‘வீடுகளில் மானியத்துடன் சோலார் பேனல்கள்... 25 ஆண்டுக்கு மின் கட்டணத்தை மிச்சப்படுத்தலாம்!’ - சாஸ்தா எம்.ராஜா பேட்டி
- மக்கள் தொகையும் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மின்சாரத்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திட்டங்கள் உதவுகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளதால் இத்தகைய திட்டங்கள் மனிதர்களுக்கு இயற்கை அளித்த வரமாகவே கருதப்படுகின்றன. இதை உணர்ந்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
- இதுகுறித்து தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா அளித்த பேட்டியிலிருந்து..சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நாடுகள் எவை? சீரான முறையில் மின்சாரம் பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன? - சூரிய ஒளி மின்உற்பத்தி திட்டத்தை சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. இந்திய அரசு சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, 2030-ம் ஆண்டுக்குள் தன்னிறைவு அடையும் நோக்கில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சோலார் பேனல்களை எந்த திசையில் அமைக்க வேண்டும்?
- சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தை வீடு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் செயல்படுத்தலாம். சூரிய ஒளி மூலம் சிறந்த மின் உற்பத்தி பெற சோலார் பேனல்களை (மின் உற்பத்தி செய்ய உதவும் தகடுகள்) தெற்கு திசை நோக்கி அமைக்க வேண்டும். இதனால் கிழக்கில் சூரியன் உதித்துமேற்கில் மறையும் வரை அதன் ஒளி மூலம் சீரான முறையில் மின் உற்பத்தி செய்ய முடியும்.
சோலார் பேனல் அமைக்க எவ்வளவு செலவாகும்?
- ஒரு கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தால் ஒரு நாளுக்கு 5 யூனிட் வீதம் ஆண்டுக்கு 1,825 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஒரு வீட்டுக்கு 5 கிலோ வாட் முதல் 10 கிலோ வாட் வரை கட்டமைப்பு ஏற்படுத்தினால் தினமும் 25 முதல் 50 யூனிட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இன்றைய சூழலில் ஒரு கிலோ வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு (பேனல், ஸ்ட்ரக்சர், கேபிள், இன்வெர்டர்) ஏற்படுத்த சுமார் ரூ.50 ஆயிரம் செலவாகும்.
வீடுகளுக்கு சோலார் பேனல் அமைக்க அரசு மானியம் ஏதேனும் வழங்குகிறதா?
- வீடுகளுக்கு சூரிய ஒளி ஆற்றல் மின் உற்பத்தி திட்டத்தை (ரூப் டாப்) செயல்படுத்த மத்திய அரசு ‘PM Surya Ghar: Muft Bijli Yojana’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, சோலார் பேனல் திறனைப் பொருத்து ரூ.30 ஆயிரம் முதல் ரூ.78 ஆயிரம் வரை மானியம் வழங்குகிறது. இதனால் மின் கட்டணம் மிச்சமாகும். மேலும் தங்கள் தேவைக்கு போக மீதமுள்ள மின்சாரத்தை ‘ரிவர்ஸ் மீட்டர்’ மூலம் அரசுக்கு வழங்கி பணம் பெறலாம்.
வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளில் சூரிய ஒளி மின் கட்டமைப்பு ஏற்படுத்த அரசு சலுகை உள்ளதா?
- வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளில் சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு சார்பில் வங்கிகளில் ஈட்டுப் பிணையம் இல்லாமல் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்தக் கடன் மீதான வட்டிக்கு மானியமும் வழங்கப்படுகிறது. சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்பு 30 ஆண்டுகள் வரை பயன் தரும். எனவே, வாங்கிய கடனை 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்திவிட்டால், மீதம் உள்ள 25 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கலாம்.
சோலார் பேனல்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்து?
- கடந்த 2015-ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பேனல் மூலம் 300 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இப்போது (2025) அதிநவீன தொழில்நுட்பத்துடன் உற்பத்தி செய்யப்படும் பேனல்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. ஒரு பேனல் மூலம் 600 வாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறது. இதனால் இடத்தை அதிகம் சேமிக்க முடியும்.
உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்த முடியுமா?
- நிச்சயம் முடியும். சூரியஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைக்க ‘லித்தியம் அயன்’ பேட்டரிகள் உதவுகின்றன. இன்று ஒரு கிலோ வாட் மின்சாரம் சேமிக்க பேட்டரிகளுக்காக ரூ.60,000 செலவிட வேண்டியுள்ளது. வரும் ஆண்டுகளில் இதன் விலை ரூ.20 ஆயிரமாக குறைய வாய்ப்பு உள்ளது.
சூரியஒளி மின் உற்பத்தி கட்டமைப்பை எங்கு ஏற்படுத்தலாம்?
- தரை மட்டுமின்றி கட்டிடங்களின் மேற்கூரைகளிலும் சூரிய ஒளி ஆற்றல் திட்டத்தை (ரூப் டாப்) சிறப்பாக செயல்படுத்தலாம். புதிய கட்டிடங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த பைபேசியல் சோலார் பேனல்கள் தற்போது சந்தைகளில் கிடைக்கின்றன. இத்தகைய பேனல்கள் மூலம் மேற்புற பகுதியில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவதுடன், டிரான்ஸ்பரன்ட்டாக இருப்பதால் கட்டிடத்தின் கீழ் பகுதியில் சூரிய ஒளி பரவவும் வாய்ப்பு கிடைக்கும். கட்டிடத்தின் தரைப் பகுதி வெண்மை நிறத்தில் அமைக்கப்பட்டால் சூரிய ஒளி பிரதிபலிக்கப்பட்டு கூடுதலாக 10 சதவீதம் மின் உற்பத்தி செய்ய உதவும்.
- தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகளில் 5 மெகா வாட் வரை அதிநவீன பைபேசியல் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இடநெருக்கடி மிகுந்த பகுதிகளில் செயல்படும் வணிக நிறுவனத்தினர், தங்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளிட்ட திறந்தவெளி பகுதிகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தை அமைத்து, ‘லித்தியம் அயன்’ பேட்டரிகளில் அவற்றை சேமித்து, அதை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தி தங்களின் மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
மழை காலங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி எவ்வாறு இருக்கும்?
- மழை காலங்களில் மின் உற்பத்தி சற்று குறையும் என்ற போதிலும், அதனால் சில நன்மைகளும் உள்ளன. பேனல்கள் இயற்கையாகவே சுத்தம் செய்யப்படும். இதனால் மழை பெய்த மறுநாள் வழக்கத்தைவிட சற்று கூடுதல் மின் உற்பத்தி கிடைக்கும். புதிய வீடு கட்டுவதற்காக பல லட்சம் முதல் கோடிகள் வரை பணம் செலவிடும் நிலையில், சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்துக்காக ரூ.1.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவிட்டு மின் உற்பத்தி கட்டமைப்பை ஏற்படுத்தினால், 25 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்துவதை தவிர்க்கலாம்.
சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழகம் 4-ம் இடம்:
- இந்தியாவில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக, தமிழகம் 4-ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 8,145 மெகா வாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதி தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி ஒரே நாளில் 5,979 மெகா வாட் (சூரிய ஒளி மூலம்) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2025)