- நடந்துமுடிந்த ஆறாவது ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டியில் பதக்கப்பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்று முத்திரை பதித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் தொடரைச் சிறப்பாக நடத்தி முடித்ததன் மூலம் தமிழ்நாடு அரசும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.
- 2018இல் தொடங்கப்பட்ட ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி, இதற்கு முன்பு டெல்லி, புணே, குவாஹாட்டி, பஞ்ச்குலா, போபால் ஆகிய நகரங்களில் நடைபெற்றுள்ளது. தென்னிந்தியாவில் முதல் முறையாக, தமிழ்நாட்டில் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றிருப்பது சிறப்பானது.
- விளையாட்டுக் கட்டமைப்பு அதிகம் உள்ள சென்னையில் மட்டுமல்லாமல் மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களிலும் வெற்றிகரமாகப் போட்டிகளை நடத்திய தமிழ்நாடு அரசைப் பாராட்ட வேண்டும்.
- இந்த முறை 26 பிரிவுகளின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்நாட்டின் வீர விளையாட்டான சிலம்பம் இடம்பெற்றது. ஒட்டுமொத்தமாக 5,600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், தமிழ்நாட்டிலிருந்து 559 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 926 பதக்கங்களுக்கு நடைபெற்ற போட்டிகளில் மகாராஷ்டிரம் 158 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது.
- தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ‘கேலோ இந்தியா’ தொடரில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2019இல் ஐந்தாம் இடத்தைப் பிடித்ததே சாதனையாக இருந்தது.
- ‘கேலோ இந்தியா’ போட்டியானது கிராமங்கள், மிகவும் பின்தங்கிய பகுதிகளிலிருந்து திறமையான இளம் வீரர், வீராங்கனைகளை அடையாளம் காண உதவுகிறது. இந்த வீரர்கள் ‘கேலோ இந்தியா’வில் பதக்கங்கள் வெல்வதன் மூலம் எதிர்காலத்தில் மிகப் பெரிய விளையாட்டுப் போட்டிகளில் சாதிக்க முடியும் என்கிற ஊக்கத்தைப் பெறுகிறார்கள். இந்த முறை தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்ற பல வீரர், வீராங்கனைகள் எளிய குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர்கள்.
- இவர்கள் ‘கேலோ இந்தியா’வில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்ததுபோல, எதிர்காலத்தில் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு இந்த வீரர், வீராங்கனைகளை தேசிய, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் தயார்ப்படுத்த வேண்டியது அவசியம்.
- அரசு அவர்களைத் தத்தெடுப்பதன் மூலமும், தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவதன் மூலமும் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் வெற்றிகளைப் பெற முடியும். இவர்களைப் போன்ற திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிய தமிழ்நாடு விளையாட்டுத் துறை கிராமங்களுக்குத் தொய்வின்றிச் செல்ல வேண்டும்.
- அத்துடன் அருகிலுள்ள பகுதிகளுக்குச் சென்று பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ள வசதியாக, சென்னை தவிர்த்த பிற நகரங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நான்கு ஒலிம்பிக் மண்டலங்களை அமைக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும்.
- தமிழ்நாட்டில் ‘தொகுதிக்கு ஒரு சிறிய விளையாட்டு அரங்கு’ என்கிற அறிவிப்பு சில இடங்களில் செயல்வடிவம் பெற்றுவருவது வரவேற்கத்தக்கது. எஞ்சிய பகுதிகளிலும் அரசு இப்பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். திறமையான வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் இவையெல்லாம் உதவும். விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு மேலும் தலைநிமிரவும் வழிவகுக்கும்!
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 02 – 2024)