- “எனது மக்கள் பௌத்தத்தை நிலைநாட்ட அனைத்தையும் தியாகம் செய்வார்கள் என நான் நம்புகிறேன்” - இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் அம்பேத்கர் கூறிய வார்த்தைகள் இவை. உடல் ஒத்துழைக்காத நிலையில், இந்தியாமுழுதும் பயணித்து தம்மத்தைப் பரப்புவது சாத்தியப்படுமா என்று அவரிடம் கேட்கப்படுகிறது. பௌத்தத்தைப் பரப்பிட தான் ஒருபோதும் நலிவடையவில்லை; புத்தரின் தம்மத்தை உயிர்ப்பித்துப் பரப்பிடும் பெரும் பணிக்காகத் தனது வாழ்வின் மீதமுள்ள அனைத்துத் தருணத்தையும் பயன்படுத்தப்போவதாக அதற்கு அவர் பதிலளிக்கிறார். அம்பேத்கரின் மரணம் பௌத்த மறுமலர்ச்சிக்குப் பேரிடியாக அமைந்தது. தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை பௌத்தத்தை மதமாக அம்பேத்கர் எப்படிக் கட்டமைத்திருக்கிறார் என்பது போதுமானதாகக் கவனப்படுத்தப்படவில்லை.
பகுத்தறிவும் மதமும்
- அம்பேத்கரின் வரையறையில் பௌத்தம் மதமில்லை என்ற கருத்தைச் சிலர் முன்வைக்கின்றனர். இதற்கான வாதமாக, ‘பகுத்தறிவுமதம்’ என்பது முரண்பட்ட சொல்லணி (Oxymoron) என்றும்,பெரியார், பேராசிரியர் லட்சுமி நரசு ஆகியோர் வாயிலாகவும்பௌத்தம் ஒரு மதமல்ல என்றும் முன்னிறுத்தப்படுகிறது. ஆனால், அம்பேத்கரின் பௌத்தம் என்பது ‘பகுத்தறிவையும் உள்ளடக்கிய மதம்’ என்பதைப் பொதுச் சமூகத்துக்குஉணர்த்திடவே அம்பேத்கரின் வழியில் 22 உறுதிமொழிகளை ஏற்றுள்ள பௌத்தர்கள் விரும்புகின்றனர்.
அம்பேத்கரின் பௌத்தம் மதமே
- பௌத்தத்தைப் பரப்புவதற்காக அம்பேத்கரே தயாரித்த திட்ட வரைவு, பௌத்தம் ‘மதம்’ என்பதற்கான ஆணித்தரமான ஆதாரமாகத் திகழ்கிறது. பட்டியல் சாதியினரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் கிறித்துவத்தைவிட பௌத்தத்தை விரும்ப (prefer) அவர் கூறிய மூன்றில் இரண்டு காரணங்கள் கவனத்துக்குரியவை: ஒன்று, பௌத்தம் பகுத்தறிவு ‘மதம்’ (Buddhism is rational religion); இரண்டு, பௌத்தம் இந்தியாவுக்கு அந்நியமான ‘மதம்’ கிடையாது. இத்திட்ட வரைவில் உள்ள அநேகப் பரிந்துரைகள் பௌத்தத்தை மதமாகக் கட்டமைக்க அம்பேத்கர்நம்பிய செயற்திட்டங்களைப் பட்டியலிடுகிறது. இந்தியாவில் பௌத்தத்தை மதமாகப் பார்ப்பவர்கள், 22 உறுதிமொழிகளை ஏற்பதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இது தவறான கருத்து என்பதற்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தீட்சா பூமியில் திரளும் லட்சக்கணக்கான பௌத்தர்களே கண்கூடான சாட்சி.
- அவர்களுக்கும் அங்கே கூடும் பிக்கு - பிக்குணி சங்கத்துக்கும் இடையேயான உறவு, மத உறவல்ல என யாராலும் மறுத்திட முடியாது. அனைத்து பௌத்த நாடுகளும் பின்பற்றும் பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான எண் மார்க்கம், பத்து பாரமிதாக்கள், பஞ்சசீலம் ஆகியனவற்றை 11 முதல் 17ஆவது உறுதிமொழிகளாக அம்பேத்கர் வகுத்திருப்பது பௌத்தத்தை அறநெறியுடன் நிறுத்திக்கொள்ளாமல், மதமாகவும் அவர் கட்டமைத்திருப்பதையே காட்டுகிறது. அம்பேத்கர் பௌத்தத்தை மதமாகக் கருதாவிடின், ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலில் நூற்றுக்கணக்கான இடங்களில் ‘மதம்’ என்ற சொல்லை ஏன் அவர் பயன்படுத்த வேண்டும்? அதனை எவ்வாறு நாம் பொருள் கொள்வது?
தம்மம் என்பது மதம்
- அம்பேத்கர் ‘மதம்’ என்று சொல்லாமல் ‘தம்மம்’ என்றே குறிப்பிட்டார்; அவர் எழுதிய நூலுக்கு ‘புத்தரும் அவருடைய மதமும்’ என்று தலைப்பிடாமல் ‘புத்தரும் அவர் தம்மமும்’ எனத் தலைப்பிட்டார் என்பதும் பௌத்தத்தைப் பகுத்தறிவாக மட்டும் பார்ப்பவர்களின் முக்கிய வாதமாக இருக்கிறது. புத்தர் ஞானமெய்தி ஆற்றிய முதல் பேருரையை இதே நூலில் அம்பேத்கர் விளக்குகிறார். அவ்விடத்தில் ‘தம்மம்’ என்றால் என்ன என்பதை முதல் முறையாக நம்மால் அறிய முடிகிறது. ‘தம்மம்’ என்பதற்கு அடைப்புக்குறிக்குள் ‘மதம்’ என அம்பேத்கர் விளக்கியிருக்கிறார். அடைப்புக்குறியினைப் பயன்படுத்தியிருப்பது குழப்பங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்ற அம்பேத்கரின் முனைப்பினை உணர்த்து கிறது. மேலும், இது அவரே நமக்கு அளிக்கும் புரிதலாக வும் இருக்கிறது.
- புத்தரின் தம்மம் (மதம்) என்பது கடவுள், ஆன்மா, இறப்புக்குப் பிறகான வாழ்வு, சடங்கு, சம்பிரதாயங்கள் என எவற்றுடனும் தொடர்பில்லாததாக இருக்கிறது; மனிதனை மையப்படுத்தியும் வாழ்வதற்குத் தேவையானமனிதர்களுக்கு இடையேயான உறவினை மையப்படுத்தியும் புத்தரின் தம்மம் இருக்கிறது என அம்பேத்கரின் விளக்கம் தொடர்கிறது. பௌத்தம் ‘பகுத்தறிவையும் உள்ளடக்கிய மதம்’ என்பது இதனால் தெளிவாகிறது. ஆகவே, பௌத்தத்தை மதமாக (தம்மம்) பார்க்காதவரை, அம்பேத்கர் மதத்தை எவ்வாறு மறுவரையறை செய்தார் என்பதைப் புரிந்துகொள்ள இயலாது.
- பகுத்தறிவும் மதமும் முரண்பட்டவை என்ற கண்ணோட்டத்துடன் பட்டியல் சாதியினரின் பௌத்த ‘மத’ வாழ்வியலை விமர்சிக்க வேண்டியதில்லை. மதம் என்பது வெறும் விதிகளாக இல்லாமல் கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்ற அம்பேத்கரது வரையறையின் வெளிப்பாடே ‘தம்மம் என்பது மதம்’. மதம் தம்மமாக இல்லாதவரை பகுத்தறிவாகவும், அறநெறியாகவும் மானுடத்துக்கான அடிப்படைக் கொள்கையாகவும் இருக்க முடியாது என்பதே இவ்வரையறையின் நீட்சி.
அம்பேத்கர் என்ன சொல்கிறார்
- பௌத்தத்தை (தம்மம்) மதமாக ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அம்பேத்கரின் வார்த்தைகளே விளக்கம் அளிக்கின்றன. ‘பலர் பௌத்தம் என்பதைத் தவறாக ஒரு மதம் என்றே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்’ என்று பெரியாரும் எழுதியிருக்கிறார். ‘அம்பேத்கரும் பெரியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்’ என்பது பலரது அணுகுமுறையாக இருப்பதாலும், பெரியாரின் அதீத தாக்கத்தினாலும்கூட, அம்பேத்கரிய பௌத்தம் ஒரு பகுத்தறிவு நெறி என்றும் மதமாகக் கருதிடக் கூடாது என்றும் கூறுவது இயல்பாகிவிட்டது. உண்மையை உண்மையென நாம் அறிய முற்படின், பௌத்தத்தைப் பொறுத்தவரையில் இரு தலைவர்களின் அடிப்படை வரையறை மாறுபடுகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
- பௌத்தத்தை விமர்சிக்கும் சிலர் பௌத்தம் ஒரு மதமாகாது என்ற நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளனர். அத்தகைய விமர்சனத்துக்கு நாம் முக்கியத்துவம் தரத் தேவையில்லை. இருப்பினும், பதில் ஒன்றைத் தர வேண்டுமாயின், பௌத்தம் ஒன்று மட்டுமே உண்மையான மதம் என்றும் இதனை ஏற்காதவர்கள் மதம் குறித்தான அவர்களது வரையறையை மாற்றிக்கொள்ள வேண்டும். என்றும் ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலில் அம்பேத்கரின் நேரடி விளக்கமாக இவை உள்ளன. அதே நூலில், புத்தரின் ‘தம்ம’த்தை மதம் என்று ஒப்புக்கொள்ளாத ஐரோப்பிய இறையியலாளர்களை நோக்கி, நஷ்டம் அவர்களுக்கே என்றும் அத்துடன் மதம் எதனை உள்ளடக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது என்றும் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
- பௌத்தத்தை ‘மதம்’ என்று ஏற்றுக்கொள்வதில் அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இடையேயான வேறுபாடு என்பது சமூக முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டையாக மாறிட வாய்ப்புள்ளது. அது நிகழக்கூடாதெனின், பொதுச் சமூகம் அம்பேத்கரின் பௌத்தத்தை மதமென முற்றிலுமாக அங்கீகரிக்க வேண்டியுள்ளது. மதம் என்பது இனி தன்னியல்பாக வந்து சேரக் கூடாது; பகுத்தறிவுடன் அதனை அனைவரும் சோதித்துப் பார்த்து ஏற்க வேண்டும் என்ற அம்பேத்கரின் வழிகாட்டுதலை இங்கு நினைவுபடுத்துவதும் அவசியமாகிறது.
- தமிழ்நாட்டில் உள்ள பௌத்தர்கள், சமீப காலமாகத் தங்களுக்கான பௌத்த அறநிலையத் துறையை அரசு உருவாக்கிட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். சிறுபான்மையினர் சான்றிதழ் பெறுவதிலும் அவர்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், அம்பேத்கரின் பௌத்தத்தை மதமாக ஒத்துக்கொள்ளத் தயங்குவது சட்டச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. பாபாசாகேப் அம்பேத்கரின் உச்சம் பௌத்தம். சந்தேகமின்றி, அவரின் பௌத்தம் (தம்மம்) என்பது மதம். இவ்வரையறையைச் சரியாகப் புரிந்துகொள்வதே அவருக்கு நாம் செய்யும் மிகச்சிறந்த மரியாதை.
நன்றி: தி இந்து (06 – 12 – 2023)