TNPSC Thervupettagam

ஆசிரியர்கள் போராடும் சூழல் முடிவுக்கு வரட்டும்!

September 12 , 2024 134 days 102 0

ஆசிரியர்கள் போராடும் சூழல் முடிவுக்கு வரட்டும்!

  • தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளால் அடிக்கடி போராட்டங்கள் நடப்பது கவலை அளிக்கிறது. தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் பேசுபொருளாகியிருக்கிறது. இத்தகைய போராட்டங்களால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்.
  • தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏறக்குறைய 80,000 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் ஏறக்குறைய 60 சதவீதத்தினர் பெண்கள். இவர்கள் கடந்த பத்தாண்டுகளாகவே பல்வேறு கோரிக்கைகளைப் பள்ளிக் கல்வித் துறையிடம் முன்வைத்து வருகின்றனர். கடைசியாக அமைக்கப்பட்ட ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இடைநிலை ஆசிரியர்களது ஊதியம் மட்டும் உயர்த்தப்படாமலே உள்ளது; அதை உயர்த்த வேண்டும் என்பது அவர்களது முதன்மையான கோரிக்கை.
  • ஓய்வூதியத் திட்டத்தின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றாத புதிய ஓய்வுத் திட்டத்தை ரத்துசெய்வது, மாணவர்கள் குறித்த அடிப்படைத் தகவல்களை எமிஸ் என்கிற இணையதளத்தில் (EMIS-கல்வியியல் மேலாண்மை தகவல் அமைப்பு) நாள்தோறும் பதிவிடும் பணியிலிருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள், 12 ஆசிரியர் அமைப்புகளை உள்ளடக்கிய டிட்டோஜாக் என்கிற கூட்டமைப்பு மூலம் வலியுறுத்தப்பட்டுவந்தன.
  • இதற்கிடையே பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை எண் 243, ஆசிரியர்களுக்கு மேலும் அதிர்ச்சியளித்தது. இதுவரை இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றிய அளவில் (block) மட்டும் பணியிட மாறுதல் செய்யப்பட்டு வந்தனர். ஏற்கெனவே அவர்கள் பணிபுரிந்துவரும் ஊர் இருக்கும் அதே ஒன்றியத்துக்குள்தான் புதிய பணியிடம் ஒதுக்கப்படும்.
  • புதிய அரசாணையின்படி, ஒன்றிய வரையறை இன்றி மாநில அளவில் எங்கு வேண்டுமானாலும் அவர்கள் மாறுதல் செய்யப்பட முடியும். குறிப்பாக, பெரும்பான்மையினராக உள்ள ஆசிரியைகளை இது அதிகமாகப் பாதிக்கும் எனக் குரல்கள் எழுந்தன.
  • இடைநிலை ஆசிரியர்களின் தொடர்ச்சியான போராட்டங்களை அடுத்து, 12 கோரிக்கைகளைப் பள்ளிக் கல்வித் துறை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது அவற்றிலும் சில கோரிக்கைகளை மட்டுமே ஏற்க இருப்பதாக அதிகாரிகள் கூறுவதாகவும் டிட்டோஜாக் அமைப்பினர் கூறுகின்றனர். இவ்வளவுக்கும் அக்கோரிக்கைகள் நிதிச் செலவுக்கு வழிவகுக்காத கோரிக்கைகள் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
  • பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மூலம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை விளங்குகிறது. கற்பித்தலைப் பின்னுக்குத் தள்ளும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது நல்லதல்ல என்கிற கோரிக்கையை ஏற்று, எமிஸ் பணிக்கென தனியாக 7,000 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  • இது வரவேற்கத்தக்க நடவடிக்கை. எனினும் இடைநிலை ஆசிரியர்கள் எமிஸ் தரவேற்றப் பணியைத் தொடர்ந்து செய்யும் நிலையே தொடர்வதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக அரசாணை எண் 243 அமையுமா என்பதும் கேள்விக்குரியது என்கிறார்கள்.
  • தற்போதைய வேலைநிறுத்தத்துக்குப் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நம்பிக்கையூட்டும் பதில் கிடைக்கவில்லை என டிட்டோஜாக் அமைப்பினர் கூறுகின்றனர். செப்டம்பர் இறுதியில் சென்னை ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிடும் மூன்று நாள் போராட்டத்தை அவர்கள் அறிவித்துள்ளனர்.
  • இதே 31 அம்சக் கோரிக்கைகளில் பலவற்றை முன்வைத்து அவ்வப்போது போராடிவரும் ஜாக்டோஜியோ அமைப்பும் இதே மனநிலையிலேயே உள்ளது. இந்நிலை தொடரக் கூடாது. மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களின் கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்துப் போராட்டச் சூழலைத் தவிர்ப்பது அவசியம். கல்வித் துறை வளர்ச்சியில் சீரிய அக்கறை காட்டும் அரசு, ஆசிரியர்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories