TNPSC Thervupettagam

ஆட்சி நிர்வாகம்

March 5 , 2019 2102 days 1508 0
  • உலகின் பல நாடுகளில், நகர்ப்புறங்களின் வளர்ச்சியை பொருளாதார முன்னேற்றத்துக்காக உபயோகித்தும், சமூக வளர்ச்சியை ஊக்கப்படுத்தியும் செழிப்படைந்ததைக் கண்டு இந்தியாவிலும் இதுபோல் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் உருவாகின. இது பற்றிய முழுமையான ஓர் ஆராய்ச்சியை 21 மாதங்களாக ஓர் அனுபவமிக்க நிறுவனம் நடத்தியது. அந்த ஆராய்ச்சியின் முடிவில் பல திடமான கருத்துகள் உருவாகின.
ஆராய்ச்சி
  • அவற்றின் அடிப்படையில், நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சியின் முன்னேற்றம் உருவாகிய நிலையிலும், அதை மேலும் அதிகப்படுத்த நமது நகரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
  • பெரும்பாலான நாடுகளின் மக்கள்தொகையில் வயது முதிர்ந்தவர்கள் அதிகமாகி, அவர்கள் பணி செய்ய முடியாமலும், தங்கள் பிள்ளைகளையோ, மற்ற அமைப்புகளையோ சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஆனால், நம் நாட்டின் நிலைமையே வேறு.
  • நிறைய இளைஞர்களையும், வளர்ந்துவரும் ஜனத்தொகையையும் கொண்ட நம் நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதாரத்தை மேன்மையடையச் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது.  அதற்கு நமது நகரங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகிறது.
  • நகர்ப்புற வளர்ச்சியை ஆராய்ந்ததில், நம் நாட்டின் நகரங்கள் 70 சதவீத புதிய வேலைவாய்ப்புகளை, 2030-ஆவது ஆண்டுக்குள் உருவாக்க முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  இதனால், இந்தியப் பொருளாதாரத்தின் தேசிய வளர்ச்சிக் குறியீடான ஜி.டி.பி. 70% உயரும் எனவும், சராசரி தனி மனிதனின் வருமானம் நான்கு மடங்கு உயரும் என்றும் கூறப்படுகிறது.
நகர்ப்புறத்தில்.....
  • இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 2001-ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி 29 கோடிகள்; அது 2008-இல் 34 கோடிகளாக அதிகரித்துள்ளது. 2030-ஆவது ஆண்டில் நகர்ப்புற மக்கள்தொகை 59 கோடிகளாக அதிகரித்துவிடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
  • இது, இதுவரையிலும் நம் நாட்டில் நடந்திடாத நகர்ப்புற வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.  1971 முதல் 2008-ஆம் ஆண்டு வரையிலும், இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை 23 கோடிகள் அதிகரித்தது.
  • இந்த 40 ஆண்டுகளின் மக்கள்தொகை வளர்ச்சியை 1998 முதல் 2018-ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் 25 கோடியாக அதிகரித்ததுடன் ஒப்பிட்டால், இரண்டு மடங்கு மக்கள்தொகை பெருக்கம் நமக்கு புரியும்.
  • ஒரு நாட்டின் நகர்ப்புறங்கள் மிக அதிகமாக வளர்ந்தால், அதைச் சரியான முறையில் நிர்வகிக்கத் தேவையான நடவடிக்கைகளை உருவாக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அதுபோன்ற நடவடிக்கைகளும், திட்டங்களும் உருவாக்கப்படவில்லை.  இன்றைய நிலைமையிலும்,  அதிகமான நகர்ப்புறங்கள் உருவாவது நாட்டின் நலனுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்ற விவாதம் நம்மிடையே நடைபெற்று வருகிறது.
கிராமப்புறங்களில்
  • நகரங்கள் அதிகமாகி கிராமப்புறங்கள் குறைவது நாம் கிராம மக்களிடமிருந்து வளர்ச்சியை எடுத்து, ஏழை மக்களின் வாழ்க்கையை கவனிக்காமல் விட்டு விடுகிறோமா எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இது ஒரு தவறான எண்ண ஓட்டம் என்பது முன்னேறிய நாடுகள் பல நமக்கு அளிக்கும் பாடம்.  கிராமங்களும், நகரங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்பதால், ஒன்றின் வளர்ச்சி மற்றொன்றுக்குப் பரவும் தன்மை உண்டு.  நகர்ப்புறங்களின் வளர்ச்சி, 85%  வரிகளை நம் அரசுக்கு உருவாக்கி அதன் பலனால் நாடு முழுவதும் வளர்ச்சி எட்டப்படும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • இந்தியாவின் 70 பெரிய நகரங்களை ஒட்டி வசிக்கும் 20 கோடி கிராமங்களின் மக்கள் இந்த நகரங்களின் வளர்ச்சியால் நேரடிப் பலன்களை பெறுவார்கள். மேலும், நகரங்களில் பெரிய செல்வந்தர்களும் வசதி படைத்தவர்களும்தான் வாழ்கிறார்கள் என்ற தவறான எண்ணம்  பலரிடம் உருவாகியுள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 75% மக்கள், அடித்தட்டில் வசிப்பவர்கள் என்பதும் அவர்களின் சராசரி வருமானம் நாள் ஒன்றுக்கு ரூ.80 என்பதையும் நாம் உணர வேண்டும்.  எனவே நமது நகர்ப்புறங்களின் வளர்ச்சி என்பது, இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
  • நம் நாட்டின் நகர்ப்புற வளர்ச்சிக்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வெளிநாட்டவர் நமது நாட்டின் நகர்ப்புறத்தில் தொழில் முதலீடுகளை செய்யத் தயங்குவார்கள் என்பது அனுபவம் நமக்கு தந்த பாடம். இதனால், நமது நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் தற்போதுள்ள 4%-லிருந்து குறைந்து போகும் எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.  இதன் முழு விவரங்களையும் நாம் மேலே குறிப்பிட்ட நிறுவனத்தின் 21 மாத ஆய்வு சீராகப் பட்டியலிட்டு விவரித்துள்ளது.  இந்த ஆய்வில் 15 இந்திய நகரங்களும், உலகின் மற்ற நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 நகரங்களும், 100 தலைசிறந்த இந்திய மற்றும் பன்னாட்டு நிபுணர்களும், பொருளாதார நிபுணர்கள் மற்றும் மாநில மத்திய அரசின் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.
அறிக்கை
  • இந்த ஆய்வில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் பல யோசனைகள் வழங்கப்பட்டு, அவை 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற யோசனையும் வழங்கப்பட்டுள்ளது.  இவை நிறைவேற்றப்பட்டால் 4% தேசிய வளர்ச்சிக் குறியீடாகிய ஜி.டி.பி., 8%  அல்லது 9%-மாக உயரும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக, தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் பெருவாரியான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  உலக அரங்கிலும், இது எல்லோரும் உற்றுநோக்கும் வளர்ச்சி.
  • நம் நாட்டின், 68 நகரங்கள் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையுடனும், 13 நகரங்கள் 40 லட்சம் மக்களைக்  கொண்டவையாகவும், 6 பெருநகரங்கள் ஒரு கோடி மக்கள் உள்ள நகரங்களாகவும் உள்ளன.  மும்பை மற்றும் தில்லி ஆகிய இரு நகரங்களும் 2030-ஆம் ஆண்டில் உலகின் ஐந்து பெரிய நகரங்களில் இடம்பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளன.
உதாரணம் 
  • மும்பை நகரின் வரி வருமானம் 2030-ஆம் ஆண்டில் 2,65,000 கோடி டாலர் களாகி (ரூ.81 லட்சம் கோடி), கொலம்பியா, போர்ச்சுகல், மலேசியா ஆகிய நாடுகளின் ஜி.டி.பி. எனப்படும் தேசிய வருமானத்துக்கு மேல் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  அந்த ஆண்டில், ஆண்டுக்கு ரூ.99,000 வருமானம் உள்ள குடும்பங்கள் 20%-க்கும் கீழ் குறைந்து போகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நடுத்தரக் குடும்பங்களின் வருமானம், ஆண்டுக்கு ரூ.2 லட்சம்  முதல் ரூ.10 லட்சம் எனக் கணக்கிடப்பட்டு, நம் நாட்டில் 3.2 கோடி குடும்பங்கள் இப்போது உள்ளன.
  • அது,  2030-ஆம் ஆண்டில் 14 கோடியே 70 லட்சமாகப் பெருகிவிடும். இதனால், நமது மக்களின் தேவை அதிகமாகி, பொருளாதார வளர்ச்சி பெருகும். ஆனால், இதன் உடனடித் தேவையாக நகரங்களின் கட்டமைப்புகள், போக்குவரத்து, சுகாதாரம் தொடர்புடையவை, கல்வி மற்றும் பொழுதுபோக்கு அமைப்புகள் உருவாக வேண்டிய அவசரநிலை உருவாகியுள்ளது.  உதாரணமாக, 70 கோடி குடியிருப்புக் கட்டடங்களும், 90 கோடி வியாபார அமைப்பிடங்களும்  மக்களுக்குத் தேவைப்படும் எனக் கணக்கிடப் பட்டுள்ளது.  இவை கட்டப்படும்போது வேலைவாய்ப்புகள் உருவாகும். நகரங்களின் வளர்ச்சியால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திவிடும் என்பது அனுபவம் நமக்குத் தந்த பாடம்.
  • வியாபாரப் போட்டிகளால் பொருள்களின் விலை குறையும்.  பெரிய அளவில் நீர் நிலைகளும், கழிவு நீர் அகற்றும் நிலையங்களும் உருவாக்கப்பட்டு, அந்தப் பணிகள் எல்லாப் பகுதிகளையும் சென்றடையும்.
  • மக்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் அடிப்படைத் தேவைகள், 20 முதல் 50% வரை குறைவான விலையில் கிடைக்கின்றன என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது போன்ற பொதுப்பணிகளுக்கான செலவு குறையும்பட்சத்தில்,  அந்தச் சேமிப்பு ஏழை மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படலாம். மேலே விவரிக்கப்பட்ட நகரங்களின் எல்லா வளர்ச்சிகளும், இந்திய மக்களைச் சென்றடைய நல்ல திட்டமிட்ட செலவுகளைச் செய்ய அரசு உடனடியாக முன்வர வேண்டும்.  இந்தியாவின் வருஷாந்திர தனிமனித கட்டமைப்புச் செலவு, "பர் கேபிட்டா செலவு' எனப்படும் வகையில் 17 டாலர்களே (ரூ.1,207)!  இது சீனாவில் 116 டாலர்கள் (ரூ.8,236); பிரிட்டனில் 391 டாலர்கள் (ரூ.27,761) என்பது கவனிக்கத்தக்கது. அடுத்த 20 ஆண்டுகளில், நகரங்களின் கட்டமைப்பில் ரூ.1 லட்சம் கோடிகளை நாம் செலவிட்டால் பெரும் வளர்ச்சியைக் காணமுடியும்.
  • இவை எல்லாவற்றையும் கணக்கிலெடுத்துக் கொண்டு கொள்கைகளை வகுக்கும் ஆட்சியாளர்களும் அரசு உயர்அதிகாரிகளும் தமிழகம் உள்பட இந்திய நகரங்களின் கட்டமைப்பில் அக்கறைசெலுத்த வேண்டும் என்பதே நாடு, பொது மக்களின் நலனில் அக்கறை உள்ள சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.  தரமான ஆராய்ச்சி சமுதாயத்துக்குப் பலன் அளித்தால், அது நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories