TNPSC Thervupettagam

‘உன்னு வடம்’ - ஊஞ்சல் நினைவுகள்

October 17 , 2024 38 days 75 0

‘உன்னு வடம்’ - ஊஞ்சல் நினைவுகள்

  • ஊஞ்சலில் ஆடுவது என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். முன்னும் பின்னுமாக நகர்தல் நிகழ்வதால், உறுதியாக முடிவெடுக்க முடியாமையை ஊசலாடுதலுடன் ஒப்பிடுகிறார்கள்.
  • அசையும் எந்தப் பொருள் மீது நாம் உட்கார்ந்தாலும் இயல்பாகவே நாம் அசைவோம். அதனால், இந்த ஊஞ்சலாடும் வழக்கம் என்பது மனிதகுலம் தோன்றியதிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும். சங்கப் பாடல்கள் பலவற்றில் இது குறித்த குறிப்புகள் உள்ளன. இன்றும் பல கோயில்களில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்கிறது.
  • பிறந்த குழந்தைக்கு அம்மாவின் சேலையில் தூளி கட்டுவது, கயிற்றில் வேட்டியைக் கட்டிக் குறுக்கே கம்பு வைத்துத் தொட்டில் கட்டுவது, நான்கு புறமும் சங்கிலி போட்டு சிறு கட்டில் செய்து ஆட்டுவது என நாம் பிறந்ததிலிருந்தே இந்த வழக்கம் தொடங்கிவிடுகிறது.
  • வீடுகளின் விட்டத்தில் கயிறு கட்டிச் சிறுவர்கள் ஆடுவார்கள். அதன் நீட்சியாகவே இன்று பல வீடுகளில் ஊஞ்சல் போடுகிறார்கள். வீட்டின் பின்பக்கம் இருக்கும் மரங்களில் ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள். அடர்ந்த நிழல் தரும் வலுவான வேப்ப மரம், பூவரசு மரம் போன்றவற்றில் ஊஞ்சல் கட்டுவார்கள்.
  • கயிறு தேய்ந்து இருந்துவிடக் கூடாது என்று சாக்கு அல்லது துணியைக் கிளையைச் சுற்றிக் கட்டி, அதன் மேல் கயிறு வரும்படி பார்த்துக் கொள்வார்கள். ஆடும் குழந்தைகளின் வயதிற்கேற்ப நீளத்தைக் கூட்டிக் குறைத்துக் கொள்ளும்படியாகக் கட்டுவார்கள்.
  • பிறர் ஆட்டிவிடுவதும் உண்டு. தாமே காலால் உந்தித்தள்ளி ஆடிக்கொள்வதும் உண்டு. காடுகளில் வேலை செய்பவர்கள்கூட, கிடைக்கும் ஒய்வு நேரத்தில் மரங்களின் விழுதுகளை இணைத்துக் கட்டி ஆடுவதுண்டு. செடிகொடிகளின் தண்டுகளை இணைத்தும் ஆடுவது உண்டு.
  • ‘உன்னு வடம்’ என்று ஒரு வகை ஊஞ்சல் உண்டு. உன்னு வடம் என்பது இப்போது வழக்கொழிந்து போய்விட்ட ஊஞ்சல். இதில் இரண்டு பக்கமும் இருவர் நின்று அவர்களின் உடல் அசைவின் மூலம் ஆட்டுவார்கள். அந்தச் செயலை ‘உன்னுதல்’ (உந்துதல்) என ஊரில் சொல்வதால் உன்னு வடம் என்று பெயர்.
  • பனை மரத்தை நீளவாக்கில் இரண்டாக வெட்டி அதன் இரண்டு முனைகளிலும் பெரிய கயிற்றைக் (வடக்கயிறு) கட்டினால் அதுதான் இந்த உன்னு வடம். அந்த ஊஞ்சலில் ஒரே நேரத்தில் சுமார் பத்துப் பேர் அமரலாம். சிறுவர் இரண்டு பக்கங்களிலும் கால்களைப் போட்டுக்கொண்டு ஒருவரை இன்னொருவர் பற்றிக்கொள்வார்கள். பெரிய பெண்கள் ஒருபக்கமாக உட்கார்ந்து , கைகளை வைத்துக் கம்பை அழுத்திப் பிடித்துக்கொள்வார்கள்.
  • உன்னு வடத்தின் இரண்டு முனைகளிலும் பக்கத்திற்கு ஒருவர் என்று நின்று கொண்டு கைகளால் கயிற்றைப் பிடித்தவாறு இந்த ஊஞ்சலை வேகமாக உந்த வேண்டும். இவ்வாறு, இரண்டு பக்கங்களிலும் நிற்பவர்கள் மாற்றி மாற்றி உந்தும்போது அது வேகமெடுக்கும்.
  • இந்த ஊஞ்சலை மிகவும் லாகவமாகச் செலுத்துபவர்கள் எனத் தெருவுக்கு ஓரிரு அண்ணன்கள் இருப்பார்கள். வேலைவிட்டு வரும் அவர்களின் வருகைக்காகத் தெருவே காத்திருக்கும். குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என அனைவரும் ஒன்றுகூடி ஆடும் ஆட்டம் என்பதால் கிண்டல்களுக்கும் பஞ்சமிருக்காது.
  • யார் வீட்டில் இருந்தோ பனந்தடி வரும். யார் வீட்டில் இருந்தோ கயிறு வரும். யாரோ சிலர் ஆட்டுவார்கள். யார் யாரோ ஆடுவார்கள். அது ஒருவிதமான சமூக நல்லிணக்கத்தைக் கொடுத்தது. கிறிஸ்துமஸும் உன்னு வடமும் பிரிக்க முடியாதவையாக இருந்த காலம் ஒன்று உண்டு. இவ்வாறு ஒவ்வோர் ஊரிலும் ஒரு வழக்கம் இருந்து இருக்கிறது. குறிப்பிட்ட சில விழாக் காலங்களில் பொது இடங்களில் இருக்கும் மரங்கள் பலவற்றிலும் ஊஞ்சல் கட்டியிருப்பார்கள்.
  • ஆடிப்பெருக்கின்போது ஆற்றங்கரைக்குச் சென்று ஊஞ்சலாடி இருக்கிறார்கள். காணும் பொங்கல், தோப்புத் திருவிழா, தீபாவளி என மக்கள் கூடி விளையாடிய விளையாட்டுகளில் ஊஞ்சலாட்டமும் ஓன்று. இப்போது வீட்டினுள் போடும் ஊஞ்சலாக, கூடை நாற்காலியாக மட்டும் அது சுருங்கிவிட்டது.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories