TNPSC Thervupettagam

அறநெறி

May 21 , 2019 2047 days 2449 0
  • மண்ணாசையினால் இந்த மானுடத்துக்கு ஏற்பட்ட அழிவைக் காட்டிலும், பெண்ணாசையால் இம்மன்பதைக்கு ஏற்பட்ட அழிவைக் காட்டிலும், பொன்னாலும் பொருளாலும் ஏற்பட்ட அழிவே அளப்பரியது. மண்ணாசையினாலும், பெண்ணாசையினாலும் ஏற்பட்ட வீழ்ச்சி, ஆதிக்க வர்க்கத்தார்க்கு  மட்டுமே. ஆனால், பொருளாசையினால் ஒட்டுமொத்த சமுதாயமே சரிவுப் பாதையில் சரிந்து கொண்டேயிருக்கிறது. மண்ணாசைக்கும் பெண்ணாசைக்கும் எல்லையுண்டு; பொருளாசைக்கு எல்லையே கிடையாது.
காசு
  • காசு என்ற சொல்லுக்குக்  "குற்றம்' என்றொரு பொருளுமுண்டு.  "உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்து ஆள்பவனுக்கும், ஒருவேளை உணவுக்காகக் காட்டில் வேட்டையில் இறங்குபவனுக்கும் உடுப்பதற்கு இரண்டு ஆடைகள் தேவை; உண்பதற்கு உழக்கு அரிசி தேவை.  அதனால் சேர்த்த பொருளைப் பலருக்கும் வழங்கி வாழ வேண்டும்; நாமும்  நம்சந்ததியும் அனுபவிப்போம் என நினைத்தால் பல தீங்குகள் நேரிடும்' எனப் புறநானூறு 189-ஆவது பாடல், அபாயச் சங்கை ஊதிச் சென்றிருக்கிறது. கோடிகோடியாய் செல்வத்தைக் குவிப்பவர்களை, மகாபாரதத்தில் விதுராச்சாரியார் மிகச் சரியாக அடையாளம் காட்டிச் சென்றுள்ளார்.   "நெறியல்லாத நெறியில் செல்வத்தைக் குவித்தவர்கள். தெய்வ சிந்தனையோடு திகழ மாட்டார்கள்; எதைப் பேச வேண்டும் என்பது அறிந்து பேச மாட்டார்கள். தம்முடைய சுற்றத்தாரையும், துணைவர்களையும் மதித்தும் பேசமாட்டார்கள்.
  • வெற்றி ஒன்றே அவர்களுடைய குறிக்கோளாக இருப்பதால், எதிரிகளின் பலத்தை எண்ணிப் பார்க்கமாட்டார்கள்; தலைக்கு மேலே காத்திருக்கும் விதியினுடைய வலிமையையும் நின்று நிதானித்துப் பார்க்க மாட்டார்கள்' என்று இருட்டிலே திருட்டுத்தனமாகச் சம்பாதித்தவர்களின் இயல்புகளை நூல் பிடித்தாற்போன்று எடுத்தியம்புகிறார் விதுரர்.
அப்துல் கலாம்
  • விதுரருடைய தீர்க்க தரிசனத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கட்டியம் கூறுகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் அவரைச் சந்தித்த மாணவி ஒருவர், "மகாபாரதத்தில் உங்களைக் கவர்ந்த பாத்திரம் எது' என்று ஒரு கேள்வி கேட்கிறார்.  அதற்கு "விதுரர்'  எனப் பதில் அளித்த குடியரசுத் தலைவர், அதற்குரிய காரணத்தையும் எடுத்துச் சொல்லுகிறார். "அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறிழைக்கும்போது துணிச்சலாக  எதிர்த்தவர் விதுரர்.  அதர்ம ஆட்சி செய்த கொடுங்கோலன் முன்னே எல்லோருமே மண்டியிட்டபோது, தனித்து நின்று மாற்றுக் கருத்தைத் தைரியமாக எடுத்துரைத்த அஞ்சா நெஞ்சர்.
  • அதனால் அவர் என்னைக் கவர்ந்தார்'  என அந்தப் பெருந்தகை சொன்ன பதில், விதுர நீதியின் வலிமையை உணர்த்துகிறது.
  • பெட்டி பெட்டியாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும் செல்வத்தைக் குப்பைமேடு என்கிறார் நம்மாழ்வார்.  குப்பை மேட்டிலே என்னென்ன கிடக்குமோ, அத்தனையும் கயவர்களின் செல்வத்திலும் கிடக்கும் என்கிறார் அவர். "குப்பை கிளர்ந்தன்ன செல்வத்தை, வள்ளல் புகழ்ந்து வாய்மை இழக்கும் புலவீர்காள்' எனப் புலவர்களை இடித்துரைப்பதுபோல், செல்வத்தின் இழிவையும் நயம்பட நவில்கின்றார் அவர்.
அறவழியில்....
  • அறவழியில் ஈட்டாத பொருளின் இயல்பை இன்றைய சூழலுக்குப் பொருந்துமாறு அன்றைக்கே எழில்பட திருமந்திரத்தில் திருமூலர் மொழிந்துள்ளார்.  தேன் எடுப்பவன் தீப்பந்தம் கொண்டு தேனீக்களை விரட்டிவிட்டு, தேன்கூட்டைக் கொண்டு செல்வதுபோல், கயவர்கள் பதுக்கி வைத்த செல்வம் களவாடப்படும் என்கிறார் திருமூலர்.  "ஈட்டிய தேன்பூ மணம் கண்டு இரதமும், கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடுமே ஓட்டித் துரந்திட்டு அதுவலியார் கொளக் காட்டிக் கொடுத்து அது கைவிட்டவாறே' என்பது திருமந்திரப் பாடல்.
  • பொல்லாத வழியில் செல்வத்தைக் குவிக்கும் புல்லறிவாளர்களின் பேதமையை மற்றவர்களைக் காட்டிலும், வள்ளற்பெருமான் நன்குணர்ந்திருக்கிறார்.  "குறுக்கு வழியில் செல்வத்தைக் குவித்த குணக்கேடர்கள், பொய்யும் வஞ்சகமும் பேசுவார்க்குப் பொருள்களை அள்ளிக் கொடுப்பார்கள்.  நற்பொருளை எடுத்துரைப்பவர்க்கு ஒன்றும் ஈயாமல் வெறும் கையை விரித்துக் காட்டிவிடுவார்கள்.  போலிவேடம் பூண்டுவரும் வனிதையர்க்குப் பெட்டிப் பெட்டியாகப் பணத்தை அள்ளிக் கொடுப்பார்கள்' எனப் பணத் திமிரின் கோலங்களை, அளவுகோல் போட்டு அளந்து சொல்லுகிறார் இராமலிங்க அடிகள்.
  • வாழ்க்கைக்குப் பொருள் ஆதாரமாகும். ஆனால், அந்தப் பொருள் இன்று ஆடவர்களுக்குத் தாரம் போல் ஆகிவிட்டது. வாழ்க்கையில் ஓர் அம்சமாக இருக்க வேண்டிய பொருள், இன்று மனித வாழ்க்கையின் மூலாதாரமாகிவிட்டது.
  • செல்வத்துப் பயன் ஈதல் என்பதை முற்றாக உணர்ந்து வாழ்ந்தவர் பட்டினத்தார்.  திரைகடல் ஓடி, தாம் திரட்டிவந்த பொருளை எல்லாம் வரட்டிமுட்டையில் வைத்து, அனைவருக்கும் வாரி வழங்கச் செய்தார்.  துறவு வாழ்க்கை மேற்கொள்வதற்கு முன்பு "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே' எனத் தம் பெற்றோர்களுக்கு அறிவுறுத்திப் போனவர் பட்டினத்தார். மகாகவி பாரதியார் தம் தந்தையின் அகால மரணத்திற்குக் காரணமே பொருள்மேல் வைத்த ஆசை என்கிறார்.  எட்டயபுரத்தில் திவான் போல் இருந்த சின்னசாமி ஐயர், அதனை விடுத்துப் பொருள்மேல் வைத்த பேராசையால், எட்டயபுரத்தை அடுத்துள்ள "பிதப்புரம்'  எனும் கிராமத்தில் பருத்தி அரைக்கும் ஆலையைத் தொடங்குகிறார்.  குறுகிய காலத்தில் பொருள் ஈட்ட வேண்டும் எனும் ஆசையால், ரூ.8,000 கடன் வாங்கி, அன்றைய பம்பாயிலிருந்து இயந்திரங்களை வரவழைக்கிறார். இயந்திரங்கள் வந்தனவே தவிர, அதனை இயக்குபவர்கள் வரவில்லை. அதனால், ஆலை ஓடாமல் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகி, அந்தக் கவலையில் இவ்வுலக வாழ்வையும் நீத்தார்.
பாரதியார் கூற்று
  • அதனைப் பாரதியார், "நாசக் காசினில் ஆசையை நாட்டினான்; நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தான்' எனக் கழிவிரக்கத்தோடு பாடுகிறார். பாவேந்தர் பாரதிதாசன் ஈயாத செல்வம் கேடாய் முடியும் என்பதைப் "பொருளாளி திருடர்களை விளைவிக்கின்றான்; பொதுவுடமையோன் திருடர்களைக் களைவிக்கின்றான்' எனப் பாடினார்.  கவியரசர் கண்ணதாசன் அதே கருத்தை, "வீங்குகின்ற செல்வம் வீங்குவதும் ஆபத்து; ஏங்குகின்ற ஏழை நெஞ்சம் ஏங்குவதும் ஆபத்து' எனப் பாடியுள்ளார்.
  • பொருளின் மேல் வைத்த பேராசை ஒரு சமூகத்தையே அழித்துவிடும் என்பதை எடுத்துக்காட்ட ஆலிவர் கோல்ட்ஸ்மித் எனும் ஆங்கிலக் கவிஞர் "விகார் ஆப் வேக்ஃபீல்டு' எனும் ஒரு கதைப் பின்னலையே உருவாக்கினார்.
  • அந்தப் படைப்பில் "எங்கு செல்வம் கொழுத்துக் கிடக்கின்றதோ, அங்கே மனிதன் அழிகிறான் எனும் சிந்தனையைமையக் கருத்தாக வைத்தார். அந்தப் படைப்பைப் படித்த ஜார்ஜ் பெர்னாட்ஷா, "ஆலிவர் கோல்ட்ஸ்மித் ஒரு தீர்க்க தரிசனமுள்ள பொருளாதார வல்லுநர், அதே சமயத்தில் கவிஞர்கூட' என வியந்து பாராட்டினார்.
  • ஏசுநாதர், "செல்வத்திற்கு ஊழியம் செய்பவன், கடவுளுக்கு ஊழியம் செய்பவனாக இருக்க முடியாது' என்றார். அவருடைய சீடர் புனிதர் பால், "பணத்தின் மேல் வைக்கின்ற பேராசை, அழிவுக்குரிய ஆணிவேர்' என்று தம்முடைய சீடர்களுக்குப்போதித்தார்.
  • செல்வத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஜாம்ஷெட்ஜி டாடா ஒரு முன்னுதாரணம்.  அயர்லாந்தில் மிகப் பெரிய நூற்பாலையை நடத்திய ஓ கொன்னார் எனும் ஆங்கிலேயன், "ஜாம்ஷெட்ஜி! தாங்கள் பருத்தியை மட்டும் விவசாயிகளிடமிருந்து வாங்குகிறீர்கள்.  அதோடு பருத்திக் கொட்டையையும் சேர்த்து வாங்கினால், பருத்திக் கொட்டையை அரைக்கும் ஓர் எண்ணெய் ஆலையையும் உருவாக்கிச் சம்பாதிக்கலாமே' என்றார். அதற்கு ஜாம்ஷெட்ஜி "கொன்னார் பிரபுவே!  நீ  சொல்வது போலப் பருத்திக்கொட்டை எண்ணெயை உருவாக்கினால், அந்தப் பருத்தி விதைகளை நம்பி வாழ்கின்ற பசுக்கள் கண்ணீர் வடிக்கும். மேலும், அந்தப் பசுக்களை வளர்க்கின்ற விவசாயியும் கண்ணீர்வடிப்பான். அதை நான் செய்ய மாட்டேன்' என மறுதலித்தார்.
வள்ளலார்
  • நிறைவாக, "மாடி மேலே மாடி கட்டி, கோடிகோடியாய் குவித்து வைத்திருக்கும் கோமான்கள்' என வள்ளலார் பாடிய ஒரு கருத்தை மனத்தில் இருத்த வேண்டும். "சிவனே! நான் படைத்த பணத்தை எல்லாம் (இரசவாதத்தால் உருவாக்கியது) கிணற்றிலே எறிந்தேன்; குளத்திலே எறிந்தேன்; கேணியில் எறிந்தேன்; ஆனால்நீ கொடுக்கின்ற குணத்தை மட்டும் எக்காலத்திலும் விட மாட்டேன்' எனப் பிள்ளைச் சிறுவிண்ணப்பத்தில் பாடுகிறார்.  அதனால்தான் அவர் வள்ளலார் என இன்றும் கொண்டாடப்படுகிறார்.
  • வள்ளலாருக்குப் பின் வந்த அவருடைய சீடர்களிலே சிலர், வள்ளலார் கிணற்றிலும், குளத்திலும், கேணியிலும் வீசியதாகச் சொன்ன பொருளை, கிணத்திலும், குளத்திலும் இறங்கி தேடிப் பார்த்து ஏமாந்தார்களாம்.  பொருள் மேல் வைத்த ஆசை நல்லவர்களையும் வேட்டைவிலங்குகளாக ஆக்கக்கூடியதாகும்.
  • பொதுவாக மானிடர்கள், "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே'  எனும் குமரகுருபரர் கருத்தை எண்ணி வாழ்ந்தால், குணம் பந்தியிலே பரிமாறப்படும்.
  • பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. வேட்பாளர்களின் தகுதி பணத்தால் தீர்மானிக்கப்படுகிறதா இல்லை அவர்களது குணநலனால் தீர்மானிக்கப்படுகிறதா?

நன்றி: தினமணி(21-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories