TNPSC Thervupettagam

அமெரிக்காவிடமிருந்து நல்ல செய்தி...

May 30 , 2019 2058 days 1203 0
  • உலகின் மிகவும் மதிப்புமிக்க வார்த்தைகளுக்குச் சொந்தக்காரரான அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அமெரிக்காவின் முடிவு
  • உதாரணமாக, அதிபர் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவால் ஏற்பட்ட அமெரிக்கா- சீனா வர்த்தகப் போர் பதற்றம் சர்வதேச பங்குச் சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர் விளைவு, பங்குச் சந்தையில் வீழ்ச்சியடைந்த நிறுவனத்தை நம்பி இருந்த கடைக்கோடி ஒப்பந்தத் தொழிலாளியின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியது
  • இப்போதும்கூட ஈரான் மீதான பொருளாதாரத் தடையை டிரம்ப் மீண்டும் அமல்படுத்தியதால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் எண்ணெய் இறக்குமதிக்கு வேறு நாடுகளைத் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளன. இதனால், அனைத்துப் பொருள்களின் விலையும் உயரும். இந்நிலையில் ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் ஓர் அறிவிப்பு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பெரும் நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது.
  • ஈரானுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற டிரம்ப்பின் அந்த வார்த்தைகள்தான் இன்றைய தினத்தில் சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் பதற்றத்தைக் குறைப்பதாகவும் அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
ஈரான்
  • ஏனெனில், பாரசீக வளைகுடா பகுதியில் ஈரானுக்கு எதிராக தனது போர்க் கப்பல்களை ஏற்கெனவே அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனிடையே, சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதன் பின்னணியில் ஈரான் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
  • சர்வதேச அளவில் பெரும் பதற்றத்துக்குக் காரணமான இப்பிரச்னைக்கு மூல காரணம் எது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட அணுஆயுதத் தயாரிப்பு தடை ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு முறித்துக் கொண்டதுதான் இப்போதைய பிரச்னையின் மையப் புள்ளி.
  • முன்னதாக, 2006-ஆம் ஆண்டு அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சிப்பதான குற்றச்சாட்டில், அந்த நாடு மீது அமெரிக்கா படிப்படியாக கடும் பொருளாதாரத் தடைகளை விதித்தது.  இதன் பிறகு நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைக்குப் பின் ஈரானுக்கும், அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுஆயுதத் தயாரிப்பு தடை ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்தம்
  • தனது அணுசக்தித் திட்டங்கள், அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதாக அந்த ஒப்பந்தத்தில் ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன. அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மேற்கொண்ட தீவிர முயற்சியால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் சாத்தியமானது. எனினும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு ஈரான்-அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டது.
  • முதலில் ஈரான் குடிமக்களுக்கு அமெரிக்க விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில், ஈரானுடனான அணுஆயுத உற்பத்தி தடை  ஒப்பந்தத்திலிருந்தும் விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டன. அந்த நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.
  • அமெரிக்காவின் தடையை மீறி ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் அமெரிக்காவின் தடை பாயும். இதில், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வந்த இந்தியா, தென்கொரியா, ஜப்பான், சீனா, துருக்கி, தைவான், இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால், இந்த 8 நாடுகளுக்கும் 6 மாதங்களுக்கு மட்டும் தடையிலிருந்து அமெரிக்கா விலக்கு அளித்தது. இதுவும் கடந்த மே 2-ஆம் தேதியுடன் முடிந்த நிலையில் வேறு வழியின்றி இந்தியாவும் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு மாற்று வழிகளைத் தேட வேண்டியதாயிற்று.
  • இந்தச் சூழ்நிலையில்தான் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்ட அதிபர் டிரம்ப், ஈரானுடன் மீண்டும் புதிதாக அணுஆயுதத் தடை ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறி சர்வதேச நிம்மதிக்கு வித்திட்டார். அப்போது டிரம்ப்புடன் இருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் இந்தத் திடீர் அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது. டிரம்ப்பின் இந்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இந்தியாவின் நலன்கள்
  • இந்த விஷயத்தில் இந்தியாவின் நலன்களும் அடங்கியுள்ளன. பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்க  உள்ள நிலையில்,  சர்வதேச அளவில் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்க அவர் உறுதிபூண்டுள்ளார். இதற்கு மத்திய அரசின் முயற்சிகள் மட்டுமே போதாது; சர்வதேசச் சூழல்களும் நமக்குச் சாதமாக இருக்க வேண்டும். ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா மீண்டும் அமல்படுத்தியது, இந்தியா தனது பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கு தடைக்கல்லை ஏற்படுத்துவதாகவே இருந்தது.
  • ஏனெனில், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் அனைத்தும், வேறு எண்ணெய் வள நாடுகளை அணுகும்போது கச்சா எண்ணெய் விலை தானாகவே உயர்ந்துவிடும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், அமெரிக்க அதிபரிடமிருந்து நமக்கு நல்ல செய்தியே வந்துள்ளது.

நன்றி: தினமணி (30-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories