- எல்லா வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு. அதற்கு எடுத்துக்காட்டாகவே தற்போதைய நவீன தொழில்நுட்பம் அமைந்துள்ளது. குறிப்பாக, செல்லிடப்பேசி விரல் நுனியில் உலகம் நினைக்கும்போது அழைப்புகள், குறுஞ்செய்தி, தகவல் பரிமாற்றம் என பல நன்மைகள் இருந்தாலும் அதற்குச் சரிசமமாக எதிர்வினைகளும் பல உண்டு.
- ஊருக்கு ஒரு தொலைபேசி என்ற காலம் மாறி, வீட்டுக்கு ஓர் தொலைபேசி என்ற காலத்தையும் கடந்து, தற்போது ஒவ்வொருவருக்கும் செல்லிடப்பேசி எனும் நிலையும் தாண்டி இணைய பயன்பாட்டிற்கு ஒன்று, பேசுவதற்கு ஒன்று என உபயோகித்து வருகின்றனர்.
வெளிநாட்டில்
- தொலைபேசி இருந்த காலத்தில் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் பேச முடிந்த நமக்கு, அறிதிறன் பேசி ("ஸ்மார்ட் போன்') வந்த பிறகு வீட்டில் இருப்பவர்களிடம்கூட பேச நேரமில்லாமல் போய்விட்டது. நிலாவைக் காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய பழக்கம் மறைந்து இப்போது செல்லிடப்பேசியைக் காட்டி சாப்பிட வைக்கும் பழக்கம் அரங்கேறி வருகிறது.
- செல்லிடப்பேசியின் வளர்ச்சியில் எந்தத் தவறுமில்லை. அதைப் பயன்படுத்தும் விதம் சரியாக இருக்கவேண்டும். உதாரணமாக, ஜப்பானில் நிலநடுக்கம் நிகழப்போவதை முன்கூட்டியே நாட்டில் உள்ள எல்லா செல்லிடப்பேசிகளுக்கும் தகவல் அனுப்பிவிடுகிறார்கள்.
- அதேபோல், இந்தியாவிலும் பானி புயலின்போது விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 65 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்துள்ளது.
- இதுவரை இல்லாத அளவு மலிவான விலையில் செல்லிடப்பேசி மூலம் இணைய சேவை கிடைப்பதும், அறிதிறன் பேசி ("ஸ்மார்ட் போன்') பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. செல்லிடப்பேசியில் இணைய சேவையை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டு 29 கோடியில் இருந்து, 2018-ஆம் ஆண்டில் 39.09 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020-ஆம் ஆண்டு 44.82 கோடியை எட்டும் என ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இணைய வழி பண பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளது. வங்கியில் படிவத்தை நிரப்பி, வரிசையில் காத்திருந்து ஒருவர் தனது கணக்கில் பணத்தைச் செலுத்துவதற்கு கால விரயம் ஏற்படுகிறது. ஆனால், தற்போது நிமிஷங்களில் மிகச் சுலபமாக இருக்கும் இடத்திலிருந்தே பண பரிவர்த்தனை செய்ய நவீன தொழில்நுட்பம் உதவியாக உள்ளது. எனினும் உஷார்தன்மையுடன் இல்லாதவர்களிடம் இணையம் சார்ந்த பண மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
இணைய வர்த்தகம்
- நாளுக்கு நாள் நம்மை சோம்பேறியாக மாற்றுவதற்கு முக்கியப் பங்கு வகிப்பது இணைய வர்த்தகம். சந்தைப் போட்டியில் இணைய வர்த்தக வலைதளங்ளை தனியார் உருவாக்கியுள்ளனர். இத்தகைய இணைய வர்த்தக வலைதளங்களை வீட்டிலிருந்தபடியே பயன்படுத்தி ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், மின் சாதனப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றை "ஆர்டர்' செய்து தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் இன்றைய தலைமுறையினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு தனியார் செயலிகளைப் பயன்படுத்தி, ஆரோக்கியம் குறித்து கவலைப்படாமல் உணவுப் பண்டங்களை "ஆர்டர்' செய்து சாப்பிடும் பழக்கமும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது; இதனால் வீட்டில் உணவைச் சமைப்பதில் சரிவு ஏற்பட்டுள்ளது.
- இதுபோன்ற நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் பல இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் செல்லிடப்பேசிக்கு அடிமையாவது வருந்தத்தக்கது. கட்செவி அஞ்சல் ("வாட்ஸ்-அப்'), முக நூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களிடம் தற்போது "டிக்டாக்' செயலியும் இணைந்துள்ளது. பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, பாதை மாறி ஆபாசத்துக்காகவும், ஜாதி வெறியை வெளிப்படுத்தவும், கலவரங்களைத் தூண்டுவதற்கும் பயன்படுவது வேதனை அளிக்கிறது.
- உலக அளவில் சுமார் 150 கோடி பேர் கட்செவி அஞ்சலை ("வாட்ஸ்-அப்') பயன்படுத்துகின்றனர். அதில், 20 கோடி பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்செவி அஞ்சலை ("வாட்ஸ்-அப்') ஒரு நாளைக்கு 23 முறையாவது பயனாளிகள் பார்ப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, இந்தியாவில் முக நூலில் உள்ளோரின் எண்ணிக்கை 26 கோடியைத் தாண்டிவிட்டது.
விபரீத விளையாட்டுகள்
- இது மட்டுமல்லாது "புளூவேல்', "மமோ சேலஞ்ச்' போன்ற விபரீத விளையாட்டுகள் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமீபகாலமாக "பியுபிஜி' என்ற இணைய விளையாட்டு பல மாணவர்களை அடிமையாக்கி சீரழித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமன்றி இன்னும் பல இணைய சூதாட்டங்களும் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.
- மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணங்களில் செல்லிடப்பேசியின் தொடர் பயன்பாடும் ஒன்று. அகற்கு "நோமோ போபியா' என்று பெயரிடப்பட்டுள்ளது. கையில் செல்லிடப்பேசி இல்லாமலோ அல்லது இருந்தும் உபயோகிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டாலோ ஏற்படும் பயம் அல்லது பதற்றமே "நோமோ போபியா'. செல்லிடப்பேசி பயன்படுத்துவோரில் 53 சதவீதம் பேருக்கு மன அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
- 2003-ஆம் ஆண்டு 10 இலக்க எண்களை அறிமுகப்படுத்திய தொலைத் தொடர்புத் துறை 2033-ஆம் ஆண்டு வரை 10 இலக்க எண்களை பராமரிக்க முடிவு செய்தது. ஆனால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியாலும் 11 இலக்க எண்களை அறிமுகப்படுத்த தொலைத் தொடர்புத் துறை பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
- தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்திலும் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கின்றன. அவை அனைத்தையுமே நாம் தவிர்த்துவிட முடியாது. எனினும், தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பிரித்துப் பருகும் அன்னப் பறவை போன்று, நன்மையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அறிவையும், பக்குவத்தையும் தங்கள் வாரிசுகளுக்கு பெற்றோர் எடுத்துக் கூற வேண்டும்.
நன்றி: தினமணி (24-06-2019)