் கிடைக்கிறது. ஆனால், அதைத் தாண்டி இது தொழிலாளி வர்க்கத்தினர் மீதான சுரண்டலுக்கு எதிரான குரல் என்கிற வகையில் முக்கியமானது. தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பேசவேண்டிய அவர்களின் ‘அம்மா’ சங்கமும் உறுப்பினராகச் சேர்க்கவே ‘விட்டுக்கொடுக்க வேண்டும்’ எனச் சொல்லியிருப்பதாக ஒரு நடிகை குற்றம் சாட்டியுள்ளார். தொழிலாளர் சங்கத்தை ஒரு கேளிக்கை கிளப்பாக நிர்வாகிகள் நடத்தியிருக்கிறார்கள்.
  • இதில் மம்முட்டியும் மோகன்லாலும் அடுத்தடுத்துத் தலைவராக இருந்துள்ளனர். இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமாவும் செய்துள்ளனர். ஆனால், அரசு இந்தப் பிரச்சினைக்குக் கவனம் கொடுத்துச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளது.
  • இடது முன்னணி எம்எல்ஏ முகேஷ் உள்படப் பலர் மீது பிணையில் வெளிவராத பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தமிழகத்திலும் தொழில் இடங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்பாகும். இதை நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையம், இந்தப் பந்தத்துக்குக் கொளுத்திய தீ எனலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories