- நம் நாட்டில் சில இளைஞர்கள் உயிரென கருதப்பட வேண்டிய காலத்தை எவ்வாறு போக்குவது என்று தெரியாமல் இரவையும் பகலாக்கி மோட்டார் சைக்கிள் பந்தயம் என்ற பெயரில் சாகச செயல்களில் இறங்கி காலனைத் தழுவுகின்றனர்.
நகர்ப்புறங்களில் பைக் ரேஸ் எனப்படும் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் இளைஞர்கள் அண்மைக்காலமாக ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் பந்தயம்
- குறிப்பிட்ட இடத்திலிருந்து இன்னொரு இடத்தை இலக்காக வைத்து பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், பல உயிரிழப்புகள் நடந்து வருகின்றன. இதனால், மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மட்டுமன்றி, சாலையில் நடந்து செல்லும் அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்க நேரிடுகிறது.
- இத்தகைய பந்தயத்துக்குத் காவல் துறையினர் தடை விதித்துள்ள நிலையில் சில இளைஞர்கள் தடையை மீறி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். மோட்டார் சைக்கிளில் வேகமாகச் செல்லும் இளைஞர்களைக் காவல் துறையினர் வழிமறித்து வழக்குப் பதிவு செய்கின்றனர்.
- சென்னையில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் பலர் மெரீனா காமராஜர் சாலை, அண்ணா சாலை, கிழக்குக் கடற்கரை சாலை, ராஜீவ்காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, வெளிவட்டச் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் பந்தயம் கட்டி, பொது மக்களை பயமுறுத்தி, ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேக மோட்டார் பந்தயத்தை நடத்துகின்றனர்.
அண்மையில்
- மெரீனா கடற்கரை சாலையில் ஒரே நேரத்தில் 50 மோட்டார்சைக்கிள்களில் சென்று இளைஞர்கள் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் அண்மையில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக நடந்த இந்தபைக் ரேஸ் காரணமாக எட்டு விபத்துகள் நடந்துள்ளன.
இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பந்தயத்தைத் தடுக்கும் வகையில் 29 இடங்களில் வாகன சோதனையும், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 873 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டும், 137 வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளன.
- அதிவேகமாகச் சென்ற 283 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர். தடையை மீறி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுகிறவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது குறித்து காவல் துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
- மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்டதாக 12 சிறுவர்கள் உள்பட 19 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில், 12 சிறுவர்கள் தவிர்த்து அவர்களது பெற்றோர்கள், வாகன உரிமையாளர்கள் ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது போன்ற வழக்கில் சிறுவர்களின் பெற்றோர் பெயரும் சேர்க்கப்படுவது இதுவே முதல்முறை என காவல் துறை தெரிவித்துள்ளது.
போதை மருத்துகள்
- அதிவேகமாக வாகனத்தை இயக்கும் போது ஏற்படும் அச்சத்தைப் போக்கவும், வாகனம் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தால் அந்த வலியைத் தாங்கிக் கொள்வதற்காகவும் சில இளைஞர்கள் போதை மருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள்.
- வாகனத்தின் வேகத்தைக் கூட்டுவதற்காக இளைஞர்கள் கையாளும் இன்னொரு உத்தி ஆக்டேன் 93 பெட்ரோல்; விமானத்தில் பயன்படுத்தப்படும் ஒயிட் பெட்ரோல் போன்றதுதான் இதுவும். ஆனால், விலை கூடுதல். சாதாரண பெட்ரோலுக்கு மிக அருகில் தீ ஜுவாலையை வைத்தால் பற்றிக் கொள்ளும். ஆனால், ஆக்டேன் 93 சற்று தள்ளி நெருப்பை காண்பித்தாலே உடனே தீப்பற்றிக் கொள்ளும். இத்தகைய ஆபத்தான பெட்ரோலைத் தான் வேகம் வேண்டும் என்தற்காக இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள்.
- இத்தகைய பந்தயத்தில் ஈடுபடும் இளைஞர்கள் பெற்றோர்களின் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் இல்லை; மேலும், ஒழுக்கமற்றவர்களாகவும், சட்டத்துக்குக் கட்டுப்படாதவர்களாகவும் இருக்கின்றனர். 100 சிசி பைக்குகளின் காலம் முடிந்து, 150 சிசி, 250 சிசி என அதிவேக திறன் கொண்ட பைக்குகள் இந்தியச் சந்தைக்கு வரத் தொடங்கிய பிறகுதான் இந்த வேகமும், விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
- ஆபத்தை விளைவிக்கும் அதிவேக மோட்டார் பந்தயத்தில் பங்கெடுப்பவர்களுக்கு அது அபாயம் நிறைந்தது, மரணத்திற்கான வாய்ப்பாக இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அது வீரச்செயல் என்ற பொய்யான கருத்தை நம்புவதால் ஆனந்தம் அவர்கள் கண்களை மறைக்கிறது. இந்த மோட்டார் பந்தயத்தில் பயமறியாத இளங்கன்றுகளே அதிகம் பலியாகின்றன என்பதுடன், இந்த விளையாட்டில் முற்றிலும் தொடர்பில்லாத பாதசாரிகளும் உயிரிழக்கின்றனர்.
சங்க காலம்
- சங்க காலத்தில் மண்ணைக் காக்க, நாட்டைக் காக்க, நாட்டு மக்களைக் காக்க போரில் பகைவர்களுடன் போரிட்டு விழுப்புண் அடைந்தவர்களைப் பெருமையாகப் போற்றினர். புறமுதுகிட்டு ஓடியவர்களை இழித்துப் பேசுவார்கள். ஆனால், மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு கீழே விழுந்து படுகாயமடைந்தவர்களையும், உயிரிழந்தவர்களையும் வீரன் என இந்தச் சமூகம் போற்றாது என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
நன்றி: தினமணி (13-06-2019)