TNPSC Thervupettagam

‘வாலிபப் பெரியார்’ ஏ.வி.பி.ஆசைத்தம்பி

September 25 , 2024 112 days 125 0

‘வாலிபப் பெரியார்’ ஏ.வி.பி.ஆசைத்தம்பி

  • திரா​விடர் கழகத்​திலிருந்து அறிஞர் அண்ணா வெளியேறி ‘திராவிட முன்னேற்றக் கழக’த்தைத் தொடங்​கிய​போது, அண்ணாவுடன் இருந்து கட்சியைத் தொடங்கிய மூத்த தலைவர்​களில் ஒருவர் ஏ.வி.பி.ஆசைத்​தம்பி.
  • விருதுநகரில் 24.09.1924 அன்று பழனியப்​பன்​-நாகம்மாள் இணையருக்குப் பிறந்த ஆசைத்​தம்பி, மாணவப் பருவத்​திலேயே சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈர்ப்​புக்​கொண்​டார். அவ்வியக்​கத்தின் சிற்றிதழ்கள், நாளேடுகளை ஆர்வத்​துடன் படித்​ததோடு, சுற்று​வட்​டாரத்தில் இயக்கத் தலைவர்​களின் மேடைப் பேச்சுகளைக் கேட்டு விழிப்பு​உணர்வு பெற்றார். 28.05.1944 அன்று பெரியார் தலைமையில் பரமேசுவரி அம்மாளைச் சீர்திருத்தத் திருமணம் செய்து​கொண்​டார்.

அரசியல் பயணம்:

  • 1957இல் திமுக போட்டி​யிட்ட முதல் தேர்தலில் வெற்றி​பெற்ற முதல் 15 சட்டமன்ற உறுப்​பினர்​களில், ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டி​யிட்டு வென்று சட்டமன்​றத்தில் நுழைந்தார் ஆசைத்​தம்பி. திமுக ஆட்சியைக் கைப்பற்றிய 1967 சட்டமன்றத் தேர்தலில் ஆசைத்​தம்பி எழும்பூர் தொகுதி​யில், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி வெங்கடாசலத்தை எதிர்த்து நின்று மாபெரும் வெற்றி​பெற்று சட்டமன்றம் சென்றார். அண்ணா மறைந்​தவுடன் அரசுப் பொறுப்​பேற்ற அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி, ஆசைத்​தம்​பிக்குச் சுற்றுலாத் துறை வாரியத்தின் தலைவர் பதவியை வழங்கினார்.
  • அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்த​போது, ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றுச் சிறையில் கடும் சித்ர​வதைக்கு உள்ளானவர் ஆசைத்தம்பி. 1977 மக்களவைத் தேர்தலில் திமுகவின் ஒரே மக்களவை உறுப்​பினராக வட சென்னைத் தொகுதியி​லிருந்து தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.
  • மாநில சுயாட்சி, பெண் கல்வி, தமிழ்மொழி வழி அர்ச்சனை ஆகியவற்றுக்கு ஆதரவாக​வும், தீண்டாமைக் கொடுமை, இந்தித் திணிப்பு, பாலியல் தொழில் தடுப்பு போன்ற​வற்றுக்கு எதிராகவும் நாடாளு​மன்​றத்தில் ஆசைத்​தம்பி எழுப்பிய முழக்​கங்கள் வரலாற்றுச் சிறப்பு​மிக்கவை.

தீரம் மிக்க செயல்​வீரர்:

  • ‘தனி அரசு’ எனும் இதழினை முதலில் வார இதழாகவும் பின்னர் நாளிதழாகவும் நடத்தி​யவர். இந்த இதழ் அன்றைய தலைமுறை​யினரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்​தியது. 1958 முதல் 1963 வரை ‘தனி அரசு’ நாளேட்டின் மூலம் மாபெரும் விழிப்பு​ணர்வை ஏற்படுத்​தினார்.
  • அன்றைய முன்னணி மேடைப்​பேச்​சாளர்​களில் ஒருவர் ஆசைத்​தம்பி. அவருடைய மேடைப் பேச்சு நிதானமாக, அழுத்​தந்​திருத்​தமாக, ஆழ்ந்த பொருளில் கேட்போரைச் சிந்திக்​கவைக்கும் வண்ணம் பெரியாரின் பேச்சுபாணியில் அமைந்​த​தால், அன்றைய சுயமரியாதை இயக்கத்​தினரும், திராவிட முன்னேற்றக் கழகத்​தினரும் அவரை ‘வாலிபப் பெரியார்’ என அழைக்க, பின்னர் அதுவே அவரின் சிறப்புப் பெயராகவும் நிலைபெற்றது. சிறிது காலம் அண்ணாவிடமிருந்து விலகி​யிருந்​தாலும் கட்சி அமைப்​புக்​குள்​ளாகவே செயல்​பட்​டார்.
  • இவர் 24 கதை நூல்களும், 14 வரலாற்று நூல்களும் எழுதி​யுள்​ளார். ‘காந்தியார் சாந்தி​யடைய’ எனும் நூல் எழுதி​யமைக்கு காங்கிரஸ் அரசால் சிறையில் அடைக்​கப்​பட்​டார். திமுக வரலாற்றில் நூல் எழுதி​யதற்காக முதன்​முதலில் சிறைத் தண்டனை பெற்ற வரலாற்றுப் பெருமை உடையவர். 2007ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, ஆசைத்​தம்பியின் நூல்களைச் சட்டமன்​றத்தில் நாட்டுடைமை ஆக்கி அறிவித்​தார்.
  • தமிழினத்தின் சிறப்பைக் கடல்கடந்து பரப்பிட அந்தமான் சென்ற ஆசைத்​தம்பி, தலையில் ஏற்பட்ட ரத்தக்​குழாய் வெடிப்பு காரணமாக 07.04.1979 அன்று அங்கேயே காலமானார்.
  • 24.09.2024: ஏ.வி.பி. ஆசைத்​தம்பி நூற்றாண்​டு

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories