- அண்ணா கல்லூரிப் படிப்பு முடிந்ததும் தன் சிற்றன்னை ராஜாமணி அம்மையாருடன் தங்கசாலை பெத்துநாயக்கன்பேட்டையில் குடியிருந்தார். அவர் வீட்டுக்குப் பக்கத்தில் எஸ்.அரங்கநாதன் என்பவர், ‘சுயமரியாதை இளைஞர் மன்றம்’ என்று ஒரு சங்கத்தை நடத்திவந்தார். இளைஞர்களை மேடைப் பேச்சில் வல்லவர்களாகப் பழக்கப்படுத்துவதுதான் இச்சங்கத்தின் நோக்கம். அந்த மன்றத்தில் ஒரு நூலகம் உண்டு.
- அங்கு டாக்டர் தர்மாம்பாளின் மகன் டாக்டர் சிற்சபையும் அண்ணாவும் அடிக்கடி வருவது வழக்கம். அப்படி வருகையில், மற்றவர்கள் பேசிப்பழகுவதைக் கவனிப்பார் அண்ணா. ஒருநாள் அந்த சங்க நிர்வாகி அண்ணாவிடம், “நீங்க எம்ஏ படிச்சிருக்கீங்களே; ஏன் பேசிப் பழகக் கூடாது?” என்று கேட்டார். அதற்கு ஒப்புக்கொண்ட அண்ணா ஒரு நாள் பேச, எல்லோருக்கும் ஆச்சரியம்.
- இந்த இளம் வயதில் இப்படியொரு பேச்சா என்று வியந்துவிட்டார்கள். ஒருநாள் சிற்சபையின் குடும்ப நண்பரும் ‘நவமணி’ பத்திரிகை ஆசிரியருமான பக்கிரிசாமி, ஒரு அழைப்பிதழைக் கொண்டுவந்து கொடுத்தார். பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் நீதிக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பேசுகிற கூட்டத்துக்கான அழைப்பிதழ் அது. கூட்டத்துக்கு சர் ஏ.பி.பாத்ரோ தலைமை ஏற்க, சர் கே.வி.ரெட்டி, திவான் பகதூர் சி.நடேச முதலியார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுவதாகவும் ஏற்பாடாகியிருந்தது. இந்தக் கூட்டத்தில் அண்ணாவைப் பேச வைக்க நினைத்தார் சிற்சபை.
- அவரது யோசனைப்படி பக்கிரிசாமி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அந்தக் கூட்டத்தில் அண்ணாதுரை பேச அழைக்கப்பட்டதும் கூட்டத்தினர் யார் அது என்று மேடையைக் கண்களால் துழாவினார்கள். ஆனால், அண்ணாவோ கூட்டத்தின் மத்தியில் இருந்து எழுந்து மேடைக்குப் போனார்.
- பெரும் செல்வந்தர்கள் நடுவே, நாலுமுழ வேட்டி, சாதாரண ஜிப்பாவுடன் கேலிக்குரிய தோற்றத்தில் மேடை ஏறினார். அவர் என்ன பேசிவிடப் போகிறார் என்று மேடையிலிருந்த பட்டு வேட்டி, ஜரிகைத் தலைப்பாகைகள் முகம் சுழித்தன. ‘கேன் ஐ ஸ்பீக்?’ என்று அனுமதி கோரும் தொடருடன் தொடங்கிய அண்ணா, தனது அரசியல் பேச்சை முதன்முதலாக அரங்கேற்றினார்.
- கூட்டத்தினர் அத்தனை பேரும் அண்ணாவின் பேச்சில் தங்களையே பறிகொடுத்தார்கள். கொடுக்கப்பட்ட 15 நிமிடங்கள் முடிந்துவிட்டன என்றாலும், பார்வையாளர்களின் ஆர்வத்துக்காக மேலும் பேசும்படி கூட்டத் தலைவர் கேட்டுக்கொண்டார். “எதிர்காலத்தின் தலைசிறந்த பேச்சாளனை இந்தக் கூட்டம் அடையாளம் காட்டியிருக்கிறது” என்று பாத்ரோ சொன்னது பொய்க்கவில்லை.
ஓ... அதான் விநோதமாகப் பார்த்தார்களா?
- பொன்மலையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் திருச்சிக்கு வந்தார் அண்ணா. சங்கரன்பிள்ளை விடுதிக்கு முன்னறிவிப்பின்றி வந்த அவரிடம் திண்டிவனம் ராமமூர்த்தி உள்ளிட்டோர் என்னவென்று விசாரிக்க, “பொன்மலை தொழிலாளர் மாநாட்டுக்கு காரிலேயே வந்துவிடலாம் என்று நினைத்தேன். தாம்பரத்திலேயே கார் ரிப்பேராகிவிட்டது.
- மீனம்பாக்கம் வரையில் தள்ளிக்கொண்டே போய்விட்டு, அங்கிருந்து விமானம் மூலம் வந்தேன்” என்றார் அண்ணா.
- வழக்கம்போல அன்றும் ஏனோதானோ உடையில்தான் வந்திருந்தார். சட்டைப் பொத்தான்கள்கூட ஏறுக்குமாறாகப் போடப்பட்டிருப்பதை ஒரு தொண்டர் சுட்டிக்காட்ட, “ஓ... இதனால்தான் விமானத்தில் இருந்தவர்களெல்லாம் என்னை ஏதோ டிக்கெட் எடுக்காமல் ஏறியவனைப் போல விநோதமாகப் பார்த்தார்களா?” என்று சிரித்தபடி பொத்தான்களை மாற்றிப்போட்டார் அண்ணா.
நன்றி: இந்து தமிழ் திசை (12-06-2019)