‘மாட்சிமை’ என்கிற சொல் எப்படி வந்தது?
- மாட்சிமை என்கிற சொல்லின் மூலம் மாண், மாண்பு என்பதாக இருக்கிறது. மாட்சி என்கிற சொல்லை திருவள்ளுவர் 3 அதிகாரங்களில் படை மாட்சி, பகை மாட்சி, இறை மாட்சி என்று பயன்படுத்தியுள்ளர். மாட்சி என்பதற்குப் பெருமை, மேன்மை, மகிமை, அழகு என்று பொருள். சிலப்பதிகாரம் ‘மாட்சிமையுடையார் கொடுக்கு மரபுபோல’ என்பதாகப் பாடியுள்ளது. திருவள்ளுவர் பயன்படுத்திய மாட்சி என்கிற சொல்தான் இங்கு மாட்சிமை என்று பண்புச் சொல்லாகியிருக்கிறது.
மாட்சிமை தங்கிய மதுரை:
- 1907ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பு ஆர்.ஸ்ரீநிவாஸ ராகவ ஐயங்கார் ’மஹோபந்நியாசம்’ எனும் நூலைத் தமிழுக்கு மொழிபெயர்த்தார். இந்த நூல் பரோடா சமஸ்தானாதிபதிகளாகிய மாட்சிமை தங்கிய கைக்வார் மஹாராஜா கல்கத்தாவில் நடந்த இந்தியக் கைத்தொழிற்சங்கத்தின் இரண்டாவது கூட்டத்தில் செய்தருளியது என்கிற குறிப்பாக இந்நூல் வெளியானது.
- ஒரு மன்னர் பெயருக்கு முன்பு முதலில் ‘மாட்சிமை தங்கிய’ என்கிற அடைமொழி இடம்பெற்றது பரோடா மன்னர் பெயருக்கு முன்புதான். இந்நூலை மதுரை தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ் பத்திரிகை பதிப்பித்தது. அடுத்ததாக மதுரையைச் சேர்ந்த சொக்கலிங்கப் பெருமான் சிவனின் 64 திருவிளையாடல்களையும் 64 படலமாக இயற்றினார். இவற்றின் முதலாவது படலம் இந்திரன் பழிதீர்த்தது.
- இந்தப் படலம் 1923ஆம் ஆண்டு மதுரை சிவனடியார் திருக்கூட்டத்தாரால் மதுரை மீனலோசனி அச்சியந்திரசாலையில் பதிப்புக் கண்டது. இந்நூல் மாட்சிமை தங்கிய மதுரையம் பதியில் எழுந்தருளியிருக்கும் சாக்ஷராத் சொக்கலிங்கப் பெருமான் செய்தருளிய 64 திருவிளையாடல்களுள், முதலாவது இந்திரன் பழிதீர்த்தது எனும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. ஒரு நகருக்கு முன்பு மாட்சிமை தங்கிய என்கிற சிறப்பை முதலில் மதுரை பெற்றது.
- சிங்கப்பூர், மலேசியா நாடுகள் ‘மாட்சிமை தாங்கிய’ என்பதாகப் பயன்படுத்துகின்றன. தங்கிய என்பது இறந்தகாலச் சொல்லாகவும் தாங்கிய என்பது தாங்கி நிற்கின்ற என்கிற நிகழ்காலச் சொல்லாகவும் கொள்ள இடமிருக்கிறது. மலேசியா அதிபர் மாட்சிமை தாங்கியவராக அழைக்கப்படுகிறார்.
- இந்தச் சொல் தமிழகத்தில் மாண்புமிகு என்பதாக விளிக்கப்படுகிறது. இந்தச் சொல் ’கனம்’ என்கிற சொல்லுக்கு மாற்றாக இடம்பெற்றது. இந்தச் சொல் முதலில் உரத்தநாட்டில் கல்லூரியைத் திறந்துவைக்க அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராசர் வருகையில் அதுவரைக்கும் ‘கனம்’ முதலமைச்சர் என்று கல்வெட்டில் வடித்த மரபுக்கு மாறாக ’மாண்புமிகு’ என்று இடம்பெறச் செய்தார்கள்.
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி:
- மதுரை செந்தமிழ் இதழை முழுமையாக வாசிக்கையில் பல இடங்களில் மாட்சி, மாட்சிமை, மேன்மை ஆகிய சொற்கள் பயன்பட்டிருப்பது தெரியவருகிறது. புதுக்கோட்டை மன்னரை ஓரிடத்தில் மேன்மை தங்கிய மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் பஹதுர் புதுக்கோட்டை மகாராஜா என்று குறிப்பிட்டுள்ளது. கனம், ஸ்ரீ ஆகிய சொற்களுக்கு மாற்றாக இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளது.
- இந்த இதழில் தமிழ்ப் பங்களிப்பு செய்த அன்றைய புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியின் தமிழாசிரியர் நா.கனகராஜய்யர் தான் பணியாற்றிய நூல்களில் மகாராஜா என்கிற சொல்லுக்குப் பதிலாக அரசர் என்கிற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இவரது காலத்தில்தான் இந்தக் கல்லூரி மேன்மை தங்கிய எனும் மாட்சிமை தங்கிய என்கிற அடைமொழியுடன் அழைக்கத் தொடங்கியது.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 03 – 2025)