- நவீன யுகத்தில் பணப் பட்டுவாடா, மின் கட்டணம், வணிக ரீதியான சேவைகள், கல்வி, பொழுதுபோக்கு மற்றும் எண்ணிலடங்கா சேவைகளை எளிய முறையில் ஆன்லைன் மூலம் பெறுகிறோம். இதுநன்மையா, தீமையா என யோசிப்பது அவசியம்.
உதாரணமாக, "ஆன்லைன் ஷாப்பிங்' என்ற வளர்ச்சி அடைந்த துறையை எடுத்துக்கொண்டால், எவ்வளவுதான் ஆன்லைன் நிறுவனத்தினர் தள்ளுபடி கொடுத்தாலும் நாமே நேரே சென்று பார்த்து வாங்கும் திருப்தி இருக்குமா?
பொருளின் தரம்
- பொருளுக்கு உத்தரவாத பிரச்னை, விரும்பிய பொருளுக்குப் பதில் வேறு ஒரு பொருள் வருவது, பழுதான பொருளைச் சரி செய்து அதை புதிதாக விற்பது, சில சமயங்களில் பொருளே வராமல் இருப்பது என பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். பொருள்கள் நம் வீட்டுக்கு வந்த நாள் முதல் இது தரமானதா, இல்லையா என்ற மனக்கவலை அந்தப் பொருளை பார்க்கும் போதெல்லாம் இருக்கும்.
- ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. வங்கிக் கடன் அட்டை மோசடி, வங்கி இணையதள கணக்கு முடக்கம் போன்ற எண்ணற்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஐரோப்பிய உளவுத் துறை நிறுவனமான யுரோபோல் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளர்ந்து வரும் நாடுகளில் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் நாம் பயன்படுத்தும் சாதனங்கள் அனைத்தும் இணையத்தில் இணைக்கப்பட்டு விட்டன; ஆனால், அதற்கான "பாதுகாப்பு அலுவல் நடைமுறைகள்' யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய அளவில் எளிமையாக உள்ளன. அப்படி இருப்பதால் இணையத் திருடர்கள் எளிதாக உட்புகுந்து கட்டுப்படுத்த வழிவகுக்கின்றன.
- உதாரணமாக, ஒரு வங்கி இணையதளத்தை போல் ஒரே மாதிரி தளத்தை உருவாக்கி இணைய முகவரியில் மட்டும் சில மாற்றங்கள் செய்து நமது கார்டு தகவல்களைத் திருடுவது நவீன குற்றங்களில் ஒன்று' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்களது தகவல்கள் திருடப்படுகிறது என்ற கருத்துக்கு ஓர் உதாரணம். அதிக அளவில் மக்கள் பொருள்கள் வாங்க "ஷாப்பிங்' இணையதளத்தை நாடுகிறார்கள்.
- "ஷாப்பிங்' இணையத்தில் போதுமானதை வாங்கி சில பொருள்களை வாங்காமல் விட்டால் அடுத்து நாம் வேறு எந்த "வெப்ஸைட்'-ஐ பார்த்தாலும் இரண்டு பக்கமும் நாம் "ஷாப்பிங்' இணையதளத்தில் பார்த்த பொருள்களின் விளம்பரம் வந்தபடி இருக்கும். அது எப்படி வேறு தளத்திலும் நாம் பார்த்த பொருள்கள் விளம்பரமாக வரும். அதற்கு இவர்கள் தனிக் குழு வைத்து நமது ஐ.பி.முகவரியைக் கொண்டு நம்மைத் தொடர்வார்கள். இது ஆன்லைன் மோசடியின் ஆரம்பம்.
இது குறித்து இணைய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் ராஸ்முஸன் கூறுகையில், "இப்படி கட்டமைக்கப்பட்ட "புரோகிராம்'களுக்குள் ஊடுருவ இணையத் திருடர்கள் ஏற்கெனவே தயாராகி விட்டார்கள். இப்போது அதற்கான சரியான ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
விளம்பரங்கள்
- ஒன்றும் இல்லாத கேள்விகள் கேட்டு, "இந்த நம்பருக்குப் பதிலை அனுப்புங்க. பரிசை வெல்லுங்க, மொபைல் செயலி நிறுவுங்கள்' போன்ற விளம்பரங்களை நாம் பார்த்திருக்கிறோம். இதற்குப் பின்னால் பல கோடிகளைச் சம்பாதிக்கும் உத்திகள் இணைய மோசடியைச் சாரும்.
எத்தனையோ இ- புத்தகங்கள் வந்தாலும் நாம் கையில் வைத்து, புரட்டி படித்து குறிப்பு எடுப்பது போன்ற சுகம் இந்த இ-புத்தகங்களில் வருமா? சென்னை புத்தக கண்காட்சியில் அமெரிக்க பெண் ஒரு முறை பார்வையாளராகச் சென்று வந்தார். அவர் கூறுகையில், "இணைய புத்தகங்களிலிருந்து சற்று ஓய்வு கொடுக்கவே இங்கு வந்தேன்' எனப் பெருமையுடன் கூறினார்.
உதாரணம்
- ஒரு நண்பர் குடும்பத்துடன் திரைப்படத்துக்குச் செல்லலாம் என முடிவு செய்து நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்கிறார். அவருடைய குழந்தை இடைவேளையில் என்ன சாப்பிடலாம் என அதே ஆன்லைனில் பதிவு செய்கிறார். அவருடைய மனைவி அந்த திரைப்பட நகரத்தில் என்ன "ஷாப்பிங்' செய்யலாம் என இணையத்தில் தேடுகிறார்.
- இப்படியே தொடங்கி முடியும் நாள்களில் குடும்பத்தில் சிரித்துப் பேச போதிய நேரம் இல்லை என்று கூறினார். சில மாதங்கள் ஆன பிறகு, இதே நண்பர் திரைப்படத்துக்குச் செல்லும்போது அவருடைய குழந்தை, "அப்பா உங்க சீட்டை தனியா "புக்' பண்ணுங்க; எனக்கு "ஏ' வரிசையில் 3-ஆவது இருக்கை "புக்' பண்ணுங்க என்றார்; "ஏன்' என்று அப்பா கேட்க, "எனது நண்பர்கள் "ஏ' வரிசையில் 4 மற்றும் 5 -ஆவது இருக்கையை "புக்' செய்துள்ளார்கள் எனச் சொல்ல நண்பரான அப்பா பதறினார். பல தவறுகளுக்கு ஆன்லைன் உடந்தையாக உள்ளது.
- இருக்கும் இடத்தில் இருந்தே சகல விதமான வேலைகளையும் வீட்டிலிருந்தே
செய்து முடிப்பதால் உடல் உழைப்பின்றி பலவித நோய்களுக்கு உள்ளாகிறார்கள். இன்னும் ஒருபடி மேலாக "ஸ்மார்ட் போன்' என்ற வலையில் நமது நேரங்களை அடமானம் வைக்கிறோம். குழந்தைகளுக்கு கணினியோ, செல்லிடப்பேசியோ தவிர்க்கமுடியாத சமயத்தில் கொடுக்கும்போது அதில் "ஃபேமிலி ஃபில்ட்டர்' என்ற வசதி எல்லா "பிரவுசர்'களிலும் இருக்கும். அதை நிறுவினால் இணையத்தில் தேவையில்லாத தளங்கள் இயங்காது. 90% கல்வி நிறுவனத்திலும் அலுவலகத்திலும் இந்த "ஃபையர் வால்' என்ற வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் தேவையில்லாத இணையதளங்கள் இயங்காது.
நன்றி: தினமணி(25-05-2019)