TNPSC Thervupettagam

‘நெக்ஸ்ட்’ தேர்வு: மருத்துவப் படிப்புக்குப் புதிய அடி

August 1 , 2019 1983 days 2194 0
  • நாட்டில் தற்போது செயல்முறையில் இருக்கும் இந்திய மருத்துவ கவுன்சிலை (MCI) கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் (NMC) அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மசோதாவில் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக, எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் ‘நெக்ஸ்ட்’ (National Exit Test) தேர்வை எழுத வேண்டும்; இதில் வெற்றி பெறுபவர்கள்தான் இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிய முடியும். ‘நெக்ஸ்ட்’ தேர்வு மதிப்பெண் மட்டுமே மருத்துவ முதுநிலைப் படிப்பில் அனுமதிப்பதற்குத் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். சென்ற வாரம் இந்தப் புதிய மசோதாவின் நகல் எரிக்கும் போராட்டத்தைத் தேசம் முழுவதும் நடத்தினர்.
  • இதுவரை, எம்பிபிஎஸ் மாணவர்கள் நான்கரை வருடக் கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும். அந்தந்த மருத்துவப் பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் நடத்தும் பொதுத் தேர்வுகளில் வெற்றிபெற்றதும், ஓர் ஆண்டு காலம் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிய வேண்டும். பிறகு, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்து இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மருத்துவராகப் பணிபுரியலாம் என்னும் நடைமுறை இருந்தது. அதேபோல, முதுநிலை மருத்துவப் படிப்புக்குத் தனியாக ‘நீட்-பிஜி’ தேர்வை எழுத வேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இப்போதுள்ள வழக்கம்.

புதிய நடைமுறை

  • இப்போதைய அறிவிப்பின்படி, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர், முதல் மூன்றரை ஆண்டுகள் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வுகளை எழுத வேண்டும். இந்தியா முழுவதும் நடத்தப்படும் ‘நெக்ஸ்ட்’ பொதுத்தேர்வை இறுதி ஆண்டில் எழுத வேண்டும். இதுவரை வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் ‘எஃப்எம்ஜிஇ’ தேர்வை எழுதினார்கள். அதில் வெற்றிபெற்றால்தான் இந்தியாவில் பயிற்சி மருத்துவராகவும், அதன் பிறகு பதிவுசெய்யப்பட்ட மருத்துவராகவும் பணியாற்ற முடியும். இந்தப் புதிய மசோதாவின்படி இனி அவர்களும் ‘நெக்ஸ்ட்’ பொதுத்தேர்வையே எழுத வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கும் இனி ‘நெக்ஸ்ட்’ தேர்வுதான்.
  • மருத்துவ மாணவர்கள் முதலாண்டு தொடங்கி இறுதி ஆண்டு வரை எல்லாப் பாடங்களையும் சரியாகப் படித்திருக்கிறார்களா என்பதைச் சோதிப்பதும், திறமையான மருத்துவர்களை உருவாக்குவதும், இந்தியாவில் உருவாகும் எல்லா மருத்துவர்களின் செயல்திறனும் ஒன்றுபோல் இருக்கவும், உலக அளவில் நம் மருத்துவர்களின் தரத்தை உயர்த்துவதும் இந்தத் தேர்வின் நோக்கம் என்கிறது மத்திய அரசு. எம்பிபிஎஸ் படிப்பில் நான்கரை ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக 24 தாள்கள் இருக்கின்றன. இறுதி ஆண்டில் நான்கு பாடங்களுக்கு 7 தாள்கள். அனைத்துப் பாடத் தேர்வுகளிலும் எழுத்து, செய்முறை, வாய்மொழித் தேர்வுகள் உண்டு. தற்போதைய அறிவிப்பில், ‘நெக்ஸ்ட்’ தேர்வில் 24 தாள்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்படுமா அல்லது இறுதி ஆண்டுக்கான நான்கு பாடங்களிலிருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்படுமா என்பதைத் தெளிவுபடுத்தவில்லை. 24 தாள்களையும் இணைத்த தேர்வாக இருந்தால், அது மாணவர்களுக்குப் பெரிய சுமையாகவும் தண்டனையாகவும் அமையும். இறுதி ஆண்டின் நான்கு பாடங்களுக்கு மட்டும் என்றால், அதன் மூலம் ஒட்டுமொத்த மருத்துவப் படிப்பின் தரத்தை உறுதிசெய்யவும் முடியாது; மேம்படுத்தவும் முடியாது.

பறிபோகும் கல்வி உரிமை

  • அடுத்து 2, 5, 10 மதிப்பெண் கேள்விகள், வழக்கமான தேர்வுமுறைப்படி இருக்குமா அல்லது கொடுத்த பதில்களில் சரியானதைத் தேர்ந்தெடுக்கும் கேள்விகளாக இருக்குமா என்பதையும் இந்த மசோதா தெளிவுபடுத்தவில்லை. எம்பிபிஎஸ் படிப்புக்கும் முதுநிலைப் படிப்புக்கும் பொதுவானது ‘நெக்ஸ்ட்’ தேர்வு என்கிறது மத்திய அரசு. இது அவசியமில்லாதது. காரணம், எம்பிபிஎஸ் முடித்த எல்லோருமே முதுநிலைப் படிப்புக்குச் செல்ல விரும்புவதில்லை; அப்படியே விரும்பினாலும் எல்லோருக்கும் அங்கு இடம் இல்லை. அதனால், பலரும் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றதும் தனியார் மருத்துவராகவோ, அரசு மருத்துவராகவோ பணிக்குச் சென்றுவிடுவர். தற்போதுள்ள தேர்வுமுறையில், இவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, விரும்பும்போது ‘நீட்-பிஜி’ தேர்வு எழுதி முதுநிலைப் படிப்பில் சேர்ந்துகொள்ள முடியும். ஆனால், ‘நெக்ஸ்ட்’ தேர்வில் அதற்கான வாய்ப்பு இல்லை. மருத்துவராவதற்கும் முதுநிலைப் படிப்புக்கும் ‘நெக்ஸ்ட்’ மதிப்பெண்தான் முக்கியம் என்றாகிவிட்டால், முதலாண்டில் இருந்தே மாணவர்கள் ‘நெக்ஸ்ட்’ தேர்வுக்குத் தயாராவார்கள். அப்போது முதல் மூன்றரை ஆண்டு பாடங்களை முழுமனதுடன் படிக்க மாட்டார்கள். இது மாணவர்களின் தரத்தைக் குறைக்கும்.
  • நெக்ஸ்ட்’ தேர்வுமுறை மருத்துவ மாணவர் களுக்குச் சுமையாகும்போது, அதில் தேர்ச்சி பெறுவதற்குத் தனிப் பயிற்சிகள் தேவைப்படும். அப்போது இதற்கெனத் தனியார் பயிற்சி மையங்கள் உருவாகும். அவற்றில் பயிற்சி பெறுவதற்குப் பல லட்சங்கள் தேவைப்படும். எம்பிபிஎஸ் பட்டம் பெறுவதற்கே பல ஆண்டுகள் ஆகும். இதனால், விளிம்புநிலை மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதே எட்டாக் கனி ஆகிவிடும்; அடித்தட்டுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பின் மீதுள்ள ஆர்வம் குறையும். அப்போது சமூகத்தில் உயர்நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இது ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாகிவிடும்.

மக்கள்நல அரசின் கடமை

  • இந்தியாவில் 460-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இங்கு இருக்கும் எல்லா மருத்துவக் கல்லூரிகளின் தரமும் ஒன்றல்ல. நாட்டில் பல மருத்துவக் கல்லூரிகளில் போதிய அளவுக்குப் பேராசிரியர்கள் இல்லை; திறமையான ஆசிரியர்களும் இல்லை; தரமான பரிசோதனைக் கருவிகள், ஆய்வுக்கூடம் மற்றும் நூலக வசதிகள் இல்லை. இருக்கும் பேராசிரியர்களுக்கும் மருத்துவமனைப் பணிகளே அதிகம் என்பதால், அவர்கள் எம்பிபிஎஸ் மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதில்லை; உதவிப் பேராசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் அல்லது முதுகலை படிக்கும் மாணவர்கள்தான் வகுப்பு நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை ஒன்றுபடுத்தாமல் மாணவர்களின் தரம் மட்டும் ஒன்றுபோல் இருக்க வேண்டும் என்று அரசு எதிர்பார்ப்பது நகை முரண்.
  • ஆகவே, பல நிலைகளில் தெளிவில்லாத இந்த மசோதாவை அமல்படுத்துவதில் மத்திய அரசு அவசரப்படக் கூடாது. மருத்துவர்களின் கோரிக்கைகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது. கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டும், இன்னும் நன்றாக ஆலோசித்தும், தேர்வுமுறைகளைத் தெளிவுபடுத்தி, மாணவர்களின் கல்வி உரிமை பறிபோகாத அளவுக்கு இதை நடைமுறைப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; ஒரு நேர்மையான மக்கள்நல அரசின் கடமையும்கூட.

நன்றி: இந்து தமிழ் திசை(01-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories