TNPSC Thervupettagam

அதிபராகும் நடிகர்

April 27 , 2019 2101 days 1450 0
  • நடிகர்கள் நாடாளுவது என்பது புதிதொன்றுமல்ல. எம்ஜிஆரில் தொடங்கி உலகம் முழுவதும் நாடாண்ட நடிகர்களின் பட்டியல் மிக மிக நீளம். அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட், அர்னால்டு ஸ்வாஸ்னேகர், என்.டி. ராமாராவ், ஜெயலலிதா என்று வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், அரசியலிலும் வெற்றி பவனி வந்த நட்சத்திரங்கள் ஏராளம் ஏராளம்.
  • அந்த வரிசையில் இணைகிறார் உக்ரைன் நாட்டின் அதிபராக மக்களின் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி.
மக்களின் சேவகன்
  • "மக்களின் சேவகன்' என்றொரு தொலைக்காட்சித் தொடர்.உக்ரைன் நாட்டில் பலத்த வரவேற்பைப் பெற்ற "மக்களின் சேவகன்' என்கிற அந்தத் தொலைக்காட்சி நாடகத் தொடர், கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
  • அந்த அரசியல் நையாண்டி நாடகத்தில் எதிர்பாராத விதமாக உக்ரைன் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் 41 வயது நகைச்சுவை நடிகர் ஒருவர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்தத் தொடரின் கதாநாயகனாக நடித்த வொலோதிமீர் ஸெலன்ஸ்கி, 73% மக்கள் ஆதரவுடன் உக்ரைன் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு நகைச்சுவை நடிகர் என்பதைத் தவிர, எந்த ஓர் அரசியல் பின்னணியும் இல்லாதவர் மிகப் பெரிய தேர்தல் வெற்றியைப் பெற்றிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் நிமிர்ந்து உட்கார்ந்து உக்ரைனை வியந்து பார்க்க வைத்திருக்கிறது.
  • ஊழல், பொய் வாக்குறுதிகள், நிர்வாகத் திறமையின்மை இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து சலித்துப்போயிருந்த உக்ரைன்மக்களுக்கு, அரசியல் அமைப்புக்கு முற்றிலும் தொடர்பில்லாத நகைச்சுவை நடிகர் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி வித்தியாசமாகத் தெரிந்ததில் வியப்பென்ன இருக்கிறது?
  • சமூக அநீதிகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் அவர் மக்களின் சேவகன் நாடகத்தில் பேசிய வசனங்களும், நடித்த காட்சிகளும்  ஊழல் நிறைந்த, அரசியல் அமைப்புக்கு மாற்றுச் சக்தியாக மக்கள் மனதில் அவரை நம்ப வைத்தது. 2014-இல் கிரீமியாவை  ரஷியா ஆக்கிரமித்ததை வொலோதிமீர் ஸெலன்ஸ்கி வெளிப்படையாகவும் தனது தொலைக்காட்சித் தொடர் மூலமும் ஆதரித்தவர் என்பது பரவலாகக் கூறப்படும் குற்றச்சாட்டு.
பிரிவினை
  • அதேபோல கிழக்கு உக்ரைனில் 10,000-த்துக்கும் அதிகமானோர் பிரிவினை கேட்டுப் போராடி உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களை ஸெலன்ஸ்கி ஆதரித்தார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ரஷியாவிடமிருந்து நிதியுதவி பெற்றவர் என்று குற்றஞ்சாட்டப்படும் வொலோதிமீர் ஸெலன்ஸ்கியை ரஷிய அதிபர் புதின் ஆதரிப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதிபர் புதினுக்கும் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோவுக்கும் இடையில் சுமுகமான நட்புறவு இல்லை என்பதால், தனது கைப்பாவையாக ஒருவர் உக்ரைன் அதிபராக வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று கூறப்படுகிறது.
  • தேர்தலில் வொலோதிமீர் ஸெலன்ஸ்கி சில வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷிய நாட்டு கடற்படையுடன் நடந்த மோதலில் 24 உக்ரைன் மாலுமிகள் கைது செய்யப்பட்டு ரஷிய சிறையில் இருக்கிறார்கள். அவர்களை விடுவித்துக் கொண்டு வருவதுதான் தனது முதல் கடமை என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அதேபோல, ரஷியாவுடன் நேரடியான யுத்தம் நடப்பதால், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்க முடியாது என்பது அவரது கருத்து. உக்ரைனின் சுதந்திரத்திலும் இறையாண்மையிலும் எந்த நாட்டுடனும் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது என்று அதிபர் தேர்தலின்போது தொடர்ந்து வாக்குறுதி அளித்த வொலோதிமீர் ஸெலன்ஸ்கி, "நாம் நமது மக்களையும் விட்டுவிட முடியாது, எல்லைகளையும் விட்டுவிட முடியாது' என்று முழங்கியதுதான் வாக்காளர்களுக்கு அவர் மீது இந்த அளவு நம்பிக்கை ஏற்பட்டதற்கு முக்கியமான காரணம்.
  • ஐந்தாண்டுகளுக்கு முன்பு இதே ஸெலன்ஸ்கி, அதிபர் புதினுக்கு "தயவு செய்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராணுவ ரீதியிலான மோதல் ஏற்பட வழிகோலாதீர்கள். உக்ரைனும் ரஷியாவும் சகோதர நாடுகள். வேண்டுமானால், தனிப்பட்ட முறையில் நான் தங்கள் முன் மண்டியிட்டு யாசிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், தயவுசெய்து உக்ரைன் மக்களை மண்டியிட வைத்துவிடாதீர்கள்' என்று வேண்டுகோள் விடுத்ததை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதிபர் 
  • இன்னும் ஒரு மாதத்தில் அதிபராகப் பதவியேற்கப் போகும் வொலோதிமீர் ஸெலன்ஸ்கியின் ரஷியா குறித்த கொள்கை எப்படி இருக்கப்போகிறது என்பதும், அவரது பொருளாதாரக் கொள்கை, வெளி விவகாரக் கொள்கை ஆகியவை குறித்தும் யாருக்கும் எதுவும் தெரியாது. அப்படி ஏதாவது அவருக்கு இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. மக்களின் மிகப் பெரிய ஆதரவுடன் உக்ரைன் அதிபராக அரசியல் அனுபவமே இல்லாத வொலோதிமீர் ஸெலன்ஸ்கி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால், அதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். அது மாற்றத்தை  மக்கள் விரும்புகிறார்கள் என்பது.
  • இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால், அரசியல் கட்சிகளின் மீதும், அரசியல் தலைவர்களின் மீதும், நிர்வாக அமைப்பின் மீதும் முற்றிலுமாக நம்பிக்கையை இழந்துவிட்ட நிலையில், களத்துக்கு வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் வேடிக்கை மனிதர், மாற்றத்தை ஏற்படுத்திவிட மாட்டாரா என்கிற எதிர்பார்ப்புதான் காரணமாக இருக்க முடியும்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories