TNPSC Thervupettagam

அமெரிக்காவின் ராஜதந்திர வஞ்சகம்!

February 26 , 2019 2099 days 1462 0
  • பேரரசுகளின் கல்லறை, பேரரசுகளின் போர்க்களம் என்றெல்லாம் அழைக்கப்படும் ஆப்கானிஸ்தானில் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக அமெரிக்க கூட்டுப் படைகள் மேற்கொண்ட நீண்ட காலப் போரில் அமெரிக்காவின் நேரடி ராணுவத் தலையீடு முடிவுக்கு வரத் தொடங்கியுள்ளது.
  • நியூயார்க் இரட்டை கட்டடத் தாக்குதல்களைத் தொடர்ந்து அக்டோபர் 07, 2001-இல் தலிபான், அல்கொய்தா அமைப்பிற்கெதிராக அமெரிக்காவால் தொடங்கப்பட்டது ஆப்கான் போர்.
  • அன்றைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷால் தொடங்கப்பட்ட இப்போரை, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒபாமா, அதைத் தொடர்ந்து நடத்தி, ஒரு கட்டத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களை இப்போரில் ஈடுபடுத்தினார்.
  • கடந்த பதினெட்டு ஆண்டு காலமாக நடக்கும் போரில் அமெரிக்கா அண்மைக்காலம் வரை சுமார் இரண்டரை லட்சம் கோடி டாலர்களை (2.4 ட்ரில்லியன் டாலர்கள்) செலவிட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • இந்தத் தொகை, இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு சீர்குலைந்த மேற்கு ஐரோப்பாவை கட்டியெழுப்புவதற்காக செலவிட்டதை விட அதிகமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம்  நடந்த இரு போர்களும் ஆசிய கண்டத்தில் உள்ள வியட்நாம் (1955-1973) மற்றும் ஆப்கானிஸ்தானில் (2001-2019) நடந்தன என்பது கவனிக்கத்தக்கது.
  • இரு போரிலும் அமெரிக்கா பெரும் பொருள் செலவையும், உயிரிழப்புகளையும், பெரும் தோல்வியையும் சந்தித்தது. ஆப்கான் போரில், அண்மைக்காலம் வரை 2,372 அமெரிக்க போர் வீரர்கள் கொல்லப்பட்டனர், 20,320 பேர் காயமடைந்தனர்.
  • சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • கடந்த அதிபர் தேர்தலின்போது, வெற்றிக்கான போர், பயனில்லாத அந்நிய மண்ணில் இருந்து அமெரிக்கப் படை வீரர்களைத் திரும்பப் பெறுவது, பல்வேறு நாடுகளின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் செலவுகளை அந்தந்த நாடுகளே சந்திக்க வலியுறுத்துவது, மெக்சிகோ எல்லைச்சுவரை எழுப்புவது, பயங்கரவாதிகளைக் கொல்வது போன்ற கருத்துகளை டொனால்ட் ட்ரம்ப் முன் வைத்து, அதிபரானவுடன் தன் வாக்குறுதியை நிறைவேற்றத் தீவிரம் செலுத்தி வருகிறார்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை 14 ஆயிரமாக படிப்படியாகக் குறைத்தார்.
  • இத்துடன் பாகிஸ்தானுக்கு,  தலிபான்களுடனும்  உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, பத்து முறை தலிபான்களுடன் ரகசிய சந்திப்புகள் நடத்தியுள்ளது ட்ரம்ப் நிர்வாகம்.
  • வெளிநாட்டு ஆதரவுடன் நிறுவப்பட்ட எந்த பொம்மை அரசும்  நீண்ட காலத்துக்கு ஆப்கானில் நிலைக்காது என்பது வரலாறு.
  • 2001-இல் 15,000 போராளிகளுடன் செயல்பட்ட தலிபான் அமைப்பில், தற்போது 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் உள்ளதாகவும், ஆப்கானிஸ்தானின் 70% பகுதியை, தன் கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் வைத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
  • நாளுக்கு நாள் அமெரிக்க ஆதரவுடன் நிறுவப்பட்ட ஆப்கான் அரசின் படைகள் பெரும் சேதத்தை சந்தித்து நிலைகுலைந்து வருகின்றன.
  • ஆப்கானிஸ்தானில் நடக்கும் தலிபான்களின் தாக்குதல்களுக்கு ஊற்றுக்கண் பாகிஸ்தானிலிருந்து உருவாகிறது என்று அதிபர் ட்ரம்ப்,  ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரால் ஹானி ஆகியோர் வெளிப்படையாக அறிவிப்பதிலிருந்து, ஆப்கானிஸ்தானைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் தலிபான்கள் கொண்டு வருவதைத் தடுப்பது சிரமம் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
  • தன் நலனுக்குத் தேவைப்பட்டால் - பிராந்தியத்தையும் தாண்டி - கூட்டணிப் படைகள் என்ற போர்வையில் - பிற நாடுகளில் தலையிட்டு ஜனநாயகம், மனித உரிமை, பயங்கரவாதம், உலக அமைதி, தேச பாதுகாப்பு, சித்தாந்தம், பேரழிவு ஆயுத ஒழிப்பு என்ற பெயரில் பேரழிவை உண்டு பண்ணி - ஆட்சியை மாற்றி, பின்பு தேச கட்டுமானம், அமைதி என்ற பெயரில் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து - ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால் தனக்கு எந்த ஆதாயமும் இல்லையென்று கருதினால் - அந்த நாடு எக்கேடு கெட்டும் போகட்டும் என்று மூன்றாம் நாடுகளில் இருந்து வெளியேறுவது பொதுவாக அமெரிக்காவின் வாடிக்கை; வியட்நாம், ஈராக், லிபியா, சிரியா, இப்போது ஆப்கானிஸ்தான் ஆகியவை இதற்குச்  சிறந்த உதாரணங்கள்.
  • 2018 டிசம்பர் இறுதியில் கத்தாரின் தலைநகரான தோஹாவில் பாகிஸ்தான் உதவியோடு முறைப்படி நடத்தப்பட்ட அமெரிக்க தலிபான் பேச்சுவார்த்தை மிக முக்கியமானது.
  • தற்போதைய ஆப்கான் பொம்மை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது கிடையாது; அனைத்து வெளிநாட்டுப் படைகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்; சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலிபான்  தலைவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட தலிபான் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளத் தயாராகி வருகிறது.
  • ஆனால், அமெரிக்கா மற்றும் பிற நாட்டின் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்தக் கூடாது என்ற அமெரிக்க நிபந்தனைக்கு எவ்வளவு நாள்கள் தலிபான்கள் கட்டுப்படுவார்கள் என்பது முக்கியமான கேள்வி.
  • அமெரிக்கா போன்று அவசர கோலத்தில்  வெளியேறும் கொள்கை முடிவை எல்லை நாடுகளான இந்தியா, ரஷியா, ஈரான் போன்றவை எடுக்க முடியாது.
  • தலிபான்களின் தோல்விக்குப் பின்பு அமெரிக்க ஆதரவுடன் இந்தியா, பெருந்தொகையை ஆப்கான் புனரமைப்புப் பணிக்கு செலவிட்டுள்ளது.
  • 2001 முதல் சுமார் 116 நலத் திட்டங்களை ஆப்கானின் 31 மாகாணங்களில் இந்தியா நிறைவேற்றி வருகிறது.
  • மனிதவள மேம்பாடு, சிறிய-பெரிய கட்டுமானங்கள், படிப்பகங்கள், சாலை அமைத்தல், சமூக முன்னேற்றம், மருத்துவமனைகள், அணைகள் மற்றும் 969 கோடியில் கட்டப்பட்ட நவீன நாடாளுமன்ற கட்டடம் போன்றவை அவற்றில் சில.
  • மாறி வரும் சூழ்நிலையில் உருவாகும் பாகிஸ்தான்-தலிபான் கூட்டணி, இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களுக்கும், அண்டை நாடுகளுக்கும் மிகப் பெரிய பிரச்னைகளை உருவாக்கலாம்.
  • சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்பு ரஷ்யாவும், ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதும் முக்கியமானது.
  • 2018 நவம்பர் 8-இல் இந்தியா உட்பட 11 நாடுகள் கலந்து கொண்ட மாஸ்கோ கலந்துரையாடல் கூட்டம் மிக முக்கியமாக கருதப்படுகிறது.
  • அமெரிக்காவும், ரஷியாவும் தாங்கள் அங்கீகரித்த ஆப்கானிஸ்தான் அரசின் பிரதிநிதிகளை தோஹா, மாஸ்கோ பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், பயங்கரவாத அமைப்புகள் என்று அவர்களால் முத்திரை குத்தப்பட்ட தலிபான் பிரதிநிதிகளை  ஐ.நா-வின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வைத்தது ராஜதந்திர வஞ்சகம்.
  • ஆப்கான், அரபு, பாகிஸ்தான், ஷியா சார்புடையவை என்று பல்வேறு பிரிவுகளாகச் செயல்பட்டாலும் ஆப்கான் - பாகிஸ்தான் தலிபான் குழுக்கள் மிகவும் வலிமையானவை. பாலஸ்தீனம், காஷ்மீர், ரஷியாவில் செசினியா, சீனாவில் யூகுர், ஜின்ஜியாங் பிராந்தியங்களின் விடுதலை இவர்களின் நீண்ட காலக் கனவு.
  • பாகிஸ்தான் - ஆப்கான் தலிபான்களின் ஆட்சி, ஆப்கானில் நிறுவப்பட்டால், பாகிஸ்தான் ராணுவம், உளவு நிறுவனமான ஐஎஸ்ஐஎஸ், மதவாதத் தலைவர்களின் உதவியுடன் ஜிகாத் ஏற்றுமதி என்ற பெயரில் பிராந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பேரழிவுகளை இந்த அமைப்புகள் ஏற்படுத்தலாம்.
  • 1999-க்குப் பிறகு, இந்த மாதம் 14-ஆம் தேதி காஷ்மீரில் நடத்தப்பட்ட பெரிய வெடிகுண்டு படுகொலைகள், பாகிஸ்தான்-தலிபான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புதான் நடத்தின என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • பல கட்சி ஜனநாயகம், பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை மற்றும் அமைதி வழியில் தலிபான்கள் நம்பிக்கை இல்லாதவர்கள்.
  • எனவே, ஆட்சி மாற்றத்துக்கு பின்பு இந்தியாவின் உதவிகள் மறக்கப்பட்டு விடும். இந்த நிலையில் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ள இந்தியா, தன்னிச்சையாகவும், ஒத்த கருத்துள்ள நாடுகளும் சேர்ந்து பல்வேறு உத்திகளை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  • மூன்றாவதாக, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பெரும் அனுபவம் உள்ள இஸ்ரேலுடன் பாதுகாப்பு உறவை மேலும் பலப்படுத்தி இந்தியாவின் எல்லைகள், ராணுவத் தளங்கள், கட்டமைப்புகளை பாதுகாக்கவும், பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் தகவல்கள் சேகரிக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
  • நான்காவதாக, இந்தியாவின் பன்முகத் தன்மையை மதிப்பதிலும், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வதிலும், எதிர்க்கட்சிகள் மற்றும் மாற்று கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தாமல் தொலைநோக்குடன் செயல்படும் தலைமையும் இந்தியாவுக்குத் தேவை.
  • பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது தன் கூட்டணிக் கட்சியினர்,  எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் ஆகிய அனைவரையும் அணைத்துச் சென்றார் என்பதை மேற்கு வங்க முதல்வர்களாக இருந்த  ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது நினைவுகூரத்தக்கது.
  • வரலாற்றில், பேரரசுகள் உள்நாட்டுக் குளறுபடியால்தான் வீழ்ந்தன என்பது மறக்க முடியாத உண்மை.
  • இந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பையும் ஒற்றுமையையயும், ஜனநாயக அமைப்புகளையும் பன்முகத் தன்மையையும் வலுவாக்குவதோடு, எதிர்வரும் எல்லை தாண்டிய சவால்களை ஒற்றுமையோடு எதிர்கொள்ள வேண்டியது புதிதாக அமைய இருக்கும் அரசின் பிரதான பொறுப்பு.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories