TNPSC Thervupettagam

‘பிஎம் கிசான் யோஜனா’ பெயரில் மோசடி: அரசாங்கம் உடனே களமிறங்க வேண்டும்!

November 25 , 2024 54 days 102 0
  • விவசாயிகளுக்கு சேர வேண்டிய மானியத்தை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தும் ‘பிஎம் கிசான் யோஜனா’ எனப்படும் மத்திய அரசின் திட்டம் மூலம், நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். தகுதியுள்ள விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்தால், அவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு மானியத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் பெயரைவைத்து ‘பிஎம் கிசான் யோஜனா’ என்ற பெயரில் புதிய செயலி (ஆப்) ஒன்றை மோசடி பேர்வழிகள் தயாரித்து வெளியிட்டுள்ளனர். மத்திய அரசின் மானியம் பெற இந்த செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று கூறி, அந்த செயலி மூலம் அப்பாவி விவசாயிகள் சிலரின் ‘கூகுள் பே’ கணக்கில் இருந்து பணத்தை அபகரித்துள்ள அதிர்ச்சிகரமான செய்தி சமீபத்தில் வெளியாகி உள்ளது.
  • அதிகம் படிக்காத ஏழை, எளிய விவசாயிகளை குறிவைத்து விவசாய மானியம் தருகிறோம் என்று ஆசைகாட்டி இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு நலத்திட்டங்களின் பெயரில் இதுபோன்ற மோசடி செயலிகளை உருவாக்குவது மிகவும் ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும். மாநில அரசுகளின் பெண்களுக்கான மாத உதவித்தொகை போன்ற திட்டங்களை பயன்படுத்தியும் ஆங்காங்கே மோசடிகள் நடைபெறுவது அவ்வப்போது செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.
  • இதனால் மோசடி செயலிகளை உண்மை என நம்பி பணத்தை ஏமாறும் செயல் ஒருபுறம் நடந்தாலும், அரசின் உண்மையான திட்டங்களுக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கவே யோசிக்கும் நிலையையும், மத்திய அரசின் விண்ணப்பங்களை சந்தேக கண்ணோடு பார்க்கும் நிலையையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். இத்தகைய போக்கு நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. அரசு திட்டங்களின் பெயரில் நடைபெறும் மோசடிகளை அரசு அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • இணையதளங்கள் 90-களில் வளர்ச்சியடைய தொடங்கியபோது, இதேபோன்ற பிரச்சினைகளை அரசு நிறுவனங்கள் சந்தித்தன. அரசு நிறுவனங்களின் இணையதளங்கள் எது, தனியார் நிறுவனங்களின் இணையதளங்கள் எது என்று வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை இருந்ததால், அதை பயன்படுத்தி பல ஏமாற்று வேலைகளும் அரங்கேறின.
  • அப்போது அரசு சுதாரித்துக் கொண்டு, தேசிய அளவில் தகவல்தொடர்பு அமைப்பை உருவாக்கி, ‘nic.in, gov.in’ போன்ற அடைமொழிகளுடன் முடிந்தால் அரசு அமைப்புகள் என்று எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வசதிகளை ஏற்படுத்தியது. மாநில அரசுகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் இரண்டு எழுத்துக்களுடன் ‘gov.in’ என்ற அடைமொழி வரும்போது அது மாநில அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்று புரிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்தி தந்தது.
  • இதன்பிறகு, ஏமாற்று வேலைகள் கட்டுக்குள் வந்தன. கைபேசி செயலிகள் மூலம் தற்போது பல பணிகள் நடந்துவரும் நிலையில், தாமதிக்காமல் அரசு அமைப்புகளின் செயலிகளுக்கும், தனியார் அமைப்புகளின் செயலிகளுக்கும் வேறுபாடு இருக்கும் வகையில், ஏதாவது ஒரு அம்சத்தை அரசு கொண்டுவர வேண்டும். இதை உடனே செய்தால் மட்டுமே ஏழை எளிய மக்களை இன்றைய காலகட்டத்தில்மோசடிகளில் இருந்து காப்பாற்ற முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories