‘கோமியம் குடித்ததால் காய்ச்சல் குணமானது’ - சென்னை ஐஐடி இயக்குநர் கருத்தும் தாக்கமும்
- மாட்டுப் பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி, ‘‘என் தந்தை ஜுரத்தில் இருந்தபோது, சன்னியாசி ஒருவர் வந்தார். கோமூத்திரம் (கோமியம்) குடிக்கச் சொன்னார். என் தந்தை குடித்ததும் 15 நிமிடத்தில் காய்ச்சல் குணமாகிவிட்டது. கோமூத்திரத்தில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு தேவையான பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்துள்ளது’’ என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
- பதஞ்சலி நிறுவனத்தினர் கோமியம், பஞ்சகவ்யம் போன்ற பொருட்களை விற்பனை செய்யும்போது, அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளம்பரம் செய்ததை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்து விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. கோமியத்தில் நோயைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் உண்டு என்ற கருத்தை பொதுவெளியில் தெரிவிப்பது இது முதல் முறையல்ல. பல அரசியல் கட்சி தலைவர்கள், சாமியார்கள், ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஆயுர்வேத மருத்துவத்தில் கோமியம் மருத்துவ குணம் மிக்கதாக கருதப்பட்டு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத நூல்களான சுஷ்ருத சம்ஹிதா, அஷ்டாங்க சங்கிரஹ், பாவ் பிரகாஷ் நிகண்டு ஆகியவையும் கோமியத்தின் மருத்துவ குணங்களை தெரிவிக்கின்றன. ரிக் வேதத்தில் கோமியத்தை அமிர்தம் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மியான்மர், நைஜீரியா உள்ளிட்ட வேறு சிலநாடுகளிலும் இத்தகைய நம்பிக்கை உண்டு.
- இவற்றை அடிப்படையாகக் கொண்டு எடை குறைப்பு, வயிற்று வலி, தோல் வியாதி, புற்றுநோய் ஆகியவற்றை குணப்படுத்துவதாக கூறி கோமியத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கருத்துகளை ஆதரித்தும், தாங்களே பயன்படுத்தி பலன் பெற்றதாக சிலர் சொந்த அனுபவத்தைக் கூறும் காணொலிகளும் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமாக சுற்றி வருகின்றன.
- ஆனால், கோமியத்தில் மருத்துவ குணம் இருப்பதை ஏற்றுக் கொண்டு அதிகாரப்பூர்வமாக எந்த மருத்துவ அமைப்பும் அறிவிக்கவில்லை. கோமியத்தை கிருமிநாசினியாக, உரம் தயாரிக்க, வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்துவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், மனிதர்கள் குடிப்பதையும், அதனால் நோய்கள் குணமடைகின்றன என்று கூறுவதையும் நவீன அலோபதி மருத்துவ உலகம் கடுமையாக எதிர்க்கிறது.
- இதுபோன்ற நம்பிக்கையை பரப்புபவர்கள் 1,000 ஆண்டுகளுக்கு பின்னால் நம்மை இழுத்துச் செல்கின்றனர் என்று விமர்சிக்கின்றனர். கோமியத்தின் மருத்துவ குணங்கள் குறித்த ஆய்வுகள் பல நடந்திருந்தாலும், அதன் குணப்படுத்தும் பண்புகள் அறிவியல்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
- ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் சொல்லும் இந்த கருத்தை, அவரது சொந்த அனுபவத்தில் கிடைத்த தகவலாக மட்டுமே கருத வேண்டும். சாதாரண மக்கள் தாங்கள் நினைக்கும் கருத்தை காணொலியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதைப்போல, பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தெரிவித்துவிட்டார்கள் என்பதற்காக இப்படிப்பட்ட நிரூபிக்கப்படாத கருத்துகளை அறிவியல் உண்மைபோல் யாரும் பரப்பிவிடக் கூடாது.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 01 – 2025)