TNPSC Thervupettagam

ஆன்ம எழுச்சியை விதைத்த அல்லாமா இக்பால்!

April 20 , 2019 2046 days 1765 0
  • விண்வெளிக்குப் போன இந்திய வீரர் ராகேஷ் சர்மா, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் விண்வெளியிலிருந்து உரையாடுகிறார்.  நமது வீரர்களின் மகத்தான விண்வெளி சாதனைக்கு வாழ்த்துக் கூறி உற்சாகப்படுத்திய பிரதமர் இந்திரா காந்தி, விண்வெளியிலிருந்து பார்க்கும்போது நமது இந்திய தேசம் எப்படித் தெரிகிறது  என்று அவரிடம் வினா தொடுக்கிறார்.
  • அதற்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, ஸாரே ஜஹான்úஸ அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா  (உலகிலேயே சிறந்த நாடு நமது ஹிந்துஸ்தானம்) என்ற பாடலையே பதிலாகச் சொல்கிறார்.  யூடியூபில் உள்ள இந்த உரையாடலைக் கேட்பவர்கள் சிலிர்த்துப் போவர்.
இக்பால்
  • இந்தியர்களின் நாடி நரம்பையெல்லாம் மீட்டி, எழுச்சியை ஊட்டுகிற அந்தப் பாடலை எழுதியவர் அல்லாமா இக்பால் என்ற அதியற்புதக் கவி வித்தகர். 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது, அரசியல் நிர்ணய அவையில் ஒலித்ததும் இந்தப் பாடல்தான்.
  • இந்தப் பாடல் தந்த தாக்கத்தால்தான், மகாகவி பாரதியும் பாருக்குள்ளே நல்ல நாடு என்ற அற்புதமான கவிதையை தமிழுக்குத் தந்தார்.
  • அல்லாமா இக்பாலின் மறைவுக்குப் பிறகு, மகாத்மா காந்தி தனது நண்பர் முகமது ஹுசைனுக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தில், இக்பாலின் ஸாரே ஜஹான்ஸ் அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா பாடலைப் படிக்கும் போதெல்லாம் என் உள்ளம் பொங்குகிறது.
  • பார்வா சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தபோது பல நூறு முறை இந்தப் பாடலை நான் பாடியிருப்பேன்.  இந்தப் பாடலின் சொற்களில் இனிமை ததும்புகிறது.  இந்தக் கடிதத்தை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்கூட அந்தப் பாடல் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.
  • அல்லாமா இக்பால் குறித்து ஜவாஹர்லால் நேரு குறிப்பிடும்போது, அவரது சிந்தனைகளாலும், அறிவுத்திறனாலும் இந்திய விடுதலை குறித்த அவரது கருத்துகளாலும் நான் ஈர்க்கப்பட்டேன்.  அவரது புகழ் மிகுந்த பாடல்கள் அனைவரின் மனங்களிலும் அவரது நினைவைப் பசுமையாக வைத்திருக்கும் மனங்களுக்கு ஊக்கமளிக்கும்  என்றார்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
  • மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அல்லாமா இக்பால் குறித்துக் கூறும்போது, அவர் நிகரற்ற கவிஞர் மட்டுமல்ல, அமரத்துவம் கொண்ட மனிதரும்கூட. அவரது சாரே ஜஹான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா பாடலின் காரணமாக, அவர் அனைவரின் உள்ளத்திலும் இருப்பார் என்று பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்.
  • தெற்காசியாவின் மூளை என மகாகவி ரவீந்திரநாத் தாகூரால் போற்றப்பட்ட அல்லாமா இக்பால் என்ற அரிய ஆளுமையின் பன்முகத் திறன்களையும் பரந்துபட்ட பார்வையையும், ஆழிய ஞானத்தையும், நேரிய நெறிகளையும், இளைய தலைமுறை தனது இதயத்தில் பதியமிட்டு வளர்க்கவேண்டும்.
  • வலிமை மிக்க உணர்வுகள், வார்த்தைகள் என்னும் வடிவமெடுத்து தன்னிச்சையாக வெளிப்படுவதே கவிதை என்பார் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். காதலே பெரும்பான்மையான கவிஞர்களை இயக்கிய வலிமை மிக்க உணர்வாக இருந்திருக்கிறது.  தொடக்ககால உருது கவிதைகள் காதலின் உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்தன.  ஆண், பெண் உறவையே அடிநாதமாகக் கொண்டிருந்த உருது காதல் கவிதையை மானுட நேயம் நோக்கி மடை மாற்றியதோடு அதனைத் தத்துவ விசாரணைகளின் தளமாகவும் ஆக்கியவர் மிர்சா காலிப் என்னும் மிகப் பெரிய கவிஞர்.
  • மிர்சா காலிப்புக்குப் பிறகு மிகுந்த வீச்சுடன் கவியுலகில் அறியப்பட்ட அல்லாமா இக்பால், குறிக்கோள்களை எய்திட, உள்ளத்தில் உண்மை உறுதி கொண்டு முழு வேகத்துடன் இயங்குவதே காதல் என்று புதிய வரையறையைத் தருகிறார். மென்மையும் நாணமும் மிக்க மெல்லியல் பெண்ணாக இருந்த உருதுக் கவிதையை ஆண்பாலாய் மாற்றியவர் அல்லாமா இக்பால் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் குறிப்பிட்டது மிகையன்று.
குறியீடு
  • இளைய உள்ளங்களுக்கு ராஜாளிப் பறவையை அல்லாமா இக்பால் குறியீடாக்குகிறார். மரக்கிளைகளில் கூடு கட்டாமல் மலை உச்சிகளில் கூடு கட்டும் ராஜாளி பறவை, மழையில் நனைவதைத் தவிர்க்க, மேகப் பரப்புகளுக்கும் மேலே சென்று பறக்கும் மேன்மைத்திறன் கொண்டது.
  • இளைஞர்களுடைய லட்சியம் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும்.  அவர்களுடைய பண்புகள் தனித்தன்மையோடு திகழ வேண்டும் என்பது அல்லாமா இக்பாலின் அவா.  சமுதாயத்தைச் சீர்படுத்தும் சக்திகளாக இளைஞர்கள் திகழ வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
  • அல்லாமா என்ற சொல்லுக்கு அறிவு மிகுந்தவர் என்று பொருள்.  அவரது படைப்புகளின் தனித்துவம் இந்த அடைமொழியை அவருக்கே உரித்தாக்கிவிட்டது.
  • இக்பால் (தற்போது பாகிஸ்தானில் உள்ள) பஞ்சாப் பகுதியின் சியால் கோட் என்ற ஊரில் 1877 பிப்ரவரி 22 அன்று பிறந்தார். இக்பாலின் முன்னோர்கள் காஷ்மீர் பிராமணர்கள்.
  • இக்பால் இளம்பருவத்திலேயே கல்வியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மீர் ஹசன் என்ற ஆசிரியரிடம் அரபி மற்றும் பாரசீக மொழியைக் கற்றார்.
  • சிறுவயதில் ஒருமுறை வகுப்புக்கு தாமதமாக வந்த இக்பாலை, ஏன் தாமதம் என்று ஆத்திரமாகக் கேட்டுள்ளார் ஆசிரியர்.  தாமதமாக வருவதுதானே இக்பால் என்று கவித்துவமாகப் பதிலளித்துள்ளார் சிறுவர் இக்பால்.  இக்பால் என்றால் அதிர்ஷ்டம், புகழ் என்று பொருள்.  மனிதனுக்கு அதிர்ஷ்டம், புகழ் எல்லாம் தாமதமாகவே வருகிறது என்ற பதிலால் ஈர்க்கப்பட்ட ஆசிரியர், அவரை  ஆரத்தழுவி அகத்தில் ஒளிர்ந்த அருங்கவிச் சுடரை அணையாமல் வளர்த்துள்ளார். நமது பள்ளிகளில் இப்படி எந்தச் சிறுவராவது பதிலளித்திருந்தால், ஆசிரியர் கொடுக்கும் அடியில் பிரம்புகள் உடைந்திருக்கும். அத்தோடு கவியுள்ளமும் ஜீவ சமாதியை அடைந்திருக்கும். இக்பாலின் கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியுள்ள அவரது ஆசிரியர் ஷேக் அப்துல் காதிர், இக்பாலுக்கு அப்பெயரை அவரது பெற்றோர் சூட்டிய நேரம், பிரார்த்தனைகளை இறைவன் ஏற்கின்ற நேரமாக இருந்திருக்கும் என்று நெகிழ்வோடு குறிப்பிடுகிறார்.
கல்வி
  • லாகூர் அரசுக் கல்லூரியில் ஆங்கிலம், தத்துவம், அரபி உள்ளிட்ட பாடங்களில் முதன்மை மதிப்பெண்களோடு பி.ஏ. பட்டம் பெற்றார்.சிறப்பு முதன்மைத் தகுதி பெற்றதால், இரண்டு தங்கப் பதக்கங்களை பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கி கெளரவித்தது.
  • இங்குதான் இக்பால், அவரது கல்வி வாழ்வில் பெரும் ஊக்கத்தைத் தந்த பேராசிரியர் ஆர்னால்டைச் சந்திக்கிறார்.  1899-ஆம் ஆண்டு அவரது ஈர்ப்பினால் முதுநிலைப் படிப்பில் தத்துவப் பாடத்தைத் தேர்வு செய்து அதில் பெரும் வெற்றி பெற்றார்.
  • 1902-இல் ஓரியண்டல் காலேஜ் ஆஃப் பஞ்சாபில் அரபித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டு, இல்முல் இக்திஸாத் என்ற நூலை எழுதினார். பொருளாதாரத் தத்துவம் பற்றிய இந்நூல்தான் அல்லாமா இக்பால் எழுதிய முதல் நூலாகும்.
  • இஸ்லாம் மார்க்கப் பேரறிஞரும், திருக்குர்ஆனுக்கு மிகச் சிறந்த விளக்கவுரை எழுதியவருமான மெளலானா அபுல் அஃலா மெளதூதியை அல்லாமா இக்பால் சந்தித்தது அவரது வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மௌதூதியின் நட்புக்குப் பிறகு, இக்பால் இயற்றிய கவிதைகளில் இருந்த ஆன்மிக ஆழம், ஆழ்கடல்களின் ஆழங்களையும் வென்றது. முத்தென்று எண்ணி அள்ளிக்கொண்டது இறையருள்... இறையச்சத்தால் உதிர்ந்த என் வியர்வைத் துளிகளை... என்று அரங்குகளில் அவர் கவி பாடிய போது, வந்திருந்த பெருங்கூட்டம் வசியத்துக்குள்ளானது.
  • படைத்த இறைவனை நோக்கி அவர் எழுப்பிய கேள்விக்கணைக் கவிதை ஷிக்வா பெரும் சர்ச்சை அலைகளை உருவாக்கியது.  அதைத் தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் (ஜவாபே ஷிக்வா) என்று ஒரு கவிதையை அவர் எழுதியபோது, அலை எழுப்பிய உள்ளங்களும் அவரது அறிவாழத்தில் மூழ்கி அமைதியாயின. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ், ஜெர்மனியின் மூனிக் உள்ளிட்ட ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் தமது இளமைக் காலத்தைச் செலவிட்ட இக்பால், கீழையுலகத் தத்துவங்களைப் பெரிதும் உள்வாங்கி இருந்தார். மேற்கத்திய வாழ்வும், கிழக்கிந்தியத் தத்துவ மரபுகளும் சந்திக்கின்ற புள்ளியாக அவரது படைப்புலகம் இருந்தது.
  • பாரத ஜனங்களின் தற்கால நிலை என்ற தலைப்பைப் பெற்ற பாரதியாரின் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற கவிதை அன்றைய இந்தியாவின் அவலத்தைப் படம் பிடித்துக் காட்டும். இதே மன நிலையை எதிரொலிக்கும் வகையில்  அல்லாமா இக்பால் எழுதிய தஸ்வீரே தர்த் (துயரத்தின் ஓவியம்) என்ற கவிதையும் அமைந்தது. அல்லாமா இக்பாலின் மைத்துளிகளில் பிறந்த கவிதைகள், மண்ணின் உயிர்ப்புக்கும், மானுடத்தின் உயர்வுக்கும் ரத்த ஓட்டங்களாக இருந்திருக்கின்றன. நம்பிக்கையை இழந்துவிடாதே, நம்பிக்கையை இழப்பதுதான் ஞானத்தின் வீழ்ச்சி என்று எச்சரித்த இக்பால், உன் கண் முன்னால் தெரிகின்ற கல்லும், மணலும் அல்ல உனது உலகம், உனக்குள் எதை நீ படைக்கிறாயோ அதுவே உன் உலகம் என்கிறார்.
  • இந்த மண்ணின் விடுதலைக்குப் பாடிய மகாகவி இக்பால், 1938-ஆம் ஆண்டு ஏப்ரல்  21-ஆம் தேதியன்று இந்த மண்ணிலிருந்து விடை பெற்றுக் கொண்டார்.  அந்தக் காலத்தில் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
  • அல்லாமா இக்பாலின் கவிதைகளின் ஊர்வலம் லட்சக்கணக்கான உள்ளங்களில் இன்றும்  நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. மரணம் கவிஞர்களுக்குத்தான்.  கவிதைகளுக்கு இல்லை!

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories