ஆளுநரும் அதிகாரங்களும்
அ. மாணிக்கவள்ளி கண்ணதாசன்
- - - - - - - - - - - - - - -
- ஆளுநர் குறித்து அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள விதிகளையும் தகவல்களையும் இக்கட்டுரையில் அறிவோம்.
ஆளுநர் சார்ந்த அரசியலமைப்புச் சட்ட விதிகள் (Articles Related to Governor)
- 152 முதல் 162 வரையிலான அரசியலமைப்புச் சட்ட விதிகளில் நாம் ஆளுநரைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
- அரசியலமைப்புச் சட்ட விதி 153 ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருக்க வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொறுப்பாக ஒரே ஆளுநர் இருப்பதைப் பற்றி இவ்விதி எந்தவிதமான எதிர்ப்பினையும் கூறவில்லை.
- அரசியலமைப்புச் சட்ட விதி 154 ன் படி நிர்வாக அதிகாரம் ஆளுநரிடத்தில் உள்ளது. அதாவது நேரடியாகவோ அல்லது துணை அதிகாரிகள் மூலம் மறைமுகமாகவோ நிர்வாகக் கடமையாற்றலாம். மேலும் அரசியலமைப்புச் சட்ட விதி 155 ன் படி குடியரசுத்தலைவரால் மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்படுகின்றார்.
- அரசியலமைப்புச் சட்ட விதி 156 ன் படி குடியரசுத்தலைவரின் இசைவின் மூலம் அவர் பணியில் தொடர முடியும். மேலும் ஆளுநருக்குத் தம் பணியில் தொடர விருப்பமில்லையென்றால் குடியரசுத்தலைவரிடம் ராஜினாமா கடிதத்தினைக் கொடுக்கலாம். ஆளுநர் பதவியில் அமர்ந்த நாளிலிருந்து ஐந்து வருடங்கள் பணியில் தொடர முடியும். மேலும், அவருடைய பணிக்காலம் முடிந்த பின்பும் புதிய ஆளுநர் பதவி ஏற்கும் வரை பதவியில் தொடரலாம்.
- அரசியலமைப்புச் சட்ட விதி 157 ஆனது ஆளுநராவதற்கான தகுதிகளைக் கூறுகின்றது. அத்தகுதிகள் என்னென்ன தெரியுமா? குறிப்பாக இந்திய குடிமகனாகவும் 35 வயதினை நிறைவு செய்தவராகவும் இருத்தல் வேண்டும்.
- அரசியலமைப்புச் சட்ட விதி 158 ன்படி ஆளுநர் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலோ அல்லது மாநிலச் சட்ட மன்றத்தின் இரு அவைகளிலோ உறுப்பினராக இருக்கக் கூடாது. அவ்வாறு இருப்பின் ஆளுநராக பதவி ஏற்ற நாளிலிருந்து அந்த உறுப்பினர் பதவியானது ராஜினாமா செய்ததாக கருதப்படும். மேலும், ஆளுநர் எந்தவொரு ஆதாயம் தரும் பதவிகளையும் வகிக்கக் கூடாது.
- அவர் அலுவல்ரீதியாக தாம் வசிக்கும் இல்லத்திற்கு எந்தவிதமான வாடகையும் செலுத்தத் தேவையில்லை. அவருக்கான ஊதியம் , படி மற்றும் சலுகைகள் பாராளுமன்றச் சட்டத்தால் நிர்ணயிக்கப்படும். இவை குறித்தக் குறிப்புகள் அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றது. ஒரே நபர் இரண்டு அல்லது மூன்று மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படும் பொழுது ஊதியமும் பிற படிகளும் எந்த விகிதத்தில் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதினை குடியரசுத் தலைவர் நிர்ணயம் செய்வார். மேலும் அவருடைய படிகளும் ஊதியமும் எக்காரணம் கொண்டும் பணிக்காலத்தில் குறைக்கப்படாது.
- அரசியலமைப்புச் சட்ட விதி 159 ன்படி ஆளுநர் பதவிப் பிரமாணம் மேற்கொள்ள வேண்டும். மேலும், அரசியலமைப்புச் சட்ட விதி 160 சில சிக்கலான நேரங்களில் அட்டவணையில் குறிப்பிடப்படாத சிக்கல்களுக்கும் ஆளுநர் பணிகளை ஆற்றுவதற்குக் குடியரசுத் தலைவர் பொருத்தமான ஏற்பாட்டினை செய்வார்.
- அரசியலமைப்புச் சட்ட விதி 161 ன்படி மாநில ஆளுநர் குற்றவாளிகளின் தண்டனையை ஒத்தி வைக்கவும், தள்ளி வைக்கவும் மற்றும் குறைக்கவும் உரித்தான அதிகாரத்தினைப் பெற்றிருக்கின்றார். எனினும், மரண தண்டனையை முழுமையாக மன்னிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. (இந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு).
- சட்ட மசோதாவினைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் நிறுத்தி வைக்கும் பொழுது அதற்குப் பின் ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படுவதில்லை. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் மட்டுமே தேவைப்படுகின்றது.
.
துணை நிலை ஆளுநர்கள் (Lieutenant Govenor)
- துணை நிலை ஆளுநர்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார், டெல்லி, புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களில் நியமிக்கப்படுகின்றார்கள். பெரும்பாலும் அவர்கள் மத்திய அல்லது மாநில அரசுகளில் நிர்வாக மற்றும் நீதித்துறையில் உயர்பதவி வகித்தவர்கள் ஆவர்.
.
ஆளுநர்களின் மாற்றம்
- மத்தியில் ஆட்சி மாறும் பொழுது ஆளுநர்கள் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றப்படக் கூடாது என்று 2010 ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் கூறியது. தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவானது ஆளுநரின் நடத்தையில் ஏற்பட்ட மாறுபாடு நிரூபிக்கப்பட்டமை மற்றும் பிற ஒழுங்கீனங்களுக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் ஆளுநரை மாற்றக் கூடாது என்று கூறியது.
.
சர்க்காரியா குழு (Sarkaria Commission)
- மத்திய மாநில உறவுகளை ஆராய 1983 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்க்காரியா குழு இந்திரா காந்தி அவர்களால் அமைக்கப்பட்டது. அக்குழுவானது ஆளுநர் குறித்து அளித்தப் பரிந்துரைகளுள் முக்கியமானவற்றை நாம் அறிவோமா!
- வெளி மாநிலத்தினைச் சார்ந்தவரே ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படல் வேண்டும்.
- அண்மைக்காலம் வரை அரசியலில் ஈடுபட்டவரை நியமித்தலைத் தவிர்த்தல் வேண்டும்.
- ஆளுநரை நியமிப்பதற்கு முன் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோர் ஆளுநரின் அவசியம் சார்ந்த மாநிலத்தின் முதல்வரைக் கலந்தாலோசிக்க வேண்டும்
- ஆளுநர் பதவியிலிருந்து விலக்கப்பட்டாலோ அல்லது மாற்றப்பட்டாலோ அதற்கான காரணங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
- ஆளுநர் பதவியை வகிக்கின்றவர் ஆதாயம் தரும் எந்தப் பதவியையும் ஏற்கக்கூடாது என்ற மரபை உருவாக்க வேண்டும்.
- கோப்புகள் பற்றி விளக்கம் பெற ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
இவையே ஆளுநர் குறித்த சர்க்காரியா குழுவின் முக்கிய பரிந்துரைகள் ஆகும்.
.
நிர்வாக அதிகாரங்கள் (Executive Powers)
- ஒரு மாநிலத்தின் அனைத்து நிர்வாக அதிகாரங்களும் ஆளுநரிடத்திலேயே உள்ளன. ஆளுநர் மாநிலத்தின் முதல்வரை நியமிக்கின்றார். முதல்வரின் ஆலோசனைப்படி பிற அமைச்சர்களையும் நியமித்து அவர்களுக்கான துறைகளையும் ஒதுக்குகின்றார். மாநிலத்தின் ஆளுநர்களுக்கும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களுக்கும் ஏறக்குறைய மத்தியில் குடியரசுத் தலைவருக்கு உள்ளது போன்ற ஒத்த அதிகாரங்களும் பணிகளும் உள்ளன.
- ஆளுநர் பெயரளவிற்கே தலைவராக செயல்படுகின்றார். உண்மையான அதிகாரம் மாநில முதல்வரிடமும் அமைச்சரவைக் குழுவிடமே உள்ளது. துணை நிலை ஆளுநர்களும், ஆளுநர்களும் குடியரசுத்தலைவரால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுகின்றனர். மாநிலத்தின் நிர்வாகத்தில் அரசியலமைப்புச் சட்டத்தினைப் பாதுகாப்பது ஆளுநரின் அடிப்படை கடமையாகும்.
- மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரையும் உறுப்பினர்களையும் ஆளுநர் நியமிக்கின்றார். மேலும் அட்வகேட் ஜெனரல் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளையும் நியமிக்கின்றார். குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமிக்கும் பொழுது ஆளுநரையும் கலந்து ஆலோசிக்கின்றார்.
.
சட்டமியற்றும் அதிகாரங்கள் (Legislative Powers)
- ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் ஒவ்வொரு வருடத்தின் முதல் கூட்டத்தொடருக்கு முன்பும் ஆளுநர் சட்ட மன்றத்தில் உரையாற்றுகின்றார். இந்த உரையானது அரசாங்கத்தின் புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துகின்றது. மேலும் மாநிலச் சட்டமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதோடு மட்டுமில்லாமல் ஒத்தி வைக்கும் அதிகாரமும் பெற்றுள்ளார். மேலும் சட்டமன்றத்தினைக் கலைக்கும் அதிகாரமும் பெற்றுள்ளார். ஆளுநரின் அனுமதிக்குப் பிறகே எந்தவொரு மசோதாவும் சட்டமாக மாற இயலும். பண மசோதாவினைத் தவிர மற்ற மசோதாக்களை சட்ட மன்றத்தின் மறு பரிசீலனைக்கு அனுப்ப முடியும். எனினும், மாநிலச் சட்ட மன்றம் மீண்டும் திருப்பி அனுப்பும் பொழுது ஆளுநர் அனுமதி அளித்தே ஆக வேண்டும்.
- மாநில சட்ட மன்றம் நடப்பில் இல்லாத பொழுது , சட்டம் தேவையென கருதும் பட்சத்தில் ஆளுநர் அவசரச்சட்டங்களைப் பிறப்பிக்க முடியும். இந்த அரசாணைகள் அடுத்த கூட்டத்தொடரின் போது சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் ஆறு வாரங்கள் மட்டுமே அந்த அவசரச்சட்டமானது அமலில் இருக்கும்.
- தேர்ந்தெடுக்கப்பட்டச் சட்ட மன்ற உறுப்பினரை அரசியலமைப்புச் சட்ட விதி 191ன் படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனத் தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கும் பொழுது அரசியலமைப்புச் சட்ட விதி 192ன் படி ஆளுநர் அவரை தகுதி நீக்கம் செய்கின்றார். மேலும், அரசியலமைப்புச் சட்ட விதிகள் 165 மற்றும் 177 ன்படி மாநில கீழவை மற்றும் மேலவையில் சட்டத்திற்கு மாறாக எந்தச் செயல்பாடுகளும் நடைபெறுகின்றதா என்று அறிக்கை அளிக்கக் கூறுகின்றார்.
.
நிதி அதிகாரங்கள் (Financial Powers)
- மாநில வரவு செலவு அறிக்கை எனப்படும் பட்ஜெட்டினை மாநிலச் சட்டமன்றம் முன் சமர்ப்பிக்கின்றார். எந்த மானியத்தின் மீதான கோரிக்கையும் ஆளுநரின் பரிந்துரை இல்லாமல் எழாது. மேலும், திடீரென்று ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க அவசரகால செலவின நிதியிலிருந்து நிதியளிக்க அனுமதி அளிக்கின்றார்.
.
முடிவெடுக்கும் அதிகாரங்கள்
- எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத பொழுது ஆளுநர் தன் முடிவின் படி முதலமைச்சர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து பெரும்பான்மையினை நிரூபிக்கும் வாய்ப்பளிக்கின்றார். தன்னுடைய விருப்பத்தின் படி குடியரசுத் தலைவருக்கு மாநிலச் செயல்பாடு குறித்து அறிக்கை அளிக்கின்றார் அல்லது குடியரசுத் தலைவரின் வழிகாட்டுதலின்படி அறிக்கை அளிக்கின்றார். அவசர நிலைப் பிரகடனத்தின் பொழுது அரசியலமைப்புச் சட்ட விதி 353 ன் படி குடியரசுத் தலைவரால் அனுமதிக்கப்படும் பொழுது மட்டும் அமைச்சரவைக் குழுவின் ஆலோசனையைப் புறக்கணிக்க முடியும்.
- அரசியலமைப்புச் சட்ட விதிகள் 160, 356, 357 ன் படி குடியரசுத் தலைவர் அனுமதித்தால் மட்டும் அன்றி சிக்கலான சூழ்நிலைகளில் ஆளுநருக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. அரசியலமைப்புச் சட்டம் பகுதி 6 ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் பொறுப்பில் இருக்கும் பொழுது அமைச்சரவைக் குழுவின் அறிவுரையின்றி ஆளுநரால் எந்த முடிவும் எடுக்க முடியாது.
- அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநருக்கான அதிகாரங்கள் கூறப்பட்டிருந்தாலும், அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும் என்ற விதி எல்லா அதிகாரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றது.
.
- - - - - - - - - - - - - - -