TNPSC Thervupettagam

‘திறன் மேம்படுத்துதல்’ - ஏன் அவசியம்?

July 31 , 2024 163 days 228 0
  • ஒவ்வொரு நாளும் வளர்ந்துவரும் தொழில்நுட்பம், மாறிவரும் பணிச்சூழலில், புதிய வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்கள் அறிந்திருத்தல் நல்லது. நீங்கள் தேர்ந்தெடுக்கவுள்ள துறையில் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், கற்றுக் கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து நன்கு புரிந்து கொண்டால், பயணிக்க வேண்டிய பாதைத் தெளிவாக உங்களுக்குப் புலப்படும். எதிர்காலத்தில் வரவுள்ள நவீன மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியும்.
  • இனி வருங்காலத்தில், ஒருவருடைய கரியரில் (career) ஐந்துக்கும் மேற்பட்ட பணிகளுக்கு மாறும் சூழல் நிலவக்கூடும். அதற்குத் தேவையான திறன்களை, தகுதிகளை வளர்த்துக் கொண்டே இருந்தால்தான் பணியில் நீடித்திருக்க முடியும். வேகமாக மாறும் தொழில்நுட்ப வளர்ச்சியில் வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். திறனை மேம்படுத்திக் (Upgrading Skills) கொண்டே இருக்க வேண்டும்.

திறனறித் தேர்வு

  • போட்டித் தேர்வுகளில் திறனறித் தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. திறனறித் தேர்வு என்பது குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கேற்ப உளப்பாங்கு ஒருவரிடம் அமைந்துள்ளதா என்பதைச் சோதிக்கும் தேர்வாகும். உளவியல் தேர்வின் ஒரு பகுதியாகவே திறனறித் தேர்வு விளங்குகிறது. சிந்திப்பது என்றால் மாற்று வழியில் சிந்திப்பது (alternative), வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பது (lateral thinking), ஒரு குறிப்பிட்ட விஷயத்தை வெளியிலிருந்து அணுகுவது (out of box thinking) போன்றவற்றை மெருகேற்றிக் கொண்டால் திறனறித் தேர்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும்.

புத்திக்கூர்மைத் திறன்

  • புத்திக்கூர்மை என்பது ‘புதிய சூழலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ளும் திறன், சிக்கலான நிலைகளில் புதிய உத்திகளை விரைவாகச் சிந்தித்து உருவாக்குதல்’ எனப் பொதுவாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர, தர்க்கரீதியாக ஆராயும் திறன் (Logical Reasoning Ability), பகுத்தாய்வுத் திறன் (Analytical Reasoning), எந்த ஒரு சிக்கலான விஷயத்தையும் எளிதாகவும் உடனடியாகவும் கிரகித்துக்கொள்ளும் திறன், முடிவெடுக்கும் திறன், அசாத்தியமான சூழல்களைச் சமயோசிதமாகக் கையாளும் திறன், சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் (Trouble Shooting) போன்ற அனைத்து திறன்களும் இன்றைய உலகில் வேலை வாய்ப்புக்கு மட்டுமன்றி அன்றாட வாழ்விற்கும் மிக அவசியமானவை.
  • இதனால்தான் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில், குறிப்பாக வங்கித் தேர்வு, ரயில்வே தேர்வுகளில் புத்திக்கூர்மை பகுதிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களும் ‘Aptitude’ தேர்வுகளை நடத்துகின்றன. இத்திறன் வேலைவாய்ப்புகளைப் பெறவும், பணிபுரியும் இடத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றவும் உதவும். உதாரணமாக இசைக் கருவியை இசைப்பதில் ஒரே மாதிரியாக இருவர் பயிற்றுவிக்கப்படுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம். பயிற்சிக் காலம் முடிந்த பின்பு, இருவரின் இசைக் கருவி வாசிக்கும் திறனும் ஒன்றாக இருக்கவே முடியாது. ஒருவர் மிகச் சிறப்பான திறனைப் பெற்று, அந்தத் துறையில் மிகப் பிரபலமடைவார். இதற்குக் காரணம் அவரது உளச்சார்பே. ஒருவரின் உளச்சார்பைச் சரியாகக் கண்டறிந்து, அதில் அவருக்கு முறையாகப் பயிற்சி அளித்தால், அவர் அளப்பரிய சாதனைகள் பல நிகழ்த்துவார். இயற்கையாகவே திறன் பெற்ற ஒருவருக்குப் பயிற்சி அளிக்கும்போது, அவர் அத்துறையில் ஜாம்பாவனாக விளங்குவார்.

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories