- கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் மாநில நெடுஞ் சாலையில், அரைமணி நேரப் பயணத்தில் வந்துவிடுகிறது எல்லப்பாளையம் அருகேயுள்ள கணேசபுரம். அங்கே 2 ஏக்கர் வாடகை நிலத்தில் பச்சைப் பசேலென வரவேற்றது ‘பூந்தளிர் நாற்றுப் பண்ணை.’ கல்விச் சுற்றுலா என்கிற பதாகையுடன் வந்த பள்ளிப் பேருந்து ஒன்று அங்கே நிற்க, அதிலிருந்து சீருடை அணிந்த மாணவர்கள் வரிசையாக அணிவகுத்து, அந்த நாற்றுப் பண்ணைக்குள் நுழைந்தார்கள். அவர்களை வரவேற்று அழைத்துச் சென்ற சு.பாரதிதாசன், முழுநேரச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர். நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்டிருக்கும் தாவர நாற்றுகளை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி விளக்கினார்.
- “நீங்கள்தான் நாளைய சமூகத்தின் மதிப்பு மிக்க ஆளுமைகள். உங்களில் பலர் இதற்கு முன்னர் நர்சரித் தோட்டங்களுக்குச் சென்றிருக்கலாம். அங்கே பூச்செடிகளை அதிகமாகப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்தப் பூந்தளிர் நாற்றுப் பண்ணை அது போன்ற நர்சரி அல்ல. ‘நேட்டிவ் பிளாண்ட்ஸ்’ என்று சொல்லப்படுகிற நம் மண்ணுக்கேற்ற தாவரங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகளைக் கவரும் தாவரங்கள், அழிவின் விளிம்பில் இருக்கும் தாவரங்கள் எனச் சுமார் 130 வகை மரம், செடி, கொடி இனத் தாவரங்களை இங்கே நாற்றுகளாக உற்பத்தி செய்கிறோம். பொதுமக்களுக்கும் உள்ளூர்க் காடுகளை உருவாக்க முயலும் தன்னார்வலர்களுக்கும் இவற்றை விலைக்குக் கொடுத்து ஊக்குவித்து வருகிறோம். இந்த நாற்றுப் பண்ணை, ‘அருளகம்’ அற அமைப்பின் ஓர் அங்கம். அரிய, அழிவபாயத்திலுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் பறவைகளையும் மக்களோடு இணைந்து பாதுகாக்கும் விதமாக முழுநேரச் செயல் திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்திவருகிறது அருளகம். இப்பணியில் பெண்கள், பழங்குடி மக்களின் கிராமப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும் இணைத்து, அவர்களையும் பங்கேற்கச் செய்துள்ளோம். எங்களது இந்தச் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியும் கொமாரம் சுசீலா பன்னாட்டுப் பள்ளியும் நாற்றுப்பண்ணையை உருவாக்கத் தங்களது வளாகத்திலேயே இடம் ஒதுக்கி, அங்கு பயிலும் மாணவர்களைப் பசுமை நோக்கிச் சிந்திக்க வழிவகுக்கிறார்கள்” என்றவர், பூந்தளிர் நாற்றங்காலில் இருக்கும் தாவர நாற்றுகளின் பெயர்களை ஒவ்வொன்றாகக் கூறி, அவற்றின் பயனை விளக்கியதுடன், அவற்றின் விதைகளை எப்படிச் சேகரிப்பது, எப்படி விதைப்பது, நாற்றுகளை எப்படி நடுவது, தண்டு மரமாக வலிமை பெறும் வரை எப்படிப் பராமரிப்பது என்பதை எல்லாம் பயிற்றுவித்துக் கொண்டே வந்தார்.
- ‘பாறு கழுகுகளின் பாதுகாவலர்’ என்பது அவருடைய இன்னொரு முக்கிய அடையாளம். அருளகம் அறக்கட்டளையின் செயலாளராக இருக்கும் பாரதிதாசன், தன்னுடைய சூழல் பாதுகாப்பு - உயிரினங்கள் பாதுகாப்புக்கான பயணத்தை 1990களில் தொடங்கியவர். தற்போது நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் அழிவின் அபாயத்தில் சிக்கியுள்ள பாறு கழுகுகள் இனத்தைப் பாதுகாப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார். ஏன் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்?
- “பிணந்தின்னிக் கழுகுகள் என்று அழைக்கப்படுபவை தான் பாறு கழுகுகள். உருவத்தில் மிகப் பெரிய பறவையினமான இதில், இந்தியாவில் மட்டும் 9 வகைகள் இருக்கின்றன. இவை நோய்த்தொற்றுகளிலிருந்து மனித இனத்தைக் காப்பதில் காலங்காலமாகப் பெரும் பங்காற்றி வந்திருக்கின்றன. ஒரு விலங்கின் சடலத்தை, பாறு கழுகுகள் கூட்டமாக வந்து உண்டால் இறுதியில் எலும்புகள் மட்டுமே மிஞ்சும். மாறாக, அழுகிச் சிதிலமாகி நீர்நிலைகளுக்கு அருகிலோ, வாழ்விடப் பகுதிகளுக்கு அருகிலோ விலங்குகளின் சடலங்கள் கிடந்தால், நீரின் வழியாகவும் காற்றின் வழியாகவும் நோய்த்தொற்று பரவும். இந்தச் சடலங்களை உண்டு பாறு கழுகுகள் நோய்க் கிருமிகளை அழித்துவிடுவதால் இவை, ‘ஆகாய மருத்துவர்' என்று அழைக்கப்படுகின்றன.
- மனிதர்களைப் பாதுகாக்கும் இந்தக் கழுகுகள் இனத்தைக் காக்க வேண்டியது நம் கடமை. ஐம்பதுகள் வரையிலும் காகங்கள் அளவுக்கு எண்ணிக்கையில் அதிகமாக இருந்த பாறு கழுகுகள், இன்று அழியும் நிலைக்கு வந்துவிட்டதற்கு மனிதர்களாகிய நாம்தான் காரணம். கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது வலிநிவாரணி மருந்தாகத் தரப்பட்டுவந்த டைக்ளோஃபினாக் (diclofenac) மற்றும் அவற்றின் குடும்ப வகை மருந்துகள், கால்நடைகளின் நிணநீர் உறுப்புகளான மண்ணீரலில் போய்த் தங்கியிருக்கும். சிகிச்சையில் இதுபோன்ற மருந்தைப் பெற்று இறந்த கால்நடைகளின் சடலங்கள் ஊருக்கு வெளியே வீசப்படும்போது, கழுகுகள் சடலத்தின் மென்மையான பகுதியான மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகளையே முதலில் விரும்பி உண்ணும். அப்போது அந்த மருந்துகள் கழுகுகளுக்கு உடனடிச் சிறுநீரகச் செயலிழப்பை உருவாக்கிச் சாகடித்து விடுகின்றன. எவ்வாறு இவை அழியத் தொடங்கின என்கிற இந்தத் துயர் மிகுந்த உண்மை ஆராய்ச்சியின் வழியாக வெளிவந்த பிறகு, இம்மருந்து அரசால் தடைசெய்யப்பட்டது. இது தொடர்பாகக் கால்நடை மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருந்துக்கடை உரிமையாளர்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு முகாம் நடத்தி, இத்தகைய மருந்துகளைக் கால்நடை களுக்குப் பயன்படுத்தாவண்ணம் அவர்களின் ஆதரவோடு தடுத்து வருகிறோம். இத்தகைய கொடிய வேதி மருந்துகள் இப்போதும் தொடரும் ஆபத்தான நிலையில், தற்போது போதிய உணவு கிடைக்காமை, விஷம் வைத்து விலங்குகளைக் கொல்வது, அவற்றின் சடலங்களைக் கழுகுகள் உண்பது எனப் பல காரணங்களை ஆய்வுகள் புலப்படுத்திவருக்கின்றன. பாறு கழுகுகளின் அழிவை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நமது அழிவை நாமே வேடிக்கை பார்ப்பது போன்றது” என்கிறார் பாரதிதாசன்.
- பாறு கழுகுப் பாதுகாப்பில் இவரது தனித்துவமான செயல்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக 2016இல் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Critical Ecosystem Partnership Fund என்கிற பன்னாட்டு அமைப்பு, Biodiversity hotspot hero என்கிற விருதை அளித்தது. உலகெங்குமிருந்து இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நபர்களில் இந்தியாவிலிருந்து இவரும் ஒருவர்.
- இவரது இடையறாத செயல்பாடுகளைப் பார்த்த தமிழ்நாடு அரசு, தனது ‘பாறு கழுகுப் பாதுகாப்புக் குழு’வுக்கு இவரை உறுப்பினராகத் தேர்வு செய்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின் காட்டுயிர்ப் பாதுகாப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பாரதிதாசன்.
- பறவைகள், யானைகள், மனித - விலங்கு எதிர்கொள்ளல் குறித்துப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். கானுயிர், சுற்றுச்சூழல் குறித்த அக்கறையை இவருக்கு ஊட்டிய சக கல்லூரி மாணவர் அருள்மொழியின் நினைவாகவே ‘அருளகம்’ அற அமைப்பை நண்பர்களுடன் தொடங்கி, கடந்த 23 ஆண்டுகளாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசு, மக்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து களமாடிவருகிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 06 – 2024)